Spotlightசினிமா

பாதியில் நிறுத்தப்பட்ட ‘வர்மா’… தமிழ் திரையுலகில் பரபரப்பு!

துருவ் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் படம், `வர்மா’. இந்தப் படத்தை முதல் காப்பி அடிப்படையில் இயக்கித் தர பாலா ஒப்பந்தமாகியிருந்தார். படத்தின் ஃபைனல் வெர்ஷனைப் பார்த்த தயாரிப்பு நிறுவனம், தற்போது வேறோர் இயக்குநரை வைத்து இயக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. இது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளிவந்த தெலுகு படம், `அர்ஜூன் ரெட்டி’. தெலுகு மட்டுமல்லாது, படம் தென்னிந்திய முழுவதுமே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை கேரளாவை மையமாகக் கொண்ட E4Entertainment நிறுவனத்தின் முகேஷ் R மேத்தா பெற்றிருந்தார். முகேஷும், நடிகர் விக்ரமும் நெருங்கிய நண்பர்கள். அதனால், விக்ரமின் மகனான துருவை வைத்து இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டார்.

இதைத் தொடர்ந்து துருவை அறிமுகம் செய்ய பாலாவும் ஒப்புக்கொண்டார். அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா தொடங்கியது. சில மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் டிரெயிலரும் வெளியானது. அதற்கு மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்து இருந்தது. படத்தை காதலர் தினத்தன்று வெளியிட திட்டமிட்டிருந்தது தயாரிப்புக்குழு.

இந்த நிலையில், தயாரிப்பாளர் தரப்பிருந்து ஒரு பரபரப்பு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது, அதில் கூறியிருப்பதாவது, `படத்தின் ஃபைனல் வெர்ஷன் எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை. ஒரிஜினலுக்கும் இதுக்கும் தொடர்பில்லாமல், இயக்குநர் கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறார். அதனால் இதை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லை. அதற்கு பதில் ஷூட்டிங்கை மீண்டும் புதிதாக தொடங்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம். துருவ்தான் படத்தின் ஹீரோவாக நடிப்பார். ஆனால், இந்தப் படத்தை வேறொருவர் இயக்குவார்.

படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்தும், இயக்குநர் குறித்தும் பின்னர் அறிவிப்போம். இது எங்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தெலுங்கு பதிப்பின் கதைக்கருவை அப்படியே தமிழ் ரசிகர்களுக்குக் கொடுப்பதில்தான் எங்களுக்கு விருப்பம். படம் சொன்னதுபோலவே ஜூன் மாதம் வெளியாகும்.’ என்ற அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button