
அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு பெருநகரை தேடி அலைவதற்கு பதிலாக அது வீட்டுப்பக்கத்திலே கிடைக்கிறது என்றால் அது நல்ல விசயம்தானே ? அப்படியொரு வசதியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள் சிவத்தையாபுரம் கிராம பிரமுகர்கள்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் யூனியன் பகுதியில் இருக்கிறது சிவத்தையாபுரம் கிராமம். ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், விவசாயமே முக்கிய தொழில். நெல், வாழை போன்ற நஞ்சை பயிர்களே இங்கு அதிகம் விளைவிக்கப்படுகிறது.
ஒட்டன்சத்திரம், திருப்பூர்,கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கும் இங்கிருந்து வாழைத்தார், வாழை இலைகட்டுகள் அனுப்பி வைக்கப்படுகிறது.
சிவத்தையாபுரத்தை சுற்றி சாயர்புரம், புதுக்கோட்டை உள்பட 40-க்கு மேல் கிராமங்கள் இருக்கிறது. இங்குள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும் என்றால் சாயர்புரம் தவிர தெற்கே ஏரலுக்கோ வடக்கே தூத்துக்குடிக்கோதான் செல்ல வேண்டும்.
ஓரளவு வசதி வாய்ப்புள்ளவர்களுக்கு அது பிரச்னை இல்லை. மற்ற விவசாய கூலியாக இருப்போருக்கு இது கஷ்டமான ஒன்றுதான்.
அதுமட்டுமில்லாமல் ’பெருமளவில் விவசாய பொருட்கள் உற்பத்தி செய்கிற இடமாக இருந்தாலும் உற்பத்தி செய்யப்படுகிற பொருட்களை விற்பனை செய்வதற்கு பல நூறு கி.மீ தாண்டி சென்றே ஆகவேண்டியது இருக்கிறது.
அப்படியொரு நிலையில் விவசாய பிரமுகர்களின் எண்ணத்தில் உதித்துதான் இந்த வாரச்சந்தை திட்டம். கடந்த 35 வருடங்களுக்கு முன்பும் இதே இடத்தில் இது போன்று சந்தை இருந்து. அந்த அனுபமே இதற்கு காரணம்’ என்கிறார்கள்.
கடந்த 29.09.2018 அன்று ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், இந்த வார சந்தையை தொடங்கி வைத்தார்.
இது குறித்து சந்தை ஒப்பந்தகாரர்களில் ஒருவரான சேதுராமன், ‘’ சிவத்தையாபுரம் ஆனந்த விநாயகர் கோயில் திடலில் இந்த சந்தை கூடுகிறது.
குறிப்பிட்ட பொருட்கள் மட்டும்தான் என்று இல்லாமல் மக்களுக்கு தேவையான அத்தனை பொருட்களும் கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
முன்பெல்லாம் மார்க்கெட்க்கு போகணும்னா நிறைய பணத்தை திரட்டிக்கிடு போகணும். ஆனா இங்கே குறைஞ்ச விலையில வீட்டுக்கு தேவையான பொருட்களை அத்தனையும் கிடைக்கிறது.
ஸ்வீட் வகைகள், காய்கறி, பழவகைகள், நாட்டுக் கோழி,கருவாடு, ஜவுளி, விளையாட்டு பொருட்கள், கருப்பட்டி, செக்கில் ஆட்டிய எண்ணைய், மளிகை சாமான்கள் கிடைக்கிறது என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக வருகிறது.
அதுமட்டுமில்லை எங்கேயுமே இல்லாத வகையில் முதன் முதலாக சத்யா ஏஜென்சி சார்பில் ஷோ ரூம் போடப்பட்டிருக்கிறது. அதுபோல் எமஹா, ஹீரோ, புல்லட் என பல நிறுவனங்களும் ஷோ ரூம்-யை இங்கே போட்டு வர்றாங்க. இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
போக்குவரத்துக்கு கஷ்டமில்லை நல்ல பஸ் வசதி இருக்கிறது. மற்றபடி அடிப்படை தேவைகளை நாங்க செய்து கொடுத்திருக்கிறோம். வியாபாரிகளிடம் மிக குறைந்த வாடகையே வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் ரூ 20 லட்சம் வரை தினசரி மொத்த விற்பனை நடந்து வருவதாக வியாபாரிகள் சொல்வதை வைத்து பார்க்க முடிகிறது.
பண்டிகைகாலங்களில் அதற்கு தேவையான பொருட்கள் அதிகம் கிடைக்கும்படி செய்ய இருக்கிறோம். அதாவது பொங்கல் என்றால் கரும்பு, வாழைத்தார், மஞ்சள் என அதற்கு தேவையான பொருட்கள் குறைந்த விலையில் தாராளமாக கிடைக்கும். அதுபடியே எல்லா பண்டிகையிலும் அதற்குறிய பொருட்கள் கிடைக்கும்படி செய்ய இருக்கிறோம்’’ என்றார்.





