
துருவங்கள் 16 படத்தின் வெற்றிக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் படம் ‘மாஃபியா’. அருண்விஜய் , பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் இப்படம் உருவாகியிருக்கிறது.
கதைக்குள் போகலாம்..
போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக வருகிறார் அருண் விஜய். இவருடன் பணிபுரிந்து வருபவர் ப்ரியா பவானி சங்கர்.
சென்னையில், போதை பொருள் பழக்கத்திற்கு நாளுக்கு நாள் மாணவர்களில் ஆரம்பித்து பலரும் இதனால் பாதிக்கப்படுவதால், அதை ஒழித்துகட்ட கிளம்புகிறார் அருண்விஜய்.
இந்த, போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் யார்..?? அவரை அருண் விஜய் கண்டுபிடித்தாரா..?? அதன் பிறகு என்ன நடந்தது.??? என்பதே படத்தின் மீதிக் கதை.
மிரட்டலான தோற்றத்தில், மிடுக்கான உடற்கட்டோடு வந்து மிரட்டுகிறார் அருண் விஜய். நடிப்பிலும் தனது கேரக்டரை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.
வில்லனாக வரும் பிரசன்னாவிற்கு இப்படம் ஒரு சரியான தேர்வு, எந்த ஒரு பதட்டமும் இல்லாமல், ஒரு டானுக்கு உண்டான பாடி லேங்குவேஜ்ஜில் அமைதியாக வந்து வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார். அழகாக வந்து செல்கிறார் ப்ரியா பவானி சங்கர்.
முதல் பாதி பெரும் சோதனை கொடுத்தாலும், இரண்டாம் பாதி சற்று விறுவிறுப்பை ஏற்றுகிறது. அதிலும், க்ளைமாக்ஸ் காட்சிகளின் ட்விஸ்ட்டுகள் திரையரங்குகளில் கைதட்டல் சத்தத்தை வர வைத்துள்ளது.
காட்சிகளுக்கு காட்சி மிகவும் மெதுவான கதை நகர்வு படத்திற்கு மிகப்பெரும் சரிவு.
படத்தின் மேக்கிங்கில் தனது முழுத்திறமையை காட்டியிருக்கும் இயக்குனர் சற்று கதையிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இரண்டாவது அத்தியாயத்தையும் விரைவில் இயக்குனர் துவங்கவிருக்கிறார்.
கோகுல் பினாயின் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது.
ஜேக்ஸ் பிஜாயின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், பின்னனி இசை ஹாலிவுட் தரம்.
மாஃபியா – அடுத்த அத்தியாயத்தை கொஞ்சம் பார்த்து பண்ணுங்க பாஸ்…





