Spotlightவிமர்சனங்கள்

எம்புரான் – விமர்சனம் 3.5/5

இயக்குனரான பிருத்விராஜ் இயக்கத்தில் முரளி கோபி அவர்களின் கதை மற்றும் திரைக்கதையோடு உருவாகியிருக்கும் படம் தான் எம்புரான். லூசுஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகியிருக்கிறது.

இப்படத்தில் மோகன்லால், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், பிருத்விராஜ், அபிமன்யூ சிங், இந்திரஜித் சுகுமாரன், கார்த்திகேயா தேவ், கிஷோர், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும், ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சிஜித் வாசுதேவ். இசையமைத்திருக்கிறார் தீபக் தேவ்.

தயாரித்திருக்கிறது ஆஷீர்வாத் சினிமாஸ், கோபுரம் பிலிம்ஸ், லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள்.

கதைக்குள் பயணித்துவிடலாம்…

லூசிஃபர் படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தின் கதை நகர்கிறது. தனது தந்தையின் பாதையில் கேரளாவின் முதலமைச்சராக ஆட்சி செய்து வந்தார் டோவினோ தாமஸ்.

இந்நிலையில், பிரபல ரெளடியான அபிமன்யூ சிங்’கோடு கைகோர்த்து கேரளாவின் வளங்களை அழிக்கும் செயலில் ஈடுபட தயாராகிறார் டோவினோ.

டோவினோ தாமஸின் இந்த செயலுக்கு அவரது அக்காவாக வரும் மஞ்சு வாரியர், கேரள மக்கள் மட்டுமல்லாது, அக்கட்சி நிர்வாகிகள் தொடங்கி அமைச்சர்கள், தொண்டர்கள் என அனைவரும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் எதிரி கட்சியோடு கைகோர்த்து அபிமன்யூ சிங் கொண்டு வரும் அனைத்து முயற்சிக்கும் கைகொடுக்கத் தயாராகிறார் டோவினோ.

இந்த சமயத்தில், தங்களது நாட்டை விட்டுச் சென்ற ஸ்டீபன் நெடும்பள்ளி மீண்டும் வந்து நடக்கும் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர் கேரள மக்கள.

ஆனால், ஸ்டீபன் நெடும்பள்ளியான அப்ராம் குரேஷி நிழல் உலக தாதாவாக லண்டனில் வாழ்ந்து வருகிறார். சட்ட விரோத ஆயுத பரிமாற்றத்தை அழிக்கும் நோக்கில் தனது டீமோடு அங்கு ஒரு தனி அரசாங்கம் நடத்தி வருகிறார் அப்ராம் குரேஷி.

கேரள மக்களையும் கேரளாவையும் காப்பாற்ற தனது கேங்கோடு மீண்டும் கேரளாவிற்கு வருகிறார் மோகன்லால்.?? இப்படத்தின் ப்ருத்விராஜின் கதாபாத்திரம் எதுவரை நீண்டிருக்கிறது.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

லூசிஃபர் படத்தின் முதல் பாகத்தில் தோன்றிய அனைத்து கதாபாத்திரங்களும் இப்படத்திலும் தோன்றியிருக்கின்றனர். ஒவ்வொரு கேரக்டர்களுக்குமே அப்படியான முக்கியத்துவம் கொடுத்து மாஸ் ஏற்றியிருக்கிறார் இயக்குனரான பிருத்விராஜ்.

வில்லன்களில் ஆரம்பித்து அனைவருக்குமே ஸ்லோ காட்சிகளை வைத்து, அவர்களுக்கென்று தனி பிஜிஎம்’ஐ கொடுத்து அதிரடி காட்டியிருக்கிறார்கள்.

ஆரம்பத்திலேயே மதத்தை வைத்து அரசியல் செய்யும் சிலருக்கு சாட்டையடியாக வசனங்களை வீசியிருக்கிறார் பிருத்விராஜ்.

மோகன்லாலின் இண்ட்ரோ காட்சியில் ஆரம்பித்து அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலுமே அவரது ரசிகர்களுக்கு சரியான தீணிதான் என்று தான் கூற வேண்டும். நடை, உடை, ஆக்‌ஷன், பிரமாண்ட காட்சிப்பதிவு என அனைத்தும் மோகன்லாலை ஒருபடி மேலே தூக்கி வைத்துவிட்டது.

படத்தின் முதல் பாதி ஆங்காங்கே சற்று நம்மை சோதித்தாலும், இரண்டாம் பாதி டாப் கியர் போட்டு வேகமெடுத்துச் செல்வது படத்திற்கு பலமாக இருக்கிறது. படத்தின் முக்கிய இடத்தில் சரியான ஒரு நடிப்பைக் கொடுத்து ரசிக்க வைத்துவிட்டார் மஞ்சு வாரியர்.

பிருத்விராஜின் கதாபாத்திரம் யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்’ஆக இருந்தது கதைக்களத்தை மேலும் சுவாரஸ்யமாக்கிவிட்டது.

பிரமாண்டம் என்றால் அது கதைக்கு தேவையான காட்சிப்பதிவில் மட்டுமே கொடுத்தால் போதும் என்று அறிந்து அதனை நன்றாகவே கையாண்டிருக்கிறார் இயக்குனர் ப்ருதிவிராஜ்.

சிறப்பான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கதையை நன்றாகவே நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர்.

சிறப்பான ஒளிப்பதிவு, ஆச்சர்யப்பட வைக்கும் பின்னணி இசை, அசத்தலான கலை வடிவம், ரசிக்க வைக்கும் படத்தொகுப்பு என படத்தில் அனைத்துமே ப்ளஸ் தான்.

படத்தின் மிகப்பெரும் பலமென்றால் அது ஒளிப்பதிவு தான். இப்படியொரு மேக்கிங்கை எந்த இந்திய சினிமாவிலும் நாம் பார்த்திடாத வண்ணம் தரமான ஒரு ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கின்றனர்.

முதல் பாகத்திற்கு இணையாக இல்லையென்றாலும், எம்புரானையும் ரசிக்கலாம் வியக்கலாம் என்ற எண்ணத்தைக் கொடுத்துவிட்டார் இயக்குனரான பிருத்விராஜ்.

மூன்றாம் பாகத்திற்கும் தரமான ஒரு லீட் ஒன்றையும் வைத்திருக்கிறார் இயக்குனர்.

எம்புரான் – வியப்பு…

Facebook Comments

Related Articles

Back to top button