
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க, ராஜு முருகன் இயக்கத்தில் 2016ல் வெளிவந்து தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்ற படம் ‘ஜோக்கர்’. தற்போது மீண்டும் இதே கூட்டணி ‘ஜப்பான்’ மூலம் மீண்டும் இணைகிறது.
தொடர்ந்து 6-வது முறையாக ’ஜப்பான்’ மூலம் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் நாயகனாகியிருக்கிறார் கார்த்தி. இது அவரது 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் முதல் முறையாக இப்படத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கு நடிகர் சுனில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
25 வருடங்களாகத் தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராகவும், ‘கோலி சோடா’, ‘கடுகு’ ஆகியத் திரைப்படங்கள் மூலம் இயக்குநராகவும், தனக்கென ஒரு பிரத்யேக அடையாளத்தை உருவாக்கியுள்ள விஜய் மில்டன், ‘ஜப்பான்’ திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
2020ஆம் ஆண்டின் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை வென்ற ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
மாநகரம், கைதி, டாணாக்காரன், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்புப் பொறுப்பினை ஏற்றுள்ளார். தேசிய விருது வென்ற வினீஷ் மங்கலான் இந்தப் படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.
‘ஜப்பான்’ படத்தின் பூஜை செவ்வாய்க்கிழமை (8.11.2022) அன்று காலை சினிமா பிரபலங்கள் வாழ்த்த, சிறப்பான முறையில் நடைபெற்றது. விரைவில் தூத்துக்குடியில் முதல் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.





