
அறிமுக இயக்குனர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் ‘தீதும் நன்றும்’. ராசு ரஞ்சித், அபர்ணா பாலமுரளி, லிஜோமால் ஜோஸ் , ஈசன் மற்றும் சத்யா நடிக்க உருவாகியுள்ளது இப்படம்.
கதைக்குள்…
ராசு ரஞ்சித்தும் ஈசனும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்கள். தாய், தந்தை இல்லாத இருவரும் மீன் மார்க்கெட்டில் வேலை செய்கின்றனர். சந்தீப் என்பவருடன் இருவரும் இணைந்து அவ்வப்போது இரவு நேரங்களில் முகமூடி கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
திருட்டில் வரும் பணத்தை மூவரும் பங்கு போட்டுக் கொள்கின்றனர். ஈசனும் அபர்ணா பாலமுரளியும் காதலிக்கின்றனர். வீட்டினை எதிர்த்து அபர்ணா பாலமுரளி ஈசனை திருமணம் செய்து கொள்கிறார். மற்றொரு பக்கம் ராசு ரஞ்சித்துக்கும் லிஜோமாலுக்கு காதலும் படுஜோராக வளர்கிறது. இப்படியாக இவர்களது வாழ்க்கை நிம்மதியா செல்ல,
ஒருநாள் ராசு ரஞ்சித், ஈசன், சந்தீப் இணைந்து டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க, மூவரும் போலீஸாரால் சிக்கிக் கொள்கின்றனர்.
இதில், சந்தீப் தப்பித்து விட ராசு ரஞ்சித்தும் ஈசனும்.குண்டாஸ் சட்டத்தில் ஜெயிலுக்குள் சென்று விடுகின்றனர். கர்ப்பிணியான அபர்ணா பாலமுரளி கடும் போராட்டத்திற்கு பிறகு குழந்தையை பெற்றெடுக்க ஒரு வருடம் கழித்து மீண்டும் வெளியே வருகின்றனர் ராசு ரஞ்சித்தும் ஈசனும்…
இந்நிலையில், நண்பனாக இருந்த சந்தீப் வில்லனாக வரும் சத்யாவோடு இணைந்து சதுரங்க ஆட்டத்தை ஆடுகிறார்..
அதன்பிறகு ராசு ரஞ்சித் மற்றும் ஈசனின் வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை….
இயக்குனரே இப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார். ராசு ரஞ்சித் மிகவும் யதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். சிவா என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தான் இயக்குனர் என்பதால் தனக்கென்று ஒரு காட்சி அதிகமாக வைப்பதோ, மிகைப்படுத்துதலோ என எதுவும் இல்லாமல் கதைக்கு தேவையான காட்சிகளை மட்டும் வைத்து படத்திற்கு உயிரூட்டிருக்கிறார் ராசு ரஞ்சித்.
நண்பனாக வரும் ஈசனும் கதாபாத்திரத்திற்கு கனக்கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காமெடிக்கு பஞ்சமில்லாமல் ஆங்காங்கே தெளித்து விட்டிருக்கிறார்கள்.
அபர்ணா பாலமுரளி இப்படத்தின் மூலமாகவே தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியிருக்கிறார். அதற்குபிறகே சூரரைப் போற்று மூலமாக ஆகாயம் பறந்திருக்கிறார். சுமதி என்ற கதாபாத்திரத்தில் எந்த வித மேக்கப்’ம் இல்லாமல் எளிய பெண்ணாக வாழ்ந்திருக்கிறார் இப்படத்தில்.
கண்களாலும், சிரிப்பாலும் இளைஞர்களின் மனதை கொள்ளையடிக்கும் அழகாக லிஜோமால் ஜோஸ் தமிழ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கதாபாத்திரத்தை அழகுபடுத்தியிருக்கிறார்.
வில்லத்தனத்தில் சத்யாவும் கருணாகரனும் மிரட்டியிருக்கிறார்கள். மெயின் வில்லனாக வரும் சத்யா வழக்கம்போல் தனது மிரட்டல் குரலில் அனைவரையும் மிரள வைக்கிறார்.
சி சத்யாவின் இசையில் பின்னனி இசை மிரட்டலாக கொடுத்திருக்கிறார். கெவின் ராஜ் அவர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடும் போது வரும் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் மிரட்டும் வகையிலான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் கெவின் ராஜ்.
இயக்குனரே படத்தின் எடிட்டைங்கையும் கவனித்திருக்கிறார். அதிலும் ஷார்ப் தான்.
எந்தவித தொய்வும் இல்லாமல் ஆரம்பம் முதலே படுவேகமாக செல்வது படத்திற்கு மிகப்பெரும் பலமாக உள்ளது. க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி மிகவும் யதார்த்தமாக இருந்தது மேலும் பலம்.
கதாபாத்திரங்களின் தேர்வு – நச்
ஒரு அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் உருவான படம் போல் இல்லாமல் அனுபவ இயக்குனரின் பார்வையில் படத்தை இயக்க வைத்து ஆச்சர்யப்படுத்திருக்கிறார் இயக்குனர் ராசு ரஞ்சித்.
ஒரு சில படங்களின் கதை எட்டிப் பார்ப்பது சற்று மைனஸ்..
மற்றபடி
தீதும் நன்றும் – நன்று..