2023 ஆம் ஆண்டின் முதல் பாதி அறிமுக இயக்குனர்கள் பலர் தமிழ் சினிமாவை தாங்கி பிடித்திருக்கிறார்கள்.
ஆம், இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் தமிழ் சினிமாவின் உயர் நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படங்களான வாரிசு மற்றும் துணிவு இரு படங்களும் ப்ளாக் பஸ்டர் படங்களாக ஹிட் அடித்தது. வெற்றியோடு ஆரம்பித்தது இந்த வருட பயணம்.
அதனைத் தொடர்ந்து வெளிவந்த எந்த படங்களும் பெரிதாக சோபிக்காதது தமிழ் சினிமாவை கவலையில் ஆழ்த்தியது. அதே சமயம் மணிரத்னம், வெற்றிமாறன் போன்ற சில ஜாம்பவான்களின் படங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. பல மூத்த இயக்குனர்களும் தடுமாறிக் கொண்டிருந்த வேலையில், தமிழ் சினிமாவை தலைதூக்கி நிற்க வைக்கும் விதமாக சில அறிமுக இயக்குனர்களின் படங்கள் வெளிவந்து மிகப்பெரும் பெயரையும் வெற்றியையும் தேடித் தந்தது. இருந்தாலும், இளம் அறிமுக இயக்குனர்களின் படையெடுப்பு என்பது ”கிணறுகளில் வரும் புது ஊற்று போல” தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமான ஒன்று தான்.
அனுபவம் வாய்ந்த இயக்குனர்களின் இயக்கத்தின் ஈர்ப்பால் பலரும் தமிழ் சினிமா மீது அதிகளவும் நாட்டம் கொண்டு படையெடுத்து வருகின்றனர்.
அதில் சில இளம் இயக்குனர்கள் வெற்றிகண்டு சினிமாவில் வேரூன்றி நிற்கின்றனர். அந்த வரிசையில், யாத்திசை, அயோத்தி, டாடா, குட் நைட் மற்றும் போர் தொழில் உள்ளிட்ட படங்கள் அறிமுக இயக்குனர்களால் இந்த வருடம் வெளியான படங்கள். இந்த படங்கள், விமர்சன ரீதியாக மட்டுமல்லாது வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள்.
இம்மாதிரியான தனித்துவமான கதையம்சமும் தனித்துவமான திரைக்கதையுமே மக்கள் மத்தியில் பாராட்டினை பெற்று வரவேற்பு பெறும் படங்களாக இருக்கிறது.
இந்த அறிமுக இயக்குனர்கள் கொடுத்த வெற்றியால், பல உதவி இயக்குனர்களிடம் கதை கேட்கும் படலத்தில் இறங்கியிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் பலர்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் இனி வரும் காலங்களில் இம்மாதிரியான தனித்துவமான படைப்புகள் பல வருவதற்கு பல அறிமுக இயக்குனர்கள் படையெடுப்பார்கள் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
வாழ்க தமிழ் சினிமா! வளர்க இளம் அறிமுக இயக்குனர்கள்!!