
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
நாட்டில் இதுவரை 8356 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 273 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இன்னும் இரண்டு வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பலர் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கூட வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து, மக்களை பாதுகாக்க தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் சமூக அக்கறையுடன் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோருக்கு தேவையான உதவிகளையும் சமூக அமைப்புகள் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், காக்கும் கரங்கள் என்ற சமூக அமைப்பினர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களின் பாதங்களை கழுவி அரிசி, சோப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை இலவசமாக வழங்கியுள்ளனர்.
மேலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை எதிரே சாலையோரம் தங்கியிருந்த 80 க்கும் மேற்பட்டோருக்கு தங்குவதற்கு இடமளித்து, அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கி வருகின்றனர்.





