
30 ஏக்கர் பரப்பளவில், இதுவரை இந்திய சினிமா வரலாற்றிலேயே அமைக்கப்படாத மிகப் பெரிய சேரியை பாரடைஸ் படத்திற்காக பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பில், இந்தச் சேரி உருவாக்கப்படவுள்ளது.
நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்துக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ‘தசரா’ மூலம் மாபெரும் வெற்றிபெற்ற திறமையான இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கும் இந்தப் படம், இந்திய சினிமாவின் மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றாக உருவாகிவருகிறது. அதற்காகவே மிகப்பெரிய குடிசைப்பகுதி செட் ஹைதராபாத்தில் நிர்மாணிக்கப்படுகிறது.
படக்குழுவின் தகவலின்படி, “பாகுபலி படத்தில் காணப்பட்ட மகிழ்மதி பேரரசை போல், இங்கு குடிசைப்பகுதி பேரரசு உருவாக்கப்படுகிறது. கதாநாயகன் குடிசைப்பகுதியில் பிறந்து அங்கேயே வளர்ந்து, பின்னர் உச்சத்துக்குச் செல்வதை படத்தில் காண்பிக்கின்றனர். அவ்வளவு பெரிய கதைப் பயணத்தை காட்டுவதற்காகவே இந்த மாபெரும் செட் அமைக்கப்படுகிறது. அந்த குடிசைப்பகுதியின் மையத்தில் ஒரு பெரிய வளைவு (Arch) இருக்கும். இதனை நாம் அண்மையில் வெளியான அறிவிப்பு வீடியோ மற்றும் போஸ்டர்களில் பார்த்தோம். அந்த வளைவு கதாநாயகனின் பேரரசின் அடையாளமாக அமையும்.” என்று கூறப்படுகிறது.
இந்த செட் அமைப்பு பாகுபலி படத்தில் காணப்பட்ட மாபெரும் மகிழ்மதி பேரரசின் அளவுக்கு இணையானதாக இருக்கும், ஆனால் இங்கு பிரமாண்ட அரண்மனைகளுக்குப் பதிலாக ஆங்காங்கே ஆர்ப்பரிக்கும் குடிசைப்பகுதிகள் காணப்படும். இதன் மூலம் ‘ஸ்லம்ஸ்களின் பாகுபலி’ செட்டை பார்வையாளர்களுக்காக படக்குழு உருவாக்கி வருகின்றனர்.
தனித்துவமான திறமை கொண்ட ஸ்ரீகாந்த் ஓடேலா, ‘தி பாரடைஸ்’ மூலமாக மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கிறார். முன்னதாக சுகுமார் இயக்கிய ‘நன்னக்கு பிரேமதோ’ மற்றும் ‘ரங்கஸ்தலம்’ படங்களில் உதவி இயக்குநராகவும், பின்னர் இயக்குநராக தனது முதல் படமான ‘தசரா’வில் 100 கோடியை கடந்த வசூலுடன் விமர்சகர்களின் பாராட்டையும், நடிகர் நானியின் கரியரில் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றார். மிகக் குறைந்த காலத்தில் சினிமா உலகில் தனக்கென முத்திரை பதித்திருக்கும் அவர், ‘தி பாரடைஸ்’ மூலம் மேலும் உயரத் தயாராகி வருகிறார்.
பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் இப்படத்திற்கு, ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். முன்னதாக அனிருத் மற்றும் அர்ஜுன் சாண்டி ஆகியோரின் குரலில் வெளிவந்த பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
SLV சினிமாஸ் தயாரிப்பில் உருவாகிவரும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம், ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் 2026 மார்ச் 26 அன்று, உலகமெங்கும் பிரம்மாண்டமாக அளவில் வெளியிடப்படுகிறது. 8 மொழிகளில்—இந்தி, தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், ஸ்பானிஷ், வங்காளம், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளது. உலகளாவிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், சினிமாவின் எல்லைகளைத் தாண்டி, ரசிகர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கவிருக்கிறது.