
இயக்குனர் சிவபிரசாத் யனாலா இயக்கத்தில் சமுத்திரக்கனி, மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், அனுசுயா பரத்வாஜ், தன்ராஜ், ராகுல் ராமகிருஷ்ணா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் விமானம்.
கதைப்படி,
ஒரு கால் நடக்க முடியாத ஊனமுற்றவராக வருகிறார் சமுத்திரக்கனி. மூன்று சக்கர வாகனத்தில் வந்து, தெருவோரம் கட்டண கழிப்பிடம் ஒன்றை நடத்தி அதில் பிழைப்பு நடத்தி வருகிறார். மனைவியை இழந்த இவருக்கு பத்து வயதில் மகனாக வருகிறார் மாஸ்டர் துருவன்.
சிறு வயதில் இருந்தே ஆகாய விமானம் என்றால் அதீத பிரியம் துருவனுக்கு. படிப்பில் சிறந்த மாணவனாக இருக்கும் துருவனுக்கு வேறு ஒரு பெரிய பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. சந்தோஷத்தில் மிதந்திருந்த சமுத்திரக்கனிக்கு பேரிடியாய் விழுந்தது அந்த செய்தி.
துருவனுக்கு கேன்சர் என்றும் அவரை காப்பாற்ற முடியாது என்றும் மருத்துவர்கள் கூறி விடுகின்றனர். இதனால், உடைந்து போகும் சமுத்திரக்கனி, தன் மகன் ஆசைப்பட்டதை செய்து கொடுக்க எண்ணுகிறார்.
துருவனின் மிகப்பெரும் ஆசையாக இருப்பது விமானத்தில் செல்வது மட்டுமே. அந்த ஆசையை நிறைவேற்றத் துடிக்கிறார் சமுத்திரக்கனி. அதற்காக பணம் திரட்டுகிறார். அந்த பணத்தை அடைந்து மகனை விமானத்தில் ஏற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்து பாராட்டு பெறக்கூடிய நடிகராக இருப்பவர் சமுத்திரக்கனி. அதிலும், அப்பா கேரக்டர் என்றால் சொல்லவா வேண்டும். அப்பா படத்திலேயே நடித்தவராச்சே.
தன் மகன் மீது வைத்திருக்கும் பாசத்தை காட்டும் காட்சி அனைத்திலும் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதிலும், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் துருவன் விமான நிலையம் அருகே மயங்கி கிடக்கும் போது, தனது மூன்று சக்கர வண்டியில் இருந்து கீழே விழுந்து செல்லும் காட்சி, தன் மகனும் தன்னை விட்டுச் செல்லப் போகிறானே என்று இரவில் படுக்கும் போது அழும் காட்சி, தனது நண்பர்களிடம் மகன் இறக்கப்போகிறான் என்று சொல்லும் காட்சி, க்ளைமாக்ஸில் மீரா ஜாஸ்மினிடம் அழுது கொண்டே பேசும் ஒரு காட்சி என பல இடங்களில் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைக்கும் காட்சிகளைக் கொடுத்து அழ வைத்திருக்கிறார் சமுத்திரக்கனி.
கதையின் நாயகனாக மாஸ்டர் துருவன். அளவாக நடித்து அசத்தியிருக்கிறார். குழந்தைகளை நிச்சயம் கவர்வார். அதிலும், துருவனின் நண்பனாக வருபவர் மிகவும் ஸ்டைலாக வந்து நின்று ரசிக்க வைத்திருக்கிறார்.
ஒரு சில அடல்ட் காட்சிகளை படத்திலிருந்து நீக்கியிருக்கலாம். 18+ ரசிகர்களை கவரும் காட்சிகளாக இருந்தாலும், குழந்தைகளுக்கான படமாக இருப்பதால் சற்று யோசித்திருந்திருக்கலாம்.
அனுசுயாவின் காட்சி க்ளைமாக்ஸில் ஸ்கோர். நண்பர்களாக வருபவர்களின் காமெடி காட்சிகள் ரசிக்க வைத்தன.
ஏற்கனவே பல படங்களில் பார்த்த கதையாக இருந்தாலும், ஃபீலிங்க்ஸ் ஒன்று தானே என்று கடந்து செல்ல வேண்டியதாக இருக்கிறது.
தந்தை – மகனுக்கான பாசப்போராட்டத்தில் வென்றிருக்கிறது இந்த விமானம்.
படத்திற்கு மிகப்பெரும் பலமே பின்னணி இசை தான். அதிலும், க்ளைமாக்ஸ் காட்சியை கண்ணீர் சிந்தாமல் எழுந்து வர முடியாத அளவிற்கு டச் கொடுத்து விட்டார் இசையமைப்பாளர் சரண் அர்ஜுன்.
விவேக்கின் ஒளிப்பதிவு கலர்புல்லாக இருந்தது. க்ளைமாக்ஸ் காட்சியில் எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற எண்ணத்தை படம் பார்ப்பவர்களுக்கு கொண்டு வர வைத்துவிட்டார் இயக்குனர்.
மொத்தத்தில்,
மகன் மீது தந்தை வைத்திருக்கும் பாசத்தை அளந்தால் அந்த விமானமும் சிறியது தான்.. .
விமானம் : தந்தை – மகன் பாசத்தை சுமந்து சென்ற சுமைதாங்கி..