Spotlightசினிமாவிமர்சனங்கள்

பைட் க்ளப் விமர்சனம் 3.25/5

அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்கத்தில் விஜய் குமார், மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி நாளை திரைக்கு வர இருக்கும் படம் தான் இந்த பைட் க்ளப்.

படத்திற்கு இசையமைத்திருக்கிறார் கோவிந்த் வசந்தா. ஒளிப்பதிவு செய்திருக்கிறார் லியோன் பிரிட்டோ.

வட சென்னையை மையப்படுத்தி கதை நகர்கிறது. அங்கு இருக்கும் ஏரியாவில் சிறுவயது கதாபாத்திரமாக வருகிறார் விஜய்குமார். கால்பந்தில் மிகவும் மும்முரமாக இருக்கும் விஜய் குமாரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முற்படுகிறார் கார்த்திகேயன் சந்தானம்.

அதே ஏரியாவில் இருக்கும் மாணவர்களை விளையாட்டு, படிப்பு என அனைத்திலும் ஊக்கப்படுத்தி வருகிறார் கார்த்திகேயன் சந்தானம். அதே ஏரியாவில் சங்கர்தாஸோடு சேர்ந்து கஞ்சா விற்று வருகிறார் கார்த்திகேயன் சந்தானத்தின் சகோதரரான அவினாஷ்.

கஞ்சா விற்பனைக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் கார்த்திகேயன் சந்தானத்தை அழிக்க நினைக்கிறார் சங்கர் தாஸ்.

அவினாஷோடு சேர்ந்து சங்கர்தாஸ், கார்த்திகேயன் சந்தானத்தை கொன்று விடுகிறார். பழி அவினாஷ் மீது மட்டும் விழ, சிறைக்குச் செல்கிறார் அவினாஷ்.

வருடங்கள் ஓட, கல்லூரி படித்து வருகிறார் விஜய் குமார். தண்டனை முடிந்து ஜெயிலில் இருந்து வருகிறார் அவினாஷ்.

அதேசமயம், சங்கர் தாஸின் கை ஓங்கி, லோக்கல் அரசியல்வாதியாக படியேறுகிறார். தன்னை நிற்கதியாக நிற்க வைத்த சங்கர் தாஸை அழிக்க நினைக்கிறார் அவினாஷ்.

அவனை அழிக்க விஜய் குமாரை பகடைக்காயாக பயன்படுத்திக் கொள்கிறார் அவினாஷ்.

அதன்பிறகு என்ன நடந்தது.? அவினாஷின் பேச்சைக் கேட்ட விஜய்குமாருக்கு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

உறியடி படத்தில் பார்த்த அதே லுக், அதே வேகம் என தனக்கான உடல் மொழியில் படம் முழுவதும் செல்வா கதாபாத்திரமாகவே கண்ணில் வந்து நிற்கிறார் நாயகன் விஜய் குமார். ஆக்‌ஷனிலும் அதகளம் செய்திருக்கிறார் விஜய்குமார். செண்டிமெண்ட், ஆக்‌ஷன், வேகம் என அனைத்து இடத்திலும் புகுந்து விளையாடியிருக்கிறார் விஜய்குமார்.

எப்போதுமே தனக்கு கொடுக்கப்பட்டதை கச்சிதமாக செய்து முடிப்பவர் தான் நடிகர் சங்கர் தாஸ். இப்படத்திலும், அதே வேலையை சரியாக செய்து முடித்திருக்கிறார். அரசியல்வாதியாக களம் இறங்கி செய்யும் இடமாக இருக்கட்டும், பொறுமைகாக்க அவர் பேசும் வசனமாக இருக்கட்டும் இரண்டு இடத்திலுமே சரியான நடிப்பை அளவாக கொடுத்திருக்கிறார் சங்கர் தாஸ்.

ஜோசப் கதாபாத்திரத்தில் நடித்த அவினாஷாக இருக்கட்டும், பெஞ்சமின் கதாபாத்திரத்தில் தோன்றிய கார்த்திகேயனாக இருக்கட்டும் இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டத்தை அளவோடு செய்து முடித்துள்ளனர்.

கதாநாயகியின் கதை தான் என்ன.? பாதி படத்துக்கு மேல ஆளையே காணோமே!

படத்தின் மிகப்பெரும் பலமே திரைக்கதை தான்… படுவேகமாக கதை நகர்ந்து செல்வதால் எங்குமே ஸ்லோ காட்சிகளை காண முடியவில்லை. ஆக்‌ஷனை அதிரடியாக கொண்டு சென்றிருப்பது மேலும் வலு சேர்த்துள்ளது.

கஞ்சா புகைப்பதை கொஞ்சம் தவிர்த்திருந்திருக்கலாம். மீண்டும் வட சென்னை தானா.?

கோவிந்த் வசந்தாவின் இசை படத்தோடு நாமும் பயணம் அடைய பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் காட்சிகள் ஒவ்வொன்றையும் செதுக்கியிருக்கிறார். படத்தில் மிகப்பெரும் பங்கு வகித்திருப்பவர் எடிட்டர்.

பைட் க்ளப் – ஆக்‌ஷன் அதிரடி…

Facebook Comments

Related Articles

Back to top button