Spotlightசினிமா

கால்பந்து களத்தில் சிறார்களின் கனவு… செப்டம்பர் 4-ல் திரைக்கு வரும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’!

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘7 ஸ்டார் பாய்ஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வரும் செப்டம்பர் 4-ம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

கால்பந்தாட்ட விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படத்தை இயக்குநர் நிகில் பிரேம் ராஜ் இயக்கியுள்ளார்.

படத்தில் ஆண்டனி வர்கீஸுடன் இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரரும், நடிகருமான ஐ. எம். விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஃபயஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

மலையாளத்தில் ‘ஆனபரம்பிலே வேர்ல்டு கப்’ என்ற பெயரில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தை, பீனிக்ஸ் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் டி. அசோக் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்.

கால்பந்தை கனவாகக் கொண்ட சிறார்களின் கதை!

‘7 ஸ்டார் பாய்ஸ்’ திரைப்படம் கால்பந்து விளையாட்டின் மீது தீராத ஆர்வம் கொண்ட 12 வயதுக்குட்பட்ட சிறார்களை மையமாகக் கொண்டுள்ளது.

உள்ளூரில் நடைபெறும் கால்பந்து போட்டிகளின்போது தனது திறமையான ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் ஆண்டனி வர்கீஸை, அந்த சிறார்கள் தங்களது ரோல் மாடலாக கருதுகின்றனர்.

கால்பந்து விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் இருந்தாலும், அதற்கான முறையான மைதானம் இல்லாததால் சிறார்கள் சிரமப்படுகின்றனர். இதனை அறிந்த ஆண்டனி வர்கீஸ், அவர்களுக்காக ஒரு மைதானத்தை ஏற்படுத்தித் தருகிறார்.

அந்த மைதானத்தில் சிறார்கள் உற்சாகமாக விளையாடுவதையும், அவர்களிடம் இருக்கும் கால்பந்து திறமையையும் கண்டு வியக்கும் ஆண்டனி வர்கீஸ், அவர்களுக்கு முறையான பயிற்சி கிடைத்தால் அவர்களது திறமை மேலும் வெளிப்படும் என நினைக்கிறார்.

இதையடுத்து கால்பந்து உலகில் பிரபலமான பயிற்சியாளரான ஐ. எம். விஜயனை அணுகுகிறார். அதன் பின்னர் சிறார்கள் கால்பந்து விளையாட்டின் பல்வேறு நுட்பங்களை கற்றுக்கொண்டு போட்டிகளில் பங்கேற்கத் தொடங்குகின்றனர்.

மாநில அளவில் நடைபெறும் போட்டியில் இந்த சிறார்கள் கோப்பையை வெல்ல முடிந்ததா? அவர்களின் கால்பந்து கனவு நிறைவேறியதா? என்பதே இப்படத்தின் மையக் கதை.

“மஞ்சும்மல் பாய்ஸ் போல் வரவேற்பு கிடைக்கும்” – தயாரிப்பாளர் டி. அசோக்

படம் குறித்து தயாரிப்பாளர் டி. அசோக் கூறுகையில், ‘7 ஸ்டார் பாய்ஸ்’ ஒரு கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம் என்று தெரிவித்துள்ளார்.

கால்பந்து மீது ஆர்வம் கொண்ட சிறார்களின் கனவு, அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு மற்றும் அவர்களின் திறமை அங்கீகரிக்கப்படுவதற்கான போராட்டம் ஆகியவற்றை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் போலவே, ‘7 ஸ்டார் பாய்ஸ்’ திரைப்படத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தயாரிப்பாளர் டி. அசோக் தெரிவித்துள்ளார்.

கால்பந்து விளையாட்டு, சிறார்களின் கனவு, நட்பு மற்றும் வெற்றிக்கான போராட்டம் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘7 ஸ்டார் பாய்ஸ்’, செப்டம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button