Spotlightவிமர்சனங்கள்

வாய்தா – விமர்சனம் 4/5

றிமுக இயக்குநர் மகிவர்மன் C.S. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் தான் “வாய்தா”. புகழ் மகேந்திரன், மு.ராமசாமி, நாசர், பவுலின் ஜெசிகா உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றனர். வாய்தா என்ற டைட்டிலே இப்படம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை பலருக்குள்ளும் எழுப்பியது. அடுத்து படத்தின் ட்ரெய்லர் எதிர்பார்ப்பை பெரிய அளவிற்கு எகிற வைத்தது.

அந்த எதிர்பார்ப்பை வாய்தா பூர்த்தி செய்ததா இல்லையா என்று பார்த்துவிடலாம்.

கதைப்படி,

கிராமத்தில் உள்ள மக்களுக்கு துணி துவைத்து, இஸ்த்ரி செய்து கொடுத்து வருகிறார் ராமசாமி. இவரது மகனாக வருகிறார் புகழ் மகேந்திரன். இஸ்த்ரி தொழில் செய்வதால் அக்கிராமத்தினரால் கீழ்த்தர ஜாதியாக பார்க்கப்படுகிறது ராமசாமியின் குடும்பம்.

அதாவது, இவர்கள் வீட்டிற்குள் வந்துவிட்டால் அந்த இடத்தை தண்ணீர் ஊற்றி கழுவி விடும் அளவிற்கு அவர்களை ஒதுக்கி பார்க்கிறார்கள் அக்கிராமத்தினர். இப்படியான கிராமம் இன்னமும் இங்கு நிறைய இருப்பதுதான் மன வேதனையான விஷயம்.

ஒருநாள், எதிர்பாராதவிதமாக பைக்கில் சென்று கொண்டிருந்த பக்கத்து ஊரைச் சேர்ந்த வேற்று ஜாதி இளைஞன், கடையில் நின்று கொண்டிருந்த ராமசாமி மீது விபத்து ஏற்படுத்தி விடுகிறான். இதனால் கை முறிவு ஏற்படுகிறது ராமசாமிக்கு.

இதை பயன்படுத்திக் கொண்ட உள்ளூர் அரசியல்வாதி, விபத்து ஏற்படுத்திய இளைஞனை வைத்து பணம் பறிக்க நினைக்கிறான். அப்போது நடந்த பேச்சுவார்த்தை மோதலில் முடிய, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சந்தித்துவிடலாம் என்று உள்ளூர் அரசியல்வாதியும், தனது ஜாதியும் குறைந்த ஜாதி இல்லை என்று விபத்து ஏற்படுத்திய இளைஞனின் தந்தையும் முட்டிக் கொள்ள நடுவில் சிக்கிக் கொள்கிறார் ராமசாமி.

இறுதியாக இந்த வழக்கு எதுவரை சென்றது ? வழக்கில் ஜாதியும் பணமும் என்ன செய்தது.? ராமசாமிக்கு நீதி கிடைத்ததா இல்லையா.? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகனாக வரும் புகழ் மகேந்திரனுக்கு அறிமுக படம் என்றாலும், எந்த இடத்திலும் அதை வெளிக்கொணராமல், தேர்ந்தெடுத்த ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு கொடுத்த பணியை சரியாக செய்து முடித்திருக்கிறார் புகழ். நாயகியுடனான ரொமான்ஸ் காட்சியில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

நாயகியாக வரும் பவுலின் ஜெசிகா, அழகாக காட்சியளித்திருக்கிறார். காதல் காட்சிகளில் மிளிர்கிறார். சின்ன சின்ன ரியாக்‌ஷன்களில் அனைவரையும் ஈர்க்கிறார். தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு வரவு தான் இந்த ஜெசிகா.

மேடை நாடகக் கலைஞரான மு ராமசாமி, தனது அனுபவ நடிப்பை இதில் காட்டியிருக்கிறார். கேடி (எ) கருப்புத்துரை, ஜோக்கர் போன்ற படங்களுக்குப் பிறகு ராமசாமி அவர்களின் நடிப்புக்கு தீனி போட்டியிருக்கும் படம் இந்த வாய்தா. தனது அனுபவ நடிப்பை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்தியிருக்கிறார் ராமசாமி. அதிலும், க்ளைமாக்ஸ் காட்சியில் அனைவரின் கண்களிலும் ஈரத்தை எட்டிப் பார்க்கும் அளவிற்கு அப்படியொரு நடிப்பை கொடுத்திருக்கிறார். இரண்டு காட்சிகள் மட்டுமே என்றாலும், அளவாக நடித்து சென்றிருக்கிறார் நாசர்.

கேரக்டர்களாக தோன்றியவர்கள் முதல் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் தோன்றியவர்கள் வரை அனைவரும் மிகவும் நேர்த்தியாக நடித்துள்ளனர்.

நாட்டில் இன்றளவும் நடக்கும் ஒரு உண்மையை எடுத்து அதை, மக்களுக்கு பிடிக்கும்படியாக ஒரு படைப்பாக கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுகளும், நன்றிகளும். ஆரம்பத்தில் சற்று தொய்வாக சென்று கொண்டிருக்கும் கதை, பிற்பாதியில் விறுவிறுப்பை ஏற்றுகிறது.

சாதியினால் படும் இன்னல்கள் இன்னமும் இந்த சமுதாயத்தில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது என்பதை வெட்டவெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது வாய்தா. படத்தில் எந்தவொரு ஹீரோயிசம் இல்லாமல், கதை தான் ஹீரோ என்ற முனைப்பில் படம் முழுவதும் நகர்த்தி கொண்டு சென்றது இயக்குனரின் திறமை.

சேது முருகவேலின் ஒளிப்பதிவு படத்திற்கு சற்று கூடுதல் பலம் தான். ஒவ்வொரு காட்சிக்கான மெனக்கெடல் படம் பார்க்கும் போது நன்றாகவே தெரிகிறது. லோகேஷ்வரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பாடல் வரிகள் அனைத்தும் பல நூறு கதைகளை சுமந்து கொண்டு செல்கிறது.

இயக்குனர் மகிவர்மனுக்கு பெரும் வாழ்த்துகள். ரீஸ்க்கான கதையை எடுத்து அதை மக்கள் கொண்டாடும்படியாக கொடுத்திருப்பது “வாய்தா”விற்கு கிடைத்த வெற்றி.

வாழ விடுங்கள்..
வாழ்கிறோம்..
வாழ்வோம்….

வாய்தா – வாழ்வியலை சுமந்த உன்னத படைப்பு….

Facebook Comments

Related Articles

Back to top button