
இன்று மக்களவையில் பேசிய அதிமுக எம்.பி தம்பிதுரை பேசுகையில், “இந்த இடைக்கால பட்ஜெட்டில் மக்களைக் கவரும் ஏராளமான கவர்ச்சித் திட்டங்கள் இருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் இதை அறிவித்திருக்கலாம். ஆனால், அப்போதெல்லாம் அறிவிக்கவில்லை. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் என்பது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைப் பஞ்சம் நிலவுகிறது.
ஏறக்குறைய 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று வாக்குறுதி அளித்தது என்னாயிற்று? பிரதமரின் ‘விவசாயிகள் திட்டம்’ என்பது நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பொருந்துகிறது. நிலம் இல்லாத விவசாயிகளுக்கு உதவவில்லை.
என்னுடைய தொகுதியில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் அனைத்தும் முறையாகக் கட்டப்படவில்லை. நகரில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் இவை கட்டப்பட்டுள்ளன. மிக தொலைவில் உள்ள கழிப்பறைகளை பெண்கள் எவ்வாறு பயன்படுத்த முடியும்? பிரதமர் மோடி, மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்தி வருகிறார், பேசி வருகிறார். ஆனால், சீனாவில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே வாங்கப்படுகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் வாங்குவதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்தது?
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறுதொழில்கள், அமைப்பு சாரா தொழில்கள் அனைத்தும் நசிந்து, அழிந்துவிட்டன. மாநிலங்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டன. தமிழகத்துக்கு மட்டும் மத்திய அரசு தர வேண்டிய நிதி ரூ.12 ஆயிரம் கோடி நிலுவையில் இருக்கிறது. மத்திய அரசு தராமல் இன்னும் தாமதிக்கிறது. இதுதான் கூட்டாட்சியா?. எந்த விதமான பணமும் இல்லாமல் எங்கள் மாநிலத்தை எவ்வாறு மேம்படுத்த முடியும்” என்று அனல் பறக்க பேசியுள்ளார் தம்பிதுரை.
ஒருபக்கம் தேர்தல் கூட்டணி குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் அதிமுக பேசி வரும் நிலையில், மறுபக்கம் மக்களவையில் பாஜக திட்டங்களை கிழித்து தொங்கவிட்டுள்ளது. இதனால், உண்மையில் அதிமுக நிலைப்பாடு என்ன என்பதில் குழப்பமே நீடிக்கிறது.





