தமிழகத்தில் நிலவும் மதுக் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து உருவாக்கத்தில் டி.ராஜேந்தர் பாடி பாலமுரளி பாலு இசை அமைத்திருக்கும் பாடலின் தலைப்பை இயக்குநர் கே.வி.ஆனந்த் வெளியிட்டார். பாடலுக்கு “ஏந்திரு அஞ்சலி ஏந்திரு” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக கபிலன் வெளியிட்ட குறிப்பில் “இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கிய அஞ்சலி படத்தின் இறுதிக் காட்சியில் மரண உறக்கத்தில் இருக்கும் தன் சகோதரியை எழுப்ப முயற்சிக்கும் சிறுமியின் கதறல் வார்த்தைகள்தான் ஏந்திரு அஞ்சலி ஏந்திரு. மது மயக்கத்தில் இருக்கும் நம் சகோதர சகோதரிகளை எழுப்ப முயற்சிக்கும் இசைக்குரல்தான் இந்தப் பாடல். அந்தப் படத்தில் வருவது போலவே மழலைப் பிழை மாறாமல் தலைப்பு வைத்திருக்கிறோம். பிழையில் இருந்தே தொடங்குவோம். தலைப்பை வெளியிட்ட இயக்குநர் கே.வி.ஆனந்த் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி” என்று கூறியிருக்கிறார். பாடலின் தலைப்பைத் தொடர்ந்து செப்டம்பர் முதல் வாரம் பாடல் முன்னோட்டத்தையும் செப்டம்பர் இரண்டாம் வாரம் முழுப் பாடலையும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.