Spotlightவிமர்சனங்கள்

கதிர் – விமர்சனம்

தினேஷ் பழனிவேல் இயக்கத்தில் அறிமுக நடிகர்களான வெங்கடேஷ், சந்தோஷ் பிரதாப், ரஜினி சாண்டி, பாவ்யா ட்ரிகா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “கதிர்”. வரும் வெள்ளி முதல் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

கதைப்படி,

நாயகன் கதிர், பட்டப்படிப்பு முடித்துக் கொண்டு ஊரில் நண்பர்களுடன் ஊதாரித்தனமாக சுற்றித் திரிகிறார். கதிருக்கு அவரது தந்தை அட்வைஸ் செய்ய, கோபித்துக் கொண்டு சென்னை வருகிறார்.

சென்னையில் நண்பரின் வாடகை வீட்டில் தங்கிக் கொண்டு வேலை தேடுகிறார். வீட்டின் ஹவுஸ் ஓனராக வரக் கூடிய வயதான பெண்மணியான ரஜினி சாண்டியுடன் அடிக்கடி தகராறு செய்கிறார் கதிர். ஒரு கட்டத்தில் இருவரும் நண்பர்களாகி விடுகின்றனர்.

கதிர், ஐடி கம்பெனியில் வேலைக்கு தேர்வான நிலையில், அங்கு தனது கல்லூரி காதலியான பாவ்யா ட்ரிகாவை சந்திக்கிறார். நாயகியை கண்டதும் அங்கிருந்து கோபத்தில் சென்று விடுகிறார் கதிர்.

கதிர் எதற்காக காதலியை கண்டதும் வெறுத்துச் சென்றார்.? ஹவுஸ் ஓனர் ரஜினி சாண்டியின் வாழ்வில் என்ன நடந்தது.? அதன் பிறகு கதிரின் வாழ்க்கை என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.

கதிராக நடித்துள்ள படத்தின் நாயகன் வெங்கடேஷ், தனக்கு இது அறிமுகம் என்பது போல் இல்லாமல் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஆக்‌ஷன், செண்டிமெண்ட், காதல், என அனைத்திலும் தனது நடிப்பை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால், தமிழ் சினிமாவில் அசைக்க முடியா நாயகனாக வலம் வருவார் வெங்கடேஷ். இயல்பான கேரக்டராக நடித்து மனதில் நிற்கிறார் நாயகன்.

நாயகி பாவ்யா ட்ரிகா அழகு தேவதையாக வந்து செல்கிறார். கச்சிதமான நடிப்பு இல்லாவிட்டாலும், கண் அசைவு நடிப்பில் மனதை கவர்கிறார் நாயகி பாவ்யா ட்ரிகா.

ஹவுஸ் ஓனர் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி சாண்டி, கதைக்கேற்ற பொருத்தமாக இருந்தார். இப்படி ஒருவர் நம்மோடு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று கூறும் அளவிற்கு அந்த கதாபாத்திரத்தை செதுக்கியிருக்கிறார் இயக்குனர்.

மற்றபடி நண்பர்களாக வந்த அனைவரும் நடிப்பில் நம்மையும் திரைக்குள் கூட்டிச் செல்லும் அளவிற்கான மிதமான நடிப்பை கொடுத்திருந்தனர்.

ப்ளாஷ் பேக் காட்சியில் நடித்த சந்தோஷ் பிரதாப்பிற்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம். பண்ணையார்களை எதிர்த்து புரட்சி புரியும் புரட்சியாளனாக நடித்து அசத்தியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடித்தவரும் மனதில் நிற்கும் அளவிற்கு இதமான நடிப்பை கொடுத்துச் சென்றார்.

ஜெயந்த் சேது மாதவன் அவர்களின் ஒளிப்பதிவு காட்சிகளை ரசிக்க வைத்தது. கல்லூரி சண்டைக் காட்சி அற்புதம்

கதைக்கேற்று ரசனையோடு இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் பிரஷாந்த் பிள்ளை. பின்னனி இசையில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.

நல்ல ஒரு அருமையான கதையை கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர்.

கல்லூரி வாழ்க்கை கட்டம்,
ப்ளாஷ் பேக் போராட்ட வாழ்க்கை கட்டம்,
விவசாயத்தைக் கொண்டு வாழ்வில் முன்னேறும் கட்டம்
என மூன்று கட்டமாக வாழ்வியலை காண்பிக்க முனைப்பெடுத்திருக்கிறார் இயக்குனர். இந்த மூன்றையும் தனித்தனியாக மிகவும் அருமையான திரைக்கதை கொண்டு செய்தும் முடித்திருக்கிறார் இயக்குனர். மூன்று கட்டங்களையும் இணைத்து பார்க்கும் போது சற்று ஒட்டாமல் நின்றது போன்ற பீஃலை கொடுத்து விட்டார் இயக்குனர்.

ஆனால், தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு இயக்குனர் இப்படத்தின் மூலம் கிடைத்திருக்கிறார் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

”கதிர்” படத்தை தூக்கி வைத்து நிச்சயம் கொண்டாடலாம் என்று இல்லாமலும் கொண்டாட கூடாது என்று இல்லாமலும் ஒரு முறை கொண்டாடலாம் என்று இடையில் நின்று விட்டது.

Facebook Comments

Related Articles

Back to top button