
கெளதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ளது ராட்சசி. இப்படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரபு தயாரித்துள்ளார்.
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய ஜோதிகா, ‘ இப்படத்தில் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன். படத்தில் சொல்லப்பட்ட விஷயம் மிகவும் முக்கியமான ஒன்றாக நான் பார்க்கிறேன்.
கல்வியை பற்றி பேசுவதால், இது சாட்டை படமாக இருக்குமோ அல்லது பெண் சமுத்திரக்கனியாக இருப்பார்களோ என்றெல்லாம் கூறுகிறார்கள்.
100 படங்கள் இதே போன்று வந்தாலும் கூட, இது தேவை தான். சமூகத்துக்கு தேவை தான். பெரிய பட்ஜெட் படங்களில் கூட ஒரே கதையை வேறொரு பார்வையில் சொல்கிறார்கள். அதைப் பற்றி பேச யாருமே தயாராக இல்லை. நாயகன் வருவார், 2-3 நாயகிகளை காதலிப்பார், இடைவேளை, எமோஷன், க்ளைமாக்ஸ் என இருக்கும். அதைப் பற்றி யாருமே பேசுவதே இல்லை. அதை விட்டுவிட்டு இந்தப் படம் மட்டும் ஏன் பள்ளிக்கூடம், சாட்டை மாதிரி இருக்கிறது என சொல்வது ஏன் என தெரியவில்லை.
அகரன் பவுண்டேஷனில் 99% மாணவர்கள், அரசுப் பள்ளியிலிருந்து வந்திருக்கிறார்கள். அதில் சுமார் 35% மாணவர்களிடம் பேசும் போது, அவர்களது வகுப்பறைக்கு ஒரு வருடமளவுக்கு ஆசிரியர்களே வரவில்லை. ஆசிரியர்களே இல்லாமல் இருக்கிறார்கள். அந்த மாதிரியான ஒரு சூழலைக் கொடுத்துவிட்டு, எப்படி நீட் தேர்வு எழுதச் சொல்ல முடியும். தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அரசாங்க பள்ளியில் படித்தவர்கள் தான். ஆகவே, இதே மாதிரியான கருத்துகள் 100 படத்தில் வந்தால் கூட நிம்மதியாக உட்கார்ந்து பார்க்கலாம்.
இந்தப் படத்தில் நடித்துள்ள பூர்ணிமா பாக்யராஜ் மேடம் தான் படப்பிடிப்பில் என் துணை. ஒரு எமோஷன் காட்சியில் இருவரும் இணைந்து நடித்துள்ளோம். அவர் ஒரு அற்புதமான நடிகை. இதர நாயகிகளுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு அமையவில்லை. பெண்ணோடு ஒரு காட்சியில் நடித்தால், அதன் அனுபவமே புதுமையாக இருக்கும். இப்படத்தில் என்னோடு நடித்த டீச்சர்கள் அனைவருக்குமே நன்றி. அவர்கள் ரொம்ப எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். அதற்கு ஈடுகொடுத்து நடிப்பதே கடினமாக இருந்தது.
5 ஆண்டுகளுக்கு முன்பு என் பெண்ணுடைய பள்ளி ஆண்டுவிழாவில் டீச்சர் ஒருவர் பேசியதை இங்கு கூறலாம் என நினைக்கிறேன். ஏனென்றால் அந்த வார்த்தைகளை கேட்டவுடன் அதனை என் வாழ்க்கையில் கடைப்பிடித்து வருகிறேன். மலையில் உயரமான இடத்துக்கு ஏறிவிட்டு, கீழே நிற்பவர்களை பார்ப்பதற்கு பெயர் வெற்றி என இருக்கலாம். அது வாழ்க்கையில் ஒரு சாதனை கிடையாது. எது முக்கியம் என்றால், மலை ஏறும் போது கிடைத்த அனுபவம் தான் அழகாக இருக்க வேண்டும்.
சுற்றியிருப்பவர்களும் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டும். இந்த வார்த்தைகளை என் 2-வது திரையுலக பாதையில் ஏறும் போது, எனக்கு ரொம்பவே அழகான கதைகள் வருகிறது. நான் அதிலிருந்து சிறந்ததை தேர்வு செய்கிறேன். அதுக்கு மேல் பெண்களுக்கு மரியாதை கொடுக்கிற ஆண்களை அதிகமாக இந்தப் பயணத்தில் தான் சந்தித்திருக்கிறேன். அம்மா, பெண், நடிகை என்ற வரிசையில் இப்போது தான் ரொம்ப திருப்தியாக இருக்கிறது. அதுவே என் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையாக நினைக்கிறேன்.





