
தம்பிதுரை மாரியப்பன் அவர்களின் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, சாந்தினி, சஞ்சீவ், ஆனந்த், பூர்ணிமா ரவி, ப்ரதோஷ், மாரிமுத்து, ரமா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் “ட்ராமா”.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் அஜித் ஸ்ரீனிவாசன். மேலும், இசையமைத்திருக்கிறார் ஆர் எஸ் ராஜ்பிரதாப்.
TURM ப்ரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் எஸ் உமா மகேஸ்வரி படத்தினை தயாரித்திருக்கிறார்.
கதைக்குள் பயணித்துவிடலாம்…
நல்ல செல்வாக்கோடு வாழ்ந்து வரும் விவேக் பிரசன்னாவிற்கு திருமணமாகி வருடங்கள் கடந்தும் ஒரு குழந்தை இல்லை. இவரது மனைவியான சாந்தினி தங்களுக்கு ஒரு குழந்தை இல்லையென தினம் தினம் மன வேதனைக்குள்ளாகிறார். இதனால், இவர்களது வீட்டிற்குள் எப்போதும் ஒரு சோகமான சூழலே இருந்து வருகிறது.
இந்நிலையில், தனியார் கருத்தரிப்பு மையம் ஒன்றின் விளம்பரத்தைக் கண்டு, அங்கு சிகிச்சை எடுக்கிறார் விவேக் பிரசன்னா.
நாட்கள் கடந்து செல்ல, சாந்தினி கர்ப்பமாகிறார்.
இந்த கதை நடந்து கொண்டிருக்கும் வேலையில், மற்றொரு பக்கம் ஒரு கதை நகர்கிறது.
அதில், ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்துவின் மகளாக வரும் பூர்ணிமா ரவியை காதலிக்கிறார் ப்ரதோஷ். முதலில், ப்ரதோஷின் காதலை ஏற்க மறுத்தாலும், அதன்பின் அவர் மீது காதலில் விழுகிறார் பூர்ணிமா.
இவர்கள் இருவரும் நெருங்கி காதலித்ததன் விளைவு, பூர்ணிமா கர்ப்பமாகிறார்.
இந்த இரண்டு கதைக்குள்ளும் இரண்டும் பெண்கள் கர்ப்பமாகியிருக்கிறார்கள். இவர்களுக்குள் என்ன தொடர்பு.?? சாந்தினியின் கர்ப்பத்திற்கு பின்னால் நடந்தது என்ன.?? பூர்ணிமா ரவியின் வாழ்க்கையில் நடந்தது என்ன.?? என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனான விவேக் பிரசன்னாவின் கதை தேர்வு சமீப காலங்களில் பாராட்டும்படியாக இருந்து வருகிறது. அதில், இந்த கதையும் ஒரு தனித்துவமிக்கதாக இருப்பது பாராட்டுக்குறியதுதான். கதையின் தான் எந்த மாதிரியான நடிப்பை வெளிப்படுத்துகிறோம் என்பதை உணர்ந்து அதை தெளிவாக கொடுத்து கதையோடு ஒன்றி பயணித்திருக்கிறார் விவேக் பிரசன்னா. தனக்கு குழந்தை இல்லாததை எண்ணியும் தனக்கு தான் குறை இருப்பதை எண்ணியும் ஏங்கி கலங்கும் இடத்தில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் விவேக் பிரசன்னா.
தான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்த பின்னர், கண்களின் வழியே தனது ஆனந்தத்தை வெளிப்படுத்திய இடத்தில் தனக்கான நடிப்பை அளவோடு கொடுத்து பாராட்டினை பெற்றிருக்கிறார் நடிகை சாந்தினி.
க்ளைமாக்ஸ் காட்சியில் வேற மாதிரியான ஒரு டிரான்ஸ்பார்மேஷனை கொடுத்து மிரள வைத்திருக்கிறார் ஆனந்த்.
சின்னதொரு கதாபாத்திரம் என்றாலும், அதில் தனக்கான கதாபாத்திரத்தை அளவாக செய்து முடித்திருக்கிறார் ப்ரதோஷ்.
காமெடி என்ற பெயரில் இருவர் செய்யும் சேட்டைகள் ஒரு சில இடங்களில் ரசிக்க வைத்தாலும், பல இடங்களில் சற்று சோதனை செய்துவிட்டது.
மாரிமுத்து, ரமா இருவரும் கதைக்கேற்ற கதாபாத்திரமாக நின்றார்கள். சஞ்சீவின் மாஸ் காட்சிகள் படத்திற்கு துளியளவும் ஒட்டவில்லை. அந்த இடத்தில் அதெல்லாம் தேவையா.??
படத்தில் சில இடங்களில் குறைகள் இருந்தாலும், கதையின் நாட் ஒன்றிற்காக படத்தின் இயக்குனரை வெகுவாகவே பாராட்டலாம்.
குழந்தை பெற வேண்டி கோடிக்கணக்கில் பணம் விரயம் செய்வதை விட, ஆசீரமங்களில் பெற்றோர்களுக்காக ஏங்கி நிற்கும் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களை வளர்க்கலாமே என்ற ஒரு நல்ல கருவிற்காக படத்தினை அதிகமாகவே பாராட்டலாம்.
ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டுமே படத்திற்கு இரண்டு பில்லர்களாக நிற்கின்றது.
படத்தொகுப்பு ஷார்ப்பாக தனது வேலையை செய்திருக்கிறது.
மொத்தத்தில்,
ட்ராமா – கருத்துள்ளது…