கொரோனா பாதிப்பால் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு 21 நாள் ஊரடங்கை மேலும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்கள் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் சில நலத்திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில், கட்டடத் தொழிலாளர்கள் உட்பட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது.
மற்ற மாநிலத்தை சேர்ந்தவரக்ளுக்கும் இந்த திட்டம் செயல்படும். அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவசமாக ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் ஆகியவற்றை நியாய விலைக் கடைகளில் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வெளி மாநில தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்காக 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், பேக்கரிகளில் பார்சலுக்கு அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை அடுமனைகளில் (பேக்கரி) பார்சல் மூலம் விற்பனை செய்யலாம் என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் மட்டுமே, அது முழுமை பெறும் என்பதால் ஊரடங்கை நீட்டிப்பதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.