
இயக்குனர் எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முத்துநகர் படுகொலை’. உலகத்தில் எங்கும் நடந்திடாத ஒரு கொடூர நிகழ்வாக கடந்த 2018 மே-22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் 100வது நாளில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடும் அதில் கொடூரமாக 13 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்ட நிகழ்வும் தான்.
இந்த படுகொலை தமிழகத்தை மட்டுமல்லாது உலகத்தையே குலுக்கியது. எதற்காக அந்த படுகொலை நிகழ்த்தப்பட்டது.? அதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன.? என்பதை விளக்கியிருக்கும் படம் தான் “முத்துநகர் படுகொலை” .
நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் தருவை டாக்கீஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகியிருக்கிறது.
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் தனியார் காப்பர் நிறுவனம் தான் “ஸ்டெர்லைட் காப்பர்”. இந்த தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான டன் காப்பர் பிரித்தெடுக்கப்பட்டு வந்தது. அரசு கொடுத்த அளவை மீறி அளவுக்கு அதிகமான அளவில் காப்பர் எடுக்கப்பட்டு வந்தது. இதன் கழிவுகளால், அத்தொழிற்சாலை அமைந்திருக்கும் இடங்களை சுற்றி சில பல கிலோமீட்டர் தொலைவு வரையிலும், ஒரு புல் கூட முளைக்காத தரிசு காடாக மாறி காட்சியளித்து வருகிறது.
இயற்கை சூழலும் பெரிதாக பாதிக்கப்பட்டது. கால்நடைகளை வளர்க்க முடியாத சூழலும் நிலவியது. இதனால், அத்தொழிற்சாலையை சுற்றியுள்ள மக்கள், வாழ்வாதாரத்தை அழிக்கும் இத்தொழிற்சாலையை அரசு உடனடியாக மூட வேண்டும் என்று தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
சிறு கிராமத்தில் தொடங்கப்பட்ட இப்போராட்டம், தீப்பொறியாக மாறி பெருந்திரள் போராட்டமாக மாறியது. தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இப்போராட்டம் வெடித்தது.
போராட்டத்தின் 100வது நாளாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து மனு கொடுக்கும் நிகழ்விற்கு போராட்டக் குழு முடிவெடுத்திருந்தது. அதற்காக, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை நோக்கி பயணித்தனர்.
அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் கைவசம் இருந்த காவல்துறை மக்களை தடுத்தி நிறுத்தினர். பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை முன்னெடுத்தது காவல்துறை.
அவர்கள் மீது, கண்ணீர் புகை குண்டு வீசி, தடியடி நடத்தி பேரணியை கலைக்க முற்பட்டபோது, எமனாக வந்தது அந்த துப்பாக்கி. போலீஸாரின் கையில் இருந்த அந்த துப்பாக்கி, பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக பாய்ந்தது. அதில் இருந்த தோட்டாக்கள் பொதுமக்களின் நெஞ்சிலும், நெற்றியிலும், வாயிலும் பாய்ந்தது.
தனக்கான விடியலுக்காக மட்டுமல்லாது மக்களின் விடியலுக்காக வந்திருந்த சுமார் 13 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பெரும் கோபத்தையும் உண்டாக்கியது. சமூக விரோதிகள் தான் இச்சம்பவத்திற்கு காரணம் என அன்றைய அரசாங்கம் சட்டமன்றத்தில் தெரிவித்தாலும், உயிர்நீத்த தியாகிகளுக்கு ஈடாக தமிழக அரசால் தற்காலிகமாக வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையை மூடப்பட்டது.
இன்னமும் நிரந்தரமாக அத்தொழிற்சாலை மூடப்படவில்லை என்பது தனி கதையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இப்படுகொலைக்கு காரணம் யார்.? யாரால் துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.? இதன் வழக்கு என்ன நிலையில் உள்ளது.? என்பதை விரிவாக விளக்கியிருக்கும் படம் தான் “முத்துநகர் படுகொலை”.
படுகொலை செய்யப்பட்ட 13 பேர் குடும்பத்தினர்களின் வலியையும் வாழ்க்கையும் கண்முன்னே கொண்டு வந்து மனதை கனக்க வைத்திருக்கிறார் இயக்குனர். விழும் ஒவ்வொரு துப்பாகிக் குண்டும் நம் மீது வந்து விழும் போல் மன வலியை கொடுத்து கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க விட்டார் இயக்குனர் எம் எஸ் ராஜ்.
இந்நிகழ்வில் படுகாயம் அடைந்த பலரின் வாழ்க்கை இன்னமும் கேள்விக்குறியாக இருக்கிறது.
படுகொலை நிகழ்ந்து வருடங்கள் சில சென்றாலும், மக்கள் இதை என்றும் மறவாது இதற்கு காரணமானவர்கள் மீது தக்க தண்டனை கிடைக்கும்வரை அதற்கான முன்னெடுப்புகளை மக்களும் சேர்ந்து எடுக்க வேண்டும் என்று, முதல் முன்னெடுப்பாக இப்படத்தை இயக்கிய இயக்குனர் எம் எஸ் ராஜ் அவர்களோடு நாமும் துணை நிற்போம்…
முத்துநகர் படுகொலை – வடு கொடுத்த வலி..





