
இயக்கம்: ரவீந்திர மாதவா
நடிகர்கள்: அதர்வா, அஷ்வின் கக்குமனு, லாவன்யா, ஷா ரா, பரணி, செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லக்ஷ்மி ப்ரியா, பாரத்,
ஒளிப்பதிவு: சக்தி சரவணன்,
இசை: ஜஸ்டீன் பிரபாகரன்
தயாரிப்பு: ஜான் பீட்டர்
நாயகன் அதர்வா, போலீஸ் கான்ஸ்டபிளாக பணிக்கு சேர செல்கிறார். தனது அப்பாயிண்ட்ன்மெண்ட் ஆர்டரை பெற்று பணியில் சேர, அவருடன் சேர்ந்து ஐந்து பேரும் பணியில் சேர வருகின்றனர்.
காலை முதல் மாலை வரை போலீஸ் நிலையத்தில் இவர்கள் ஆறு பேரும் காத்திருக்கின்றனர். கடைசியாக, போலீஸ் அதிகாரி ஒருவர், ஆறு பேரையும் ரவுண்ட்ஸ் போகுமாறு சொல்கிறார்.
உடனே, நடந்தே ஆறு பேரும் ரவுண்ட்ஸ் செல்கின்றனர். அப்போது, பாதாள சாக்கடை மூடியினைத் திறந்து ஒருவர், இவர்களைக் கண்டதும் தலைதெறிக்க ஓடுகிறார்.
அவரை சந்தேகப்படும் அதர்வா உட்பட ஆறு போலீஸும், அவரை துரத்திக் கொண்டுச் செல்கின்றனர். ஒரு மிகப்பெரும் மதிலை தாண்டி அவர் ஓட, ஆறு பேரும் அந்த மதிலை தாண்டுகின்றனர்.
உள்ளே சென்றால், துரத்தி வந்த நபர் மாயமாகி விடுகிறார். குடிசை வாழ் பகுதியான அதில் ஒருவர் கூட இல்லை. எது வாசல் எது முடிவு என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர் ஆறு பேரும்.
அப்போது, அங்கு அஸ்வின் உட்பட மூன்று பேர் நிற்க, அவர் யார் என்று விசாரிக்க அருகில் செல்கிறார் போலீஸ் தரணி. பேசிக் கொண்டிருக்கும் போதே அஸ்வின் தன் கையில் மறைத்து வைத்திருந்த மிகப்பெரும் கத்தியை எடுத்து தரணியின் தலையை துண்டித்து கொன்று விடுகிறார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியாகிறார் அதர்வா. போலீஸ் ஐந்து பேரையும் சுற்றுப் போடுகிறது ஒரு கும்பல்.
இந்த கும்பலின் நோக்கம் தான் என்ன.? எதற்காக இந்த கொலை வெறி தாக்குதலை நடத்த வேண்டும்.? உள்ளிட்ட கேள்விகளுக்கெல்லாம் விடையை இரண்டாம் பாதியில் வைத்திருக்கிறார் இயக்குனர்.
நாயகன் அதர்வா, தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அளவாக செய்து முடித்திருக்கிறார். இருந்தாலும் ஒரு சில இடங்களில் சற்று ஓவர் ஆக்டிங்கை கொடுக்காமலும் அவர் இல்லை. காதல் காட்சிகளில் நன்றாகவே மிளிர்கிறார் அதர்வா.
வில்லன் என்று சொல்வதை விட மற்றொரு நாயகன் என்று தான் சொல்ல வேண்டும் அஸ்வினை. எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு இவரைக் கண்டாலே படம் பார்ப்பவர்களுக்கு பயத்தை வர வைக்கும் அளவிற்கு ஒரு வில்லத்தனத்தைக் கொடுத்து தனது நடிப்பில் மிரட்டியிருக்கிறார் அஸ்வின்.
நாயகி லாவண்யா, தனது அழகால் காட்சிகளை அழகுப்படுத்தியிருக்கிறார்.
படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்கள் தங்கள் பணிகளை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.
படத்தின் ஆரம்ப் காட்சியிலிருந்து இடைவேளை வரையிலும் காட்சிகளுக்கு காட்சி பரபரப்பாகச் சென்று நம்மை சீட்டின் நுனியில் அமர வைத்திருக்கிறார் இயக்குனர்.
இரண்டாம் பாதியில், அஸ்வினின் ப்ளாஷ் பேக் காட்சிகளில் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைத்துவிடுகிறது. இன்றளவும் நம் நாட்டில் பல்வேறு இடங்களில் நடக்கும் உண்மைச் சம்பவத்தைப் பற்றி திரையில் பறைசாற்றியிருக்கிறார் இயக்குனர். விவசாயம் எதனால் அழிந்தது என்பதையும் அவர் கூறாமல் இல்லை.
ஆனால், கதை கொண்டு சென்ற விதத்தில் சற்று தடுமாறியிருக்கிறார் இயக்குனர். வங்கிகளை மாணவர்கள் கொள்ளையடிப்பது, அவர்களின் கைகளில் துப்பாக்கி, காவல்துறை தான் முதல் எதிரி என்று முன்னிறுத்துவது உள்ளிட்ட பல காட்சிகள் முன்னுக்கு பின்னாக நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத விதத்தில் சென்று கொண்டிருப்பதால் படத்தில் பெரிதாகவே ஓட்டை விழுந்துவிடுகிறது.
இதனால், கதைக்குள் நம்மால் ஒட்ட முடியாமல் போய்விடுகிறது. ஜஸ்டின் பிரபாகரின் இசையில் பாடல்கள் ஒருமுறை கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் நன்றாகவே தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு சண்டைக் காட்சிகளை கச்சிதமாக படமாக்கியிருக்கிறது.
தணல் – பற்றியிருக்க வேண்டும்…