
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்தில், முன்னாள் ராணுவ வீரரான பாரதிராஜா தனியாக கென்னடி கிளப் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் பெண்களுக்கு கபாடி போட்டியை கற்றுத் தருகிறார்.
இவரிடம் கபடி கற்றுக் கொண்டு, பல போட்டிகளில் வென்று, ரெயில்வே துறையில் நல்ல ஒரு வேலையில் இருக்கிறார் சசிகுமார்.
பெண்களுக்கு நல்ல முறையில் பயிற்சி அளித்து சிறந்த வீரர்களாக ஆக்குகிறார். ஒரு சில நாட்களில் மாநில அளவிலான போட்டி இருக்கும் தருவாயில், பாரதிராஜாவிற்கு இதயத்தில் சிக்கல் வர, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
இச்சமயத்தில், சசிகுமார் அப்பெண்களுக்கு கபாடி பயிற்சியாளராக வருகிறார். அப்பெண்களும், மாநில அளவில் நடைபெறும் கபாடி போட்டியில் வெற்றி பெற்று விடுகிறார்கள். அதில் சிறந்த ஒரு வீராங்கனையை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்றால் ரூ.30 லட்சம் தர வேண்டும் என்று சசிகுமாரிடம் கேட்கிறார் தேர்வு குழு அதிகாரி.
தேர்வுக் குழு அதிகாரிக்கு தக்க பாடம் புகட்டவும், வீராங்கனையை இந்திய அணியில் சேர்க்கவும் சசிகுமார் எடுக்கும் முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
விளையாட்டுத் துறையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 1000’வது படம் என்று சொல்லலாம். வழக்கமாக விளையாட்த்துறையில் நடக்கும் ஊழல், லஞ்சம் என்று தான் கதை இருக்கிறது.
சசிகுமார், பாரதிராஜா இருவரும் படத்திற்கு பலமாக நிற்கிறார்கள் என்றாலும், ஏனோ ஒரு சில காட்சிகளில் ஓவர் ஆக்டிங் போல் காட்சியளிக்கிறார்கள்.
படத்தில் நடித்த் வீராங்கனைகள் அனைவரும் உண்மையாகவே கபாடி வீரர்களாக இருப்பதால், நடிக்காமல் வாழ்ந்து காட்டியுள்ளனர்.
இவர்களின் கபாடி போட்டி காட்சிகள் மட்டுமே மிகவும் விறுவிறுப்பான காட்சியாக படத்தில் இருக்கிறது. பாரதிராஜா சசிகுமாரை நம்பாமல் போன காட்சிகள் எல்லாம் பல ஆயிரம் படங்களில் இருக்கும் காட்சிகளாகத்தான் பார்க்க முடிகிறது.
இமானின் இசையில் பாடல்கள் ஓகே ரகம், பின்னனி இசை மிரட்டல் தான். ஆர் பி குருதேவ்வின் ஒளிப்பதிவு போட்டிகளை தத்ரூபமாக படமாக்கியிருக்கிறது.
பழசான கதை என்றாலும், நம்ம கபாடி போட்டியாச்சே ரசிக்காம இருக்க முடியுமா..?? ஆட்டம் சூடு பிடிக்கதான் செய்கிறது.
கென்னடி கிளப் – வீர விளையாட்டு நம்ம ’கபாடி’; கொண்டாடலாம்….



