
தயாரிப்பாளர் – ஜி. அருள்குமார்
கதை & இயக்கம் – தினேஷ் இலெட்சுமணன்
இசை – பரத் ஆசிவகன்
படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர்
ஒளிப்பதிவு – சரவணன் அபிமன்யு
கலை இயக்கம் – அருண்சங்கர் துரை
சண்டை – காளி
மக்கள் தொடர்பு – யுவராஜ்
காரில் சென்று கொண்டிருக்கும் நபர் ஒருவரை பைக்கில் வரும் மர்ம நபர் ஒருவர் மறித்து அவரை தாக்குகிறார். பலமான இரும்பு கம்பி கொண்டு அந்த நபரை தாக்கி அவரை கொலை செய்து விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறார். கொலை செய்த நபர் கருப்பு உடை அணிந்து முகம் தெரியா அளவிற்கு மாஸ்க் அணிந்து இருக்கிறார்.
இந்த கொலை வழக்கை விசாரிக்க வருகிறார் இன்ஸ்பெக்டராக வரும் அர்ஜூன். வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கையில், இது விபத்து அல்ல கொலை என்பதை உறுதி செய்கிறார்.
தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்கும் போது, அது வெவ்வேறு கோணங்களில் பயணப்படுகிறது. மற்றொருபுறம், ஸ்பெஷல் குழந்தைகள் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், அவரது காதல் என ஒரு புறம் நகர்கிறது.
இந்த கொலை வழக்கிற்குள் ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி வந்தார்.? நடக்கும் கொலைக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்.? எதனால் இந்த கொலைகள் அரங்கேறுகிறது உள்ளிட்ட கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக ஃபிட்டான ஒரு கதாபாத்திரமாக தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார் அர்ஜூன். வழக்கமான விசாரணை பாணி, தனக்கே உரித்தான உடல் மொழியில், தனக்கே உரித்தான ஸ்டைலில் விசாரணை நடத்தும் விதம் என மகுடபதி கேரக்டரை சரியாக செய்து முடித்திருக்கிறார்.

முக்கியமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். மற்ற படத்தை விட, இப்படத்தில் ஆக்ஷன் காட்சியில் அதிரடி காட்டியிருக்கிறார். அதிலும் குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் நன்றாகவே தனது ஆக்ஷன் திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்.
மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு, ராம் குமார், தங்கதுரை, பேபி அனிகா, ப்ராங்க் ஸ்டார் ராகுல் என படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்திருக்கின்றனர்.
இன்னும் எத்தனை காலத்திற்கு தான் மாற்றுத்திறனாளி குழந்தைகளை வைத்து இப்படி ஒரு கதை தமிழ் சினிமாவில் சுற்றி சுற்றி வருமோ தெரியவில்லை. ட்விஸ்ட் வைக்கிறேன் என்ற பெயரில் க்ளைமாக்ஸில் வைக்கப்பட்ட காட்சி துளியளவும் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.
அதுமட்டுமல்லாமல், ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டது இந்த கொலையை செய்து கொண்டிருப்பது யார் என்று.?
திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். கொலையை யார் செய்தார் என்ற நோக்கில் செல்லும் முதல் பாதியின் கதை நகர்வு அருமையாக இருந்தது. பரபரவென சென்று, இரண்டாம் பாதியில் இதற்காகத் தான் கொலைகள் நடந்தது என்று சொல்லும் போது கதை ஆயிரத்தில் ஒரு படமாக வந்து நின்றுவிட்டது.
பரத் ஆசிவகன் இசையில் பின்னணி இசையில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. கழுகு சிலை கொண்ட அந்த பில்டிங்கை காட்சிப்படுத்திய விதம் ஆச்சர்யம்.
லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு ஷார்ப்.





