
ஆரி அர்ஜுனன் நடிப்பில் வெளிவந்த நாகேஷ் திரையரங்கம் படத்தை இயக்கியவர் இசாக். இப்படம், அனைவராலும் பெரிதாக பாராட்டப்பட்டது. இப்படத்தினைத் தொடர்ந்து புதுமுகங்களை வைத்து “181” என்ற படத்தினை இயக்கியிருக்கிறார் இயக்குனர் இசாக்.
கதைப்படி,
நாயகன் ஜெமினி பட வாய்ப்புத் தேடி அலைகிறார். மூன்று நாட்களுக்கு இளைஞர்களுக்கு பிடித்தமான கதையோடு வருமாறு தயாரிப்பாளர் ஒருவர் கூற, கதை எழுத, தனது மனைவி ரீனா கிருஷ்ணனோடு இணைந்து ரீனாவின் காட்டுப் பங்களாவிற்கு இருவரும் செல்கின்றனர்.
அங்கு இருக்கக்கூடிய சூழலில் கதை எழுத ஆரம்பிக்கிறார் ஜெமினி. இச்சமயத்தில் ரீனாவையும் ஜெமினியையும் மாற்றி மாற்றி ஒரு அமானுஷ்ய சக்தி தொடர்ந்து பயமுறுத்துகிறது.

இருவருக்கும் தொடர்ந்து இன்னல்கள் கொடுத்து வருகிறது. இறுதியில் அமானுஷ்ய சக்தியாக வரும் அந்த பெண் யார்.? அவருக்கு என்ன நடந்தது என்பது படத்தின் மீதிக் கதை.
தொடர்ந்து பல படங்களில் பார்த்த கதைதான் இந்த படத்திலும் தொடர்கிறது. பெரிதான எந்த ஒரு மாற்றமோ அல்லது தனித்துவமான அம்சமோ இக்கதையில் இல்லாதது சற்று ஏமாற்றமே…
சமூகத்தில் நடக்கும் ஒரு பெரும் குற்றச்செயலை வெளிப்படையாக இயக்குனர் இசாக் கூற வந்திருப்பதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளலாம்.
படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலே எண்ட்ரீ ஆகும், அமானுஷ்யம் தொடர்ந்து அந்த தம்பதிகளை ஏன் பயமுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.? ஓரிருமுறை பயமுறுத்தினால் போதாதா.? இரண்டாம் பாதியிலும் அது தொடர வேண்டுமா.? என்று தோன்றியது.

நடித்த நடிகர்களுக்கு இயக்குனர் இன்னும் சற்று பயிற்சி அதிகமாகவே கொடுத்திருந்திருக்கலாம்.
மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காவ்யாவை வெகுவாகவே பாராட்டலாம். அந்த கதாபாத்திரத்தில் துணிந்து நடித்ததற்காகவே, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு கைகூடும்.
அழகான தோப்பு வீட்டினை ஒளிப்பதிவில் ஒளிப்பதிவாளர் பிரசாத் இன்னும் சற்று அழகூற காட்டியிருந்திருக்கலாம். இருந்தாலும், ஒரு சில இடங்களில் தனக்கான முத்திரை இருப்பது போன்று மிரட்டல் காட்சிகளை மிரள் வைக்கும்படியாகவும் கொடுத்திருக்கிறார் பிரசாத்.

ஷமீல் இசையில் ஒரு சில இடங்களில் பின்னணி இசை மிரட்டியிருக்கிறது. அந்த அமானுஷ்யம் வரும் இடங்களில் நம்மை பயமுறுத்தியதிற்கு ஒளிப்பதிவும் பின்னணி இசையும் பெரிதாகவே கைகொடுத்திருக்கின்றன.
இத்திரைப்படத்தை சாய்ராஜ் ஃபிலிம் ஒர்க்ஸ் சார்பாக பி. பி. எஸ். ஈச குகா தயாரித்திருக்கிறார்.
கதையில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் “181” இன்னும் அதிகமாகவே உற்று நோக்கப்பட்டிருக்கும்…





