Spotlightவிமர்சனங்கள்

கிங்ஸ்டன் – விமர்சனம் 3/5

றிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார், திவ்ய பாரதி, சேத்தன், அழகம் பெருமாள், குமரவேல், சாபுமோன், ஆண்டனி, ராஜேஷ் பாலசந்திரன், அருணாசலேஸ்வரன், ப்ரவீன், ஃப்யர் கார்த்திக் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று திரைகண்டிருக்கும் திரைப்படம் தான் “கிங்ஸ்டன்”.

ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கோகுல் பினாய். இசையமைத்திருக்கிறார் ஜிவி பிரகாஷ்குமார்.
படத்தொகுப்பு செய்திருக்கிறார் சான் லோகேஷ்.

தயாரிப்பாளர்கள்: ஜி வி பிரகாஷ்குமார், உமேஷ் கே ஆர் பன்சால் மற்றும் பவானி ஸ்ரீ.

இந்தியாவின் முதல் பேண்டசி அட்வெஞ்சர் திரைப்படமாக உருவாகியிருக்கிறது கிங்ஸ்டன்.

கதைக்குள் பயணித்துவிடலாம்…

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூவத்தூர் என்ற கிராமமே படத்திற்கான கதைக்களம். 1980களில் கதை ஆரம்பிக்கிறது. இக்கிராமத்தில் இருப்பவர்களுக்கு மீன்பிடி தொழிலும் கடலிலிருந்து கடல் அட்டை எடுப்பதுமே இவர்களின் மூல தொழிலாக இருக்கிறது.

இந்நிலையில், கடலுக்குச் சென்று மீன்பிடிப்பவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணித்து, கரை ஒதுங்கின்றனர்.

இதனால் கிராமமக்களிடம் அழுகுரல் மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கிறது. மீன்பிடிப்பவர்கள் மட்டுமல்லாது ஊரில் இருக்கும் பெண்களும் அவ்வப்போது மர்மமான முறையில் இறந்து கடற்கரையில் பிணமாக கிடக்கின்றனர். இதற்கெல்லாம் கடலுக்கு இருக்கும் ஒரு அமானுஷ்யம் தான் என்று கிராம மக்கள் நம்புகிறார்கள்.

இதனால் தூவத்தூர் கிராமம் மீன்பிடிப்பதற்கு உகந்த கிராமம் இல்லை என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்படுகிறது.

கதை 2024க்கு நகர, தாமஸ் என்ற கடத்தல்காரனுக்கு அனைத்து வேலைகளையும் செய்து தருகிறார் தூவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கிங்ஸ்டன் (ஜிவி பிரகாஷ்). தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை எல்லை கடந்து சென்று வேறு ஒரு நாட்டிற்கு கடத்திச் சென்று ஒப்படைக்கும் வேலையை செய்து வருகிறார் கிங்ஸ்டன்.

இந்த நேரத்தில் கடல் அட்டைக்குள் போதைப்பொருளை வைத்து கடத்துவதை கண்ட ஜி வி பிரகாஷ், தாமஸை எதிர்க்கிறார்.

மேலும், தனது கிராம எல்லைக்குள் இருக்கும் கடலுக்குள் சென்று அங்கு அமானுஷ்யம் என்ற ஒன்று இல்லை என்று நிரூபிக்க தனது நண்பர்களோடு கடலுக்குச் செல்கிறார் ஜி வி பிரகாஷ். உடன் ஜி வி பிரகாஷின் காதலியான திவ்ய பாரதியும் செல்கிறார்.

அந்த கடலுக்குள் இருக்கும் அமானுஷ்யம் என்ன.?? மக்களின் பயத்தை ஜிவி பிரகாஷ் & டீம் போக்கினார்களா.?? உள்ளிட்ட கேள்விகளுக்கெல்லாம் விடையை இரண்டாம் பாதியில் வைத்திருக்கிறார் இயக்குனர்.

கதையின் நாயகனாக கிங்ஸ்டன் ஜி வி பிரகாஷ்குமார் நடித்திருக்கிறார். ஒட்டுமொத்த கதையையும் தனி ஒருவனாக தோளில் சுமந்து சென்றிருக்கிறார் ஜி வி பிரகாஷ். பல இடங்களில் கைதட்டல் கொடுக்கும் நடிப்பைக் கொடுத்தாலும், ஒரு சில இடத்தில் இன்னும் சற்று பெட்டரா கொடுக்கலாமே என்று ஆங்காங்கே கூறவும் வைக்கிறார் ஜிவி.

வழக்கமாக வந்து செல்லும் கதாபாத்திரமே திவ்ய பாரதிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. கதையில் பெரிதான எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தும் ரோல் திவ்ய பாரதிக்கு கொடுக்கப்படவில்லை.

ஜி வி பிரகாஷின் நண்பர்களாக நடித்த அனைவருமே தங்களது கதாபாத்திரத்தை அளவாக செய்து முடித்திருக்கிறார்கள். தாமஸ் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த சாபுமோன் தனது வில்லத்தனத்தை மாஸாக செய்து முடித்திருக்கிறார். தங்களது சீனியர் நடிப்பை அளவாக கொடுத்து அசத்தியிருக்கிறார் சேத்தனும் அழகம் பெருமாளும்.

கிங்ஸ்டன் படத்தினை தமிழ் சினிமாவில் இது ஒரு புதுமுயற்சியாக பார்க்கலாம். ஹாலிவுட் படங்களையே கொண்டாடி வரும் நாம், நம் மண்ணிலேயே குறைந்த பட்ஜெட்டில் இப்படியொரு தரமான படத்தை கொடுக்கமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறது கிங்ஸ்டன் படக்குழு.

கோகுல் பினாயின் ஒளிப்பதிவு வெளிச்சத்தை சரியாக கொடுத்திருக்கிறது. காட்சிகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ஜி வி பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இரண்டும் படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. கிராமத்து இளைஞர் ஒருவர் இறந்து கிடக்கும் இடத்தில், முதல் குத்து பாடல் அந்த இடத்தில் தேவை இல்லை என்று தோன்றியது.

சின்ன சின்ன லாஜிக் ஓட்டைகள் ஆங்காங்கே தென்பட்டது. கதையை இன்னும் சற்று எளிமையாக்கிருக்கலாமோ என்றும் கூறத் தோன்றியது. அனிமேஷன் & வி எஃப் எக்ஸ் படத்தில் மிகப்பெரும் பங்காற்றியிருக்கிறது.

இருந்தாலும் எடுத்த முயற்சிக்காக படக்குழுவினரை வெகுவாகவே பாராட்டலாம்..

கிங்ஸ்டன் – ஹாலிவுட் தரம்

Facebook Comments

Related Articles

Back to top button