
கார்த்தி நடிப்பில் ‘மாநகரம்’ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ளது ‘கைதி’. படத்தின் ட்ரெய்லர் வெளியானதிலிருந்தே இந்த படத்தின் மீதான ஒருவிதமான எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டுவிட்டது.
கதைக்குள் சென்று விடுவோம்….
நரேன் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் சுமார் 900 கிலோ மதிப்பில் போதைப் பொருளை கடத்தல் கும்பலிடம் இருந்து கைப்பற்றுகிறார்கள்.
கொலை செய்த குற்றத்திற்காக பத்து வருடங்கள் கழித்து சிறை தண்டனை அனுபவித்து வெளிவருகிறார் கார்த்தி. தன் குழந்தையின் முகத்தை கூட காணாத கார்த்தி, தன் குழந்தையை காண செல்கிறார்.
சந்தேகத்தின் பேரில் போலீஸ் கார்த்தியை விசாரிக்க, அதேசமயம் நரேன் குழுவை கொல்ல கடத்தல் கும்பல் முயற்சிக்க,
போலீஸை அந்த கும்பலிடம் இருந்து நரேனோடு சேர்ந்து கார்த்தியுன் மீட்ட நினைக்கிறார். கார்த்தி அந்த கடத்தல் கும்பலை அழித்தாரா..??? தன் மகளை பார்த்தாரா..?? என்பதே படத்தின் மீதிக் கதை ..
பருத்திவீரன் படத்திற்கு பிறகு இப்படியொரு நடிப்பு அரக்கன் கார்த்தியை ‘கைதி’யில் தான் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு ப்ரேமிலும் தனது தனித்துவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது மகள் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிக்காட்டுவதில் இருக்கட்டும், இரக்கம் காண்பதிலாக இருக்கட்டும், ஆக்ஷனாக இருக்கட்டும் அனைத்திலும் தனது வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படம் கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் ஸ்டோனாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாநகரம்’ திரைப்படமும் ஒரே நாள் இரவில் நடக்கும் கதையாக இருக்கும், அதேபோல் இப்படமும் ஒரே நாள் இரவில் நடக்கும் படமாக உருவாகியிருக்கிறது.
எந்த பாடலும் இல்லாமல் பின்னனி இசையில் மீண்டும் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளார் இசையமைப்பாளர் சாம் சி எஸ். க்ளைமாக்ஸ் காட்சியில் இசையால் கண்களில் ஈரத்தை எட்டி பார்க்க வைத்துவிட்டார் இசையமைப்பாளர்.
தீம் மியூசிக் மிரட்டல்.
சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு ஆக்ஷன் காட்சிகளில் மிரள வைத்திருக்கிறது. கார்த்தியின் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
ஒரு போலீஸ் அதிகாரியாக நரேன் தனது நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார். ஜார்ஜ், தீனா, கல்லூரி மாணவர்கள் நால்வர் என அனைவரும் படத்திற்கு சரியான தேர்வு தான்.
மாநகரம் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்…
கைதி – இரவு நேர அதிரடி, ஆக்ஷன், மிரட்டல்..




