Spotlightவிமர்சனங்கள்

ஹவுஸ் ஓனர்; விமர்சனம் 3.75/5

ய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ’ஆடுகளம்’ கிஷோர், ஒரு அல்சிமா நோயாளி… சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு, ஒரு சிறு குழந்தை போல நடந்து கொள்வதுமான ஒரு விதமான மனநிலை சரியில்லாதவர்.

இவரது மனைவியாக வருபவர் ஸ்ரீரஞ்சனி. தனது கணவரை குழந்தையாக பாவித்து அவரி கவனித்து வருகிறார். கிஷோரின் நிகழ்வுகள் அவ்வப்போது சிறு வயது நினைவிற்கு அழைத்துச் செல்கிறது.

சென்னை பெருமழையில் தனியாக வீட்டில் சிக்கிக் கொண்ட கிஷோர் மற்றும் ஸ்ரீ ரஞ்சனி அங்கிருந்து தப்பித்தார்களா..?? இல்லையா..?? என்பதே படத்தின் மீதிக் கதை.

தனது கதாபாத்திரமாகவே மாறி நம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் ஆடுகளம் கிஷோர். அல்சிமா நோய் பாதித்தவராக அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது. இவரது சினிமா பயணத்தில் இவருக்கு ஒரு முக்கியமான படமாகவும், முக்கியத்துவம் வாய்ந்த படமாகவும் இது அமைந்துள்ளது.

அடுத்ததாக ஸ்ரீரஞ்சனி… பல படங்களில் நாயகனின் தாயாகவோ அல்லது நாயகியின் தாயாகவோ பார்த்திருப்போம்.. இந்த படத்தில் ஒரு நாயகியாக, அல்சிமா பாதித்த தனது கணவனை சிறு குழந்தைபோல் தாங்கி பிடித்து நடத்திய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உண்மையாகவே இந்த நடிப்பிற்கு அனைவரும் எழுந்து நின்று தான் கைதட்ட வேண்டும். அந்த கதாபாத்திரமாகவே மாறி, பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை எட்டிப் பார்க்க வைக்கிறார்.

சிறு வயது கதாபாத்திரத்தில் பசங்க கிஷோர் மற்றும் லவ்லின் சந்திரசேகர்.(நடிகை விஜி சந்திரசேகரின் மகள்) பிராமண முறைப்படியான நிச்சயதார்த்தில் ஆரம்பித்து திருமணம் வரையில் இருவருக்குமான காதல் பரவசப்படுத்துகிறது.

சின்ன சின்ன சிரிப்பு, சினுங்கல், ஏக்கம், காதல், என அனைத்தையும் கண் பார்வையில் நிலைநிறுத்தி விட்டார் லவ்லின் சந்திரசேகர். ஒரு அறிமுக நடிகை என்பது கூட தெரியாமல், அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். கண்ணழகி என்ற பட்டத்தை கொடுத்து விடலாம்.

பசங்க கிஷோர், வழக்கம்போல் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

படத்தின் இயக்கத்திற்கு இயக்குனர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் மெனக்கெடலை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலேயே கதாபாத்திரத்தை மனதில் நிற்க வைத்து விட்டார்.

இளமை காதலுக்கும் முதுமை காதலுக்கும் பெரிதாக ஒரு வித்தியாசமில்லை, காதல் காதல் தான். காதலிப்பவர்களின் காதலை பொறுத்து அந்த காதல் உயிர் வாழும். காதல் எந்த வயதிலும், எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காது என்ற ஒற்றை வரியைக் கொண்டு முழுப் படத்தையும் நிறைவாக கொடுத்திருக்கிறார் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்.

கலையையும் இவரே கவனித்து, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். 2015 ஆம் ஆண்டு சென்னையில் வந்த வெள்ளத்தை நம் கண் முன்னே நிறுத்தியுள்ளார். அது ’செட்’ தான் என்று லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனே சொன்னாலும் கூட யாரும் எளிதில் நம்ப மாட்டார்கள்… அந்த அளவிற்கு மிகவும் தத்ரூபமாக கலையை கொடுத்து படத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

அடுத்ததாக படத்திற்கு உயிர் கொடுத்திருப்பவர் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணா சேகர், 80 – 90 களில் ஒரு விதமான ஒளிப்பதிவும், 2015 களில் வேறு விதமான ஒளிப்பதிவும் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் கிருஷ்ணா. அதிலும், லவ்லின் சந்திர சேகரை காண்பித்த விதம் கொள்ளையழகு.

ஜிப்ரானின் பின்னனி இசை படத்தின் கதையோடு பயணிக்க வைத்துள்ளது.

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், இதற்கு முன் இரண்டு படங்களை இயக்கியிருந்தாலும், இப்படமே ஒரு சிறந்த இயக்குனராக அவதாரம் பெற வைத்துள்ளது என்றே கூறலாம்.

ஹவுஸ் ஓனர் – காதலின் வாழ்வியல்

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close