
ஜோஸ்வா சேதுராமன் எழுத்து மற்றும் இயக்கத்தில் லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா, ராஜீவ் காந்தி, தரணி, வைரபாலன், சுதேஷ் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி இன்று திரைகண்டிருக்கும் திரைப்படம் தான் ஜென்டில்வுமன்.
ஒளிப்பதிவு செய்திருக்கிறார் காத்தவராயன். இசையமைத்திருக்கிறார் கோவிந்த் வசந்தா.
படத்தொகுப்பு செய்திருக்கிறார் இளையராஜா சேகர்
தயாரித்திருக்கிறார்கள் கோமலா ஹரி, ஹரி பாஸ்கரன், பி என் நரேந்திர குமார் & ல்லியோ லோகனே நேதாஜி
இணைத் தயாரிப்பு தினேஷ்குமார்.
கதைக்குள் பயணித்துவிடலாம்…
தனது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணான லிஜோமோல் ஜோஸை திருமணம் செய்து, தான் பணிபுரியும் சென்னைக்கு அழைத்து வருகிறார் ஹரி கிருஷ்ணன்.
எல் ஐ சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் ஹரி கிருஷ்ணன். சென்னையில் ஒரு அபார்ட்மெண்டில் தனது மனைவி லிஜோமோலுடன் வாழ்கிறார் ஹரி. நேரத்திற்கு வீட்டிற்கு வருவதும் நேரத்திற்கு அலுவலகத்திற்கு செல்வதுமாக ஹரிகிருஷ்ணன் முழுநேர நல்லதொரு குடும்பஸ்தனாக இருந்து வருகிறார்.
இல்லற வாழ்க்கை சுகமாக மூன்று மாதங்களை கடக்கிறது.
தனது தோழியின் சகோதரியான தரணி ஊரில் இருந்து இண்டர்வியூவிற்கு வருவதாகவும் இரண்டு நாட்கள் வீட்டில் இருக்கப்போவதாகவும் தனது கணவனிடம் லிஜோ மோல் கூற, ஹரியும் அதற்கு சம்மதம் தெரிவிக்கிறார்.
தரணி நேர்முகத்தேர்விற்காக சென்னைக்கு வருகிறார். இச்சமயத்தில், லிஜோமோல் கோவிலுக்குச் செல்கிறார்.. வீட்டில் இருக்கும் தரணியிடம் நெருங்கி வருகிறார் ஹரிகிருஷ்ணன்.
அப்போது, அங்கு ஒரு சம்பவம் நடக்கிறது. அச்சம்பவமே கதையின் போக்கை வேறு ஒரு பக்கம் திசை திருப்பிவிடுகிறது.
அது என்ன சம்பவம் என்று கூறினால், படத்தின் மீதான சுவாரஸ்யம் குறைந்துவிடும் என்பதால், அதனை திரையரங்கில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அச்சம்பவத்திற்குப் பின் எண்ட்ரீ கொடுக்கிறார் லாஸ்லியா.
லாஸ்லியா யார்.?? அச்சம்பவத்திற்குப் பின் லிஜோமோலின் வாழ்க்கை என்னவானது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை வைத்திருக்கிறார் இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன்.
தனது கதை தேர்வில் நன்றாகவே தேர்ச்சி பெற்றிருக்கிறார் நாயகி லிஜோமோல். மற்ற படங்களில் வருவது போன்று பெரிய பெரிய ஹீரோக்களோடு வந்து செல்வது போன்ற படங்களாக இல்லாமல், தனக்கான கதாபாத்திர பங்களிப்பு அதிகமாக கொடுக்கும்படியான கதையை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் லிஜோமோல்.,
இப்படத்திலும் லிஜோமோல் அதையே தெளிவாக செய்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கதை முழுவதுமே இவர் மீதே பயணப்படுகிறது. படத்தின் அநேக காட்சி வீட்டின் உள்ளேயே நடைபெறுவதால், அதற்குள் நாம் என்ன மாதிரியான நடிப்பைக் கொடுக்க வேண்டும் என்றறிந்து அதை அழகாக கொடுத்திருக்கிறார் லிஜோமோல்.,
வந்து செல்லும் கதாபாத்திரமாக இல்லாமல், ஓரிரு இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்யக்கூடிய கதாபாத்திரம் தான் லாஸ்லியாவுடையது. அதை சிறப்பாக செய்தும் முடித்திருக்கிறார். தனக்கான காதலை ஞாயப்படுத்தி பேசினாலும், அது தவறுதானே இந்த தமிழகத்தில் லாஸ்லியா.?
ஹரி கிருஷ்ணனும் தனது பங்களிப்பை அளவோடு கொடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் இப்படியும் ஒருவரா என்பதில் ஆரம்பித்து இப்படியும் ஒருவனா என்று முடியும் வரையிலான தனது கதாபாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார் ஹரி.
கட்சி பிரமுகரும் பேச்சாளருமான ராஜீவ் காந்தி, இப்படத்தில் போலீஸாக நடித்திருக்கிறார். மிகவும் இயல்பான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் ராஜீவ் காந்த். ஆங்காங்கே சிரிக்கவும் வைத்திருக்கிறார் ராஜீவ் காந்தி.
தரணி, வைரபாலன், சுதேஷ் உள்ளிட்டவர்களும் தங்களது கேரக்டர்களுக்கு வலு சேர்க்கும்படியான நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர்.
சாதாரணமாக சென்று கொண்டிருந்த கதையானது சட்டென வேறு ஒரு தளத்திற்கு சென்று நம்மை சீட்டின் நுனியில் அமர வைத்துவிட்டார் இயக்குனர்.
மிகவும் ரிஸ்க்கான ஒரு கதையை எடுத்து அதை திறம்பட கையாண்டு தனது பக்க பார்வையை மிக தெளிவாக காட்சிப்படுத்தியும் இருக்கிறார் இயக்குனர். இப்படி இருக்கும் ஆண்களுக்கு இப்படியும் ஒரு தண்டனை கொடுக்கலாம் என்பதில் சில முரண்பாடுகள் எட்டிப் பார்த்தாலும் தன் பங்கிற்கு அதனை ஞாயப்படுத்தி தனது கோட்டில் பயணம் செய்திருக்கிறார் இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன்.
சம்பவம் ஒன்றை செய்துவிட்டு எப்படி இவ்வளவு ஈசியாக ஒரு பெண் கடந்து செல்ல முடியும்.? என்பதில் ஆரம்பித்து ஆங்காங்கே ஒரு சில கேள்விகளை எட்டிப் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை.
கோவிந்த் வசந்தாவின் இசை படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. காத்தவராயனின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகூற காட்டியிருக்கிறது.
சரியான போதுமான அளவிற்கு படத்தினை கொடுத்ததில் படத்தொகுப்பின் பங்கு என்னவென்பது தெரிகிறது.
ஜென்டில்வுமன் – இயக்குனரின் பார்வை…