Spotlightவிமர்சனங்கள்

விநோதய சித்தம் – விமர்சனம் 4/5

முத்திரக்கனி, தம்பி ராமையா, ஸ்ரீரஞ்சனி நடித்து சமுத்திரக்கனியே இயக்கியிருக்கும் படம் தான் “விநோதய சித்தம்”. நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

கதைப்படி,

இரண்டு மகள் ஒரு மகன் என அழகான குடும்பத்தின் தலைவனாக தம்பி ராமையா. தலைவியாக ஸ்ரீரஞ்சனி.

ஒரு மிகப்பெரும் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். அலுவலகமாக இருக்கட்டும், வீடாக இருக்கட்டும் தான் இட்டதே சட்டம், தன்னால் தான் எல்லாம் நடைபெறுகிறது என்று நினைப்பு தம்பி ராமையாவிற்கு.

ஒரு விபத்தில் இறக்கும் தருவாயில் மேல் உலகத்தில் உள்ள கால பைரவனாக வரும் சமுத்திரக்கனியை சந்திக்கிறார். தனக்கு கடமைகள் நிறைய இருக்கிறது. சிறிது காலம் தரும்படி காலபைரவனிடம் கெஞ்சுகிறார் தம்பி ராமையா.

அவரின் கோரிக்கையை ஏற்று மூன்று மாத காலம் பூமியில் உயிரோடு வாழ்ந்து கடமையை முடித்து வாருங்கள். அதுவரை நானும் உங்களோடு தான் இருப்பேன் என்று கூறிவிடுகிறார் கால பைரவரான சமுத்திரக்கனி.

சரி என்று ஒப்புதலோடு மீண்டும் பூமிக்கு திரும்புகிறார் தம்பி ராமையா. அவரோடு சேர்ந்து வருகிறார் சமுத்திரக்கனி.

இந்த மூன்று மாத காலத்திற்குள் தம்பி ராமையா தனது கடமையை செய்தாரா.? இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தெறிக்கவிடுபவர் தம்பி ராமையா. இந்த படம் முழுவதும் அவர் மேல் தான் பயணிக்கிறது என்றால் சும்மா விடுவாரா.? வேற மாதிரி சம்பவம் பண்ணிட்டாரு. கம்பீரமாக நடக்கும்போதாக இருக்கட்டும், கால பைரவனிடம் கெஞ்சும் காட்சிகளாக இருக்கட்டும், தனது கடமையை முடித்துவிட்டு கால பைரவனிடம் செல்லும் காட்சியாக இருக்கட்டும் என பல காட்சிகளில் பல இடங்களில் கைதட்டல் வாங்குகிறார். இந்த படத்திற்காக நிச்சயம் தேசிய விருதை பெறுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

கால பைரவனாக தோன்றும் சமுத்திரக்கனி, பல இடங்களில் வசனங்களை வாரி இறைத்திருக்கிறார். பேசும் ஒவ்வொரு வசனமும் ஒவ்வொருவரின் வாழ்விலும் தொடர்புடையதாகவோ, தொடர்புபடுத்தும்படியாகவோ நிச்சயம் இருக்கும். படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றால் அது வசனங்கள் தான்.

அதில் சில’ “சம்பவங்கள் நேரங்களால் நடத்தப்படுகிறது. அந்த சம்பவத்துக்குள்ள நாம இருக்கோம்.”

இருக்குறவனுக்கு இருக்குறதெல்லாம் பிரச்சனை, இல்லாதவனுக்கு இல்லைண்ட்றது மட்டும் தான் பிரச்சனை

ஒற்றைச் சூரியன் ஒரே நேரத்தில் ஒரு கோடி நதிகளில் நீராடுவதை போல…….” உள்ளிட்ட வசங்கள் பல கைதட்டல் பெறுகின்றன.

படத்தின் இறுதியில், “”சொர்க்கத்துல ஜாதி, மதம், இனம், மொழி எதுவும் கிடையாது,

அப்போ நரகத்துல இருக்கா.?

அங்க இருந்து தான் உங்கள் கூட்டிட்டுப் போறேன்”

என்று கூறி முடிக்கும் போது ஒரு மிகப்பெரும் சவுக்கடி ஒரு சிலருக்கு நிச்சயம் அவர்கள் மேல் விழுந்திருக்கும்.

மகளாக சஞ்சிதா ஷெட்டி, மகனாக தீபக், நண்பனாக முனீஷ்காந்த் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து பாராட்டைப் பெற்றுள்ளனர்.

எமோஷ்னல் காட்சிகளில் தம்பிராமையா துடிக்க, கண்களில் துளி கண்ணீர் எட்டி பார்க்க வைத்து விடுகிறார் இசையமைப்பாளர் சத்யா. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு பக்கபலமாக இருந்துள்ளது.

கதை, வசனம், திரைக்கதை என அனைத்தையும் நேர்த்தியாக கோர்த்து “விநோதய சித்தம்” என்ற ஒரு அழகான பூமாலையை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி.

விநோதய சித்தம் – தமிழ் சினிமாவில் அவ்வப்போது தோன்றும் ”அத்திப் பூ”

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close