
இயக்குனர் மாயோன் சிவா இயக்கத்தில் அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் இந்த “கன்னி”.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ராஜ்குமார் மற்றும் இசையமைத்திருக்கிறார் செபாஸ்டியன் சதீஷ்.
சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் செல்வராஜ் படத்தினை தயாரித்திருக்கிறார்.
கதைக்குள் சென்றுவிடலாம்..
மலைகிராமத்தில் நடக்கும்படியாக கதை நகர்கிறது. நாயகி அஸ்வினி சந்திரசேகர், தனது பூர்விகத்தை விட்டு, தனது அண்ணன் மகள் இருவரையும் அழைத்துக் கொண்டு காட்டு வழியாக உறவினரின் வீட்டிற்குச் செல்கிறார்.
அங்கு வாழ்ந்து வரும் அஸ்வினி சந்திரசேகரை கொலை செய்வதற்காக ஒரு கும்பல் அந்த கிராமத்திற்கு வருகிறது. அஸ்வினியை கொலை செய்து அவரிடம் இருக்கும் ஒரு பொருளை எடுப்பதற்காக அங்கு வருகிறது.
இந்த கும்பல் யார்.? எதற்காக அஸ்வினியை கொலை செய்ய துடிக்கிறார்கள்?? அஸ்வினி சந்திரசேகரின் பின்புலம் என்ன ??? என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகி அஸ்வினி சந்திரசேகரை சுற்றியே கதை முழுவது பயணப்படுகிறது. தனது அண்ணியார் மீது இருக்கும் பாசத்தை அண்ணனிடம் கூறும் இடமாக இருக்கட்டும், தன்னை கொல்ல வருபவர்களை கையில் கிடைக்கும் ஆயுதத்தை எடுத்து அவர்களை வதம் செய்யும் இடமாக இருக்கட்டும் என பல இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
பல படங்களில் நடித்த மணிமாறன் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். மணிமாறனை வில்லனாகவே பார்த்து பழகிய நமக்கு, நல்லவனாகவும் ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறது.
இவர்களைத் தவிர தாரா க்ரிஷ், ராம் பரதன் உள்ளிட்ட நடிகர்களும் கிராம மக்களும் மிக இயல்பாக நடித்து தங்களது கேரக்டர்களை செய்து முடித்திருந்தனர்.
இயற்கை முறை வைத்தியத்தை வைத்து கதையானது நகர்கிறது. அவ்வைத்தியத்தின் மகிமையையும் அதன் பலன்களையும் தடுக்க நினைக்கும் ஆங்கிலேய மருந்து கம்பெனியை எதிர்த்து போராடும் ஒரு தனித்துவமான கதையை கையில் எடுத்த இயக்குனருக்கு வாழ்த்துகள்.
கதையின் ஓட்டத்தில் இன்னும் சற்று உயிர் இருந்திருந்திருக்கலாம். முதல் பாதியில் கதையை முழுவதுமாக தொடாமல் இருந்தது சற்று ஏமாற்றமளிக்கிறது.
பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு இருபெரும் தூண்களாக வந்து நிற்கிறது.
குறைகள் சில எட்டிப் பார்த்தாலும் ஒரு நல்ல நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட இந்த “கன்னி” படக்குழுவிற்கு மிகப்பெரும் வாழ்த்துகள்.
கன்னி – போற்றப்படுவாள்…



