இயக்குனர் மார்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் விமல், அனிதா சம்பத், பாண்டியராஜன், பால சரவணன், தீபா, ஆடுகளம் நரேன், வேல இராமமூர்த்தி உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “தெய்வ மச்சான்”.
கதைப்படி,
தனது தங்கை அனிதா சம்பத்திற்க்கு மாப்பிள்ளை தேடும் படலத்தில் இருந்து வருகிறார் விமல். விமலின் அப்பாவாக வருபவர் பாண்டியராஜன்.. விமலின் நண்பனாக வருகிறார் பால சரவணன்.
ஒருவழியாக மாப்பிள்ளை கிடைத்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வரும் வேலையில்,
விமலின் கனவில் அவ்வப்போது சாமியாக தோன்றும் வேல ராமமூர்த்தி உன் நெருங்கிய உறவு இறக்கப்போவதாக கூறுகிறார். மறுநாள் நெருங்கிய உறவும் இறந்துவிடுகிறார்.
திருமணத்திற்கு முன் இரவு விமலின் கனவில் தோன்றும் வேல ராமமூர்த்தி, ‘உன் தங்கை கணவர், மச்சான் திருமணமான ஓரிரு நாளில் இறந்து விடுவான்’ என்று கூறிவிட்டுச் செல்ல, அதிர்ச்சியாகிறார் விமல்.
இந்த திருமணத்தை நிறுத்த முற்பட்டும், அது முடியாமல் போக, திருமணம் நடந்து முடிகிறது.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
காமெடி ஜார்னரில் எப்போதும் புகுந்து விளையாடும் விமலுக்கு இப்படம் ஒரு மைல்கல் தான். படம் ஆரம்பிக்கும் போதே தனக்கான, உடல்மொழி, டைமிங்க் என இரண்டிலும் புகுந்து விளையாடியிருக்கிறார்.
அதிலும், ஜமீன் குடும்பமான ஆடுகளம் நரேன் அனிதா சம்பத்தை பெண் பார்க்க வரும் காட்சியில் திரையரங்கே அதிரும் அளவிற்கு காமெடி சரவெடியை சிதறவிட்டிருக்கிறார்கள்.
அதன்பிறகு சற்று வேகம் குறையும் கதைக்களம், இரண்டாம் பாதி முழுவதும் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவிற்கு குறைவில்லாத காமெடியை கொடுத்திருக்கிறார்கள்.
பால சரவணனின் டைமிங்க் காமெடி படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. தீபா, சின்ன ஜமீனாக வந்தவர், ஜமீனின் அடியாட்களாக வரும் இருவர் என நடித்த நடிகர்கள் அனைவரும் சிரிப்போட்டத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறார்கள்.
அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் அதிரடி சரவெடியாக சிரிப்பை வரவழைத்திருக்கிறார்கள்.
நாயகிக்கு பெரிதான வேலை எதுவும் இல்லை என்றாலும், வரும் காட்சியில் அழகூட்டியிருக்கிறார்.
கேமில் ஜெ அலெக்ஸ் அவர்களின் ஒளிப்பதிவு நச். காட்சிகளை அழகுபடுத்திக் கொடுத்திருக்கிறார்.
அஜீஸின் பின்னணி இசை கதையோடு சேர்ந்த ஓட்டம்…
எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் குடும்பத்தோடு திரையரங்கிற்கு சென்று கண்டுகளிக்க தெய்வ மச்சான் சரியான படம்…
எந்த விதத்திலும் உங்களை ஏமாற்றாது…
தெய்வ மச்சான் – காமெடி சரவெடி