Spotlightசினிமா

என் படத்தை எப்படி கிழித்தாலும் பரவாயில்லை…சவால் விடும் ஜெய்!

நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள். இந்த சூழல் நிச்சயம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தாது என்று கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார், ஆந்திரா மெஸ் பட இயக்குநர் ஜெய்.

சினிமாவிற்கு இதுவரை பரீட்சயமில்லாத கோணத்தில் கதை சொல்லப்பட்டிருக்கும் படம் “ஆந்திரா மெஸ்”. நான்கு திருடர்கள், ஒரு முன்னாள் ஜமீன்தார், அவருடைய இளம் மனைவி.. இவர்களின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கிற சம்பவங்களின் தொகுப்பை மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கும் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், பிரபல விளம்பரப் பட இயக்குநர் ஜெய்.

“ஷோ போட் ஸ்டுடியோஸ்” சார்பில் நிர்மல் கே.பாலா தயாரித்திருக்கும் இப்படத்தின் கதாநாயகனாக “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, “ரிச்சி” போன்ற படங்களில் நடித்த ராஜ் பரத், கதாநாயகிகளாக தேஜஸ்வினி, பூஜா தேவரியா நடித்திருக்கின்றனர். இவர்களுடன் புகழ்பெற்ற ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படம் பற்றி சமீபத்தில் பேசிய இயக்குநர் ஜெய், தமிழ் சினிமா சூழலில் இருக்கிற வியாபார சிக்கல்களை கொஞ்சம் கடுமையாகவே சாடியுள்ளார். “ஒரே படத்தைப் பற்றி இரண்டாவது முறையாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இருந்தாலும் பேசித்தான் ஆக வேண்டும். இந்தப் படத்திற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறோம். ஒரு முதல்பட இயக்குநரான நான் சொன்ன இந்தக் கதையை நம்பி, நான் நினைத்த மாதிரி எடுத்து முடிக்கிற வரை எனக்கு பலமாக இருந்த தயாரிப்பாளர் நிர்மல் கே.பாலாவிற்கு முதலில் என் நன்றிகள். அதேபோல் இத்தனை இடர்களிலும் என்னோடு நிற்கிற என் படக்குழுவினர் அத்தனை பேருக்கும் எனது நன்றிகள். தமிழ் சினிமா சூழல் என்பது வியாபாரத்தின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதை தாண்டி படங்கள் எடுப்பது என்பது மிகவும் சவாலானதாக இருக்கிறது. நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள். இந்த சூழல் நிச்சயம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தாது. இந்தப் படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது திரைக்கு வருகிறது. இப்படத்திற்கான விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், யார் எப்படி கிழித்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். எது எப்படியாக இருந்தாலும் அத்தனைக்கும் நான் மட்டும் தான் பொறுப்பு” என்று பேசியுள்ளார்.

ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் பேசும்போது, “இயக்குநர் ஜெய், விமர்சனங்களில் எப்படிக் கிழித்தாலும் ஏற்றுக் கொள்வதாக சொன்னார். ஆனால், அதற்கெல்லாம் “ஆந்திரா மெஸ்” வேலை வைக்காது. நிச்சயம் இந்தப் படத்தை எல்லோரும் தூக்கி நிறுத்துவார்கள். பத்திரிக்கையாளர்களோடு 25 வருட பழக்கம் எனக்குண்டு. அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டவர்கள் தான் இன்று முன்னணி இயக்குநர்களாக தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் அந்த வரிசையில் ஜெய்யையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது” என்று பேசினார்

Facebook Comments

Related Articles

Back to top button