Spotlightசினிமாவிமர்சனங்கள்

டக்கர் – விமர்சனம் 3/5

கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் மற்றும் திவ்யன்ஷா யோகி பாபு, அபிமன்யு சிங், விக்னேஷ்காந்த் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளியான திரைப்படம் தான் டக்கர்.

கதைப்படி,

தன் வாழ்க்கையை தான் தான் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பணக்கார வீட்டுப் பெண் தான் நாயகி திவ்யன்ஷா. அதிகமான சொத்து கொண்ட ஒருவருக்கு தனது பெண்ணைக் கொடுக்க திட்டமிடுகிறார் திவ்யன்ஷாவின் தந்தை.

இந்த திருமணத்தில் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார் திவ்யன்ஷா. ஆடம்பர வாழ்க்கையை வெறுத்து நிற்கிறார் திவ்யன்ஷா. இவரை கடத்தி பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டுகிறார் ரெளடியாக வரும் அபிமன்யு சிங்.

பணம் தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது என்று, பணத்திற்காக ஓடிக் கொண்டே இருக்கும் கதாபாத்திரம் தான் சித்தார்த் உடையது.

ஒருகட்டத்தில், பணத்திற்காக ஓடும் சித்தார்த்தும் பணமே வேண்டாம் என்று ஓடும் திவ்யன்ஷாவும் காரில் சந்தித்துக் கொள்ள இவர்களது பயணம் “பையா” படம் போல் செல்கிறது.

திவ்யன்ஷாவை சுற்றி நடக்கும் பிரச்சனைகளை சித்தார்த் எப்படி எதிர்கொண்டார்.? இருவருக்கும் காதல் உண்டானதா.? என்பதே படத்தின் மீதிக் கதை.

சில வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட படம் என்பதால், சித்தார்த்தின் தோற்றம் சற்று வித்தியாசம் கொள்கிறது. ஆக்‌ஷன் காட்சியில் அதிரடி காட்டியிருக்கிறார். இந்த படத்திற்கான ஏற்ற கதாபாத்திரமாக தான் இருக்கிறார் சித்தார்த். எதையும் எதிர் கொள்ள தைரியம் இல்லாதவராக இருந்து, சாகும் வரை சென்ற ஒரு இளைஞன் எதற்கும் துணிந்து நிற்பான் என்ற ஆக்‌ஷன் கதாபாத்திரத்தை நச் என்று செய்து முடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் மன்னனாக ஜொலித்திருக்கிறார் சித்தார்த்.

காட்சிகளுக்கு காட்சி அழகு ஏறிக் கொண்டே சென்றது திவ்யன்ஷாவிற்கு மட்டுமே. தனது அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை இருக்கையில் கட்டிப் போட்டுவிட்டார் திவ்யன்ஷா.

தனது படுக்கையறையில் இருந்து எழுந்து வந்து காரில் அமரும் காட்சியைக் கண் இமைக்காமல் கண்ட ரசிகர்கள் பலர். படத்தின் மிகப்பெரும் பலமே நாயகி திவ்யன்ஷா தான்.

சில படங்களில் கண்ட காட்சிகள் தான் அதிகம். பையா படத்தின் கதை உள்ளே வந்து செல்வதால் கதையில் பெரிதான ஒரு ஈர்ப்பு எட்டவில்லை.

வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிதாக கைகொடுத்திருக்கிறது. காட்சிகள் ஒவ்வொன்றையும் அழகூற கொடுத்திருக்கிறார்.

நிவாஸ் கே பிரசன்னாவின் நிரா பாடல் ரசிக்க வைத்திருக்கிறது. பின்னணி இசை கதையோடு ஓட்டம் பிடித்திருக்கிறது.

யோகிபாபுவின் காமெடி ஒரு சில இடங்களில் ரசிக்க வைத்தாலும், பல இடங்களில் எரிச்சலைத் தான் வரவைத்தது..

தினேஷ் காசியின் ஆக்‌ஷன் ரசிக்க வைத்தது. குறிப்பாக பாலத்தின் மீதான ஸ்டண்ட் காட்சி.

வழக்கமான ஒரு படம் தான் என்று கடந்து செல்ல முடியா அளவிற்கான படமாக கொடுத்திருப்பதில் சற்று மகிழ்ச்சியெ.

டக்கர் – ஜாலி ரைட்.. 

Facebook Comments

Related Articles

Back to top button