
சிதாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில், தி ஒன் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, மகிழ்ச்சியடைந்த படக்குழுவினர் ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னையில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர்கள் சுனில் ரெட்டி, ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ, மமீதா பைஜூ, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
“ஜி.வி. பிரகாஷ் எனக்கு நண்பர் என்பதைவிட ஆசான்” – பாலாஜி வேணுகோபால்
நிகழ்ச்சியில் பேசிய பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், முதன்முறையாக பாடலாசிரியராக ஒரு வெற்றி விழா மேடையில் நிற்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தில் அருண் ராஜா காமராஜுடன் இணைந்து பாடல்களை எழுதியுள்ளதாக தெரிவித்த அவர், தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு நன்றி தெரிவித்தார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் தனது நண்பர் என்பதைவிட தனக்கு ஆசான் போன்றவர் என்றும், இசையின் பல்வேறு நுட்பங்களை அறிந்த சிறந்த இசையமைப்பாளர் என்றும் அவர் பாராட்டினார்.
மேலும், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வெங்கியின் ஆர்ட் மட்டுமல்ல, அவரது ஹார்ட் என்றும் பாலாஜி வேணுகோபால் குறிப்பிட்டார்.
சூர்யாவை கடந்த காலத்தில் நேர்காணல் செய்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்ட அவர், சிறிய விஷயத்திற்குக் கூட மன்னிப்பு கேட்கும் அளவுக்கு சூர்யாவிடம் இருக்கும் மனிதநேய பண்பு தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்தார்.
“சூர்யாவுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்” – பவானி ஸ்ரீ
நடிகை பவானி ஸ்ரீ பேசுகையில், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், தனது கதாபாத்திரத்தை இயக்குநர் சிறப்பாக வடிவமைத்திருந்ததாக தெரிவித்தார்.
மேலும், சிறுவயது முதலே திரையில் பார்த்து ரசித்த சூர்யாவுடன் இணைந்து நடிக்கும்போது முதலில் பயமாக இருந்ததாகவும், ஆனால் படப்பிடிப்பு தளத்தில் சூர்யா இயல்பாக பழகி, தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய ஊக்கம் அளித்ததாகவும் கூறினார்.
ராதிகா சரத்குமார் மற்றும் மமீதா பைஜூ ஆகியோருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்ததாகவும், ஊட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பு நாட்கள் மறக்க முடியாதவை என்றும் அவர் தெரிவித்தார்.
“சூரியவம்சத்திற்குப் பிறகு நான் ரசித்த குடும்பப் படம்” – ராதிகா சரத்குமார்
நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில், இப்படத்தின் வெற்றிக்கு காரணமான ஊடகத்தினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஒரு குடும்பத்திற்குள் இருக்கும் பாசம், உறவு மற்றும் உணர்வுகளை அழகாக பதிவு செய்திருப்பதாக அவர் பாராட்டினார்.
இயக்குநர் வெங்கி அட்லூரி கதையை கூறியபோது, “இந்தக் காட்சிகளில் எல்லாம் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டாரா?” என்று தான் கேட்டதாகவும், சூர்யா அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க துணிச்சலுடன் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
மமீதா பைஜூவை கதாநாயகியாக தேர்வு செய்தது சரியான முடிவு என்றும் அவர் கூறினார்.
மேலும், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை தனது கணவர் சரத்குமார் உடன் திரையரங்கில் பார்த்ததாகவும், பொதுவாக படங்களை விமர்சித்து பல விஷயங்களை சுட்டிக்காட்டும் சரத்குமார், இந்தப் படத்தை பார்த்துவிட்டு “I love this movie” என்று பாராட்டியதாகவும் ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.
‘சூரியவம்சம்’ படத்திற்குப் பிறகு தான் மிகவும் ரசித்த குடும்பப் படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
“படத்தின் இசைக்கு கிடைத்த பாராட்டு உண்மையான வெற்றி” – ஜி.வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர் வெங்கி அட்லூரிக்கும் நன்றி தெரிவித்தார்.
வெங்கி அட்லூரியுடன் ஏற்கனவே ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களில் பணியாற்றியதாகவும், தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மூன்று படங்களும் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இதன் மூலம் தங்களது கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
‘வாத்தி’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்கு வெங்கி அட்லூரி முக்கிய காரணம் என்றும் ஜி.வி. பிரகாஷ் குறிப்பிட்டார்.
மேலும், ஹைதராபாத்தில் பலரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இசையைப் பாராட்டியதாகவும், தங்களாக முன்வந்து இசையைப் பாராட்டியது தனக்கு மிகவும் பெருமையாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
படத்திற்காக இறுதிக்கட்டத்தில் மூன்றே நாட்களில் இரண்டு பாடல்களை உருவாக்கியதாகவும், அந்த இரண்டு பாடல்களும் தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
“சூர்யாவின் துணிச்சலே இந்த வெற்றிக்கு காரணம்” – வெங்கி அட்லூரி
இயக்குநர் வெங்கி அட்லூரி பேசுகையில், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
இதற்கு முன் தான் இயக்கிய ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களுக்கு அளித்த ஆதரவைப் போலவே, இந்தப் படத்திற்கும் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் ஆதரவு அளித்துள்ளதாக கூறினார்.
தமிழில் தான் முதன்முறையாக இயக்கிய இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டபோது மிகுந்த பதற்றத்தில் இருந்ததாகவும், ஆனால் படம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்கள் தன்னை பாராட்டி, கை குலுக்கி, கட்டியணைத்து தங்களது அன்பை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
மமீதா பைஜூவை தூய ஆத்மா என்றும், தனக்கு கிடைத்த தங்கை போன்றவர் என்றும் வெங்கி அட்லூரி பாராட்டினார்.
ஜி.வி. பிரகாஷ் குமாருடன் ‘வாத்தி’ திரைப்படத்திலிருந்து தொடங்கிய நட்பு தற்போது சகோதரத்துவமாக மாறிவிட்டதாகவும் அவர் கூறினார்.
சூர்யா இந்தக் குடும்பக் கதையை கேட்டு எந்தவித தயக்கமும் இல்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், இயல்பிலேயே அவரிடம் இருக்கும் துணிச்சல்தான் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் வெங்கி அட்லூரி தெரிவித்தார்.
மேலும், சூர்யா ரசிகர்களுக்கு எப்போதும் புதுவிதமான விருந்தை வழங்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதாகவும், அதுவே ரசிகர்கள் மீது அவர் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு என்றும் கூறினார்.
“திரையரங்குகளில் விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும், படத்தை பார்க்கும் ரசிகர்களின் ஒவ்வொரு கரவொலிக்கும் நன்றி” எனக் கூறிய வெங்கி அட்லூரி, தொடர்ந்து ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்திற்கு ஆதரவு வழங்குமாறு ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.





