
கிச்சா சுதீப் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் அனூப் பந்தாரி இயக்கத்தில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “விக்ராந்த் ரோணா”. 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாகி வெளிவந்திருக்கிறது. நிரூப் பந்தாரி, நீதா அசோக் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
பெரும் எதிர்பார்ப்பில் வெளியான விக்ராந்த் ரோணா, எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்ததா இல்லையா என்பதை பார்த்துவிடலாம்.
கதைப்படி,
அடந்த காட்டுப்பகுதி அடங்கிய கிராமம் ஒன்று உள்ளது., அங்கு மர்மமான சில நிகழ்வுகள் நிகழ்கிறது. தொடர்ச்சியாக சிறுமிகள் அங்கு கொலை செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில், அந்த அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் வரும் கார் ஒன்றில் ஒரு பெண்மணியும் அவரது மகளும் இருக்கின்றனர். ஒரு மர்மமான உருவம் அவர்கள் இருவரையும் தாக்கி விட்டுச் செல்கிறது. அதே சமயத்தில் அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் முண்டமாக கண்டெடுக்கப்படுகிறார்.
இதனையடுத்து, அங்கு புதிதாக இன்ஸ்பெக்டர் பதவிக்கு வருகிறார் கிச்சா சுதீப். கிராமத்தில் நடக்கும் மர்மமான குழந்தைகள் மரணம் மற்றும் இன்ஸ்பெக்டர் மரணத்திற்கான காரணம் என்னவென விசாரிக்க ஆரம்பிக்கிறார் கிச்சா சுதீப்.
இறுதியில் யார் அந்த கொலைகளை செய்து வருகிறார்.? எதற்காக அந்த கொலைகளை செய்கிறார்.? இதில் கிச்சா சுதீப் சம்பந்தப்பட்டிருக்கிறாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தின் அனைத்து காட்சிகளும் முழுக்க முழுக்க இரவு நேர காட்சியாக காட்டப்பட்டிருக்கிறது. இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் தனக்கே உரித்தான பாடி லேங்குவேஜ் கொண்ட் மிரட்டியிருக்கிறார் கிச்சா சுதீப். ஆக்ஷன் காட்சியிலும் அதிரடி காட்டியிருக்கிறார்.
இப்படத்தை 3டி தொழில்நுட்பத்தில் பார்த்தால் தான் நல்லா இருக்கும்னு இயக்குனர்கிட்ட யார் சொன்னாங்கன்னு தெரியல.. படத்தில் 3 காட்சிகளை தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் 3டி தொழில்நுட்பத்தில் இல்லாதது பெரும் ஏமாற்றம் தான்.
படத்தின் கேரக்டர்கள் பெயர்களை மூளையில் ஏற்றி கதைக்குள் பயணப்படலாம் என்று நினைக்கும் போது இடைவேளை வந்துவிடுகிறது. தமிழ் மொழிக்கு மொழி மாற்றம் செய்யும் போது கதாபாத்திரத்தின் பெயரையும் தமிழிலே வைத்தால், படம் பார்க்கும் ரசிகர்கள் கதையோடு எளிதில் தங்களை இணைத்துக் கொள்வார்கள். அப்படி இல்லையென்றால்…. கஷ்டம் தான்.
கதைக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காமல், ஹீரோவுக்கான மாஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருப்பதால் பெரிதான ஈர்ப்பை “விக்ராந்த் ரோணா” கொடுக்கத் தவறியிருக்கிறது.
இசையும், ஒளிப்பதிவும் பலம் தான். ஜாக்குலின் பெர்ணாண்டஸ் ஆடிய ரா ரா பாடல் அனைவரையும் ஆட்டம் போட வைத்ததோடு மட்டுமல்லாமல், அவரை ரசிக்கவும் வைத்திருக்கிறது.
பிரம்மாண்ட பொருட்செலவு, பிரம்மாண்ட தொழில்நுட்பம் என அனைத்தும் இருந்து கதை பலவீனமாக இருப்பதால் ரசிக்க முடியாமல் போய்விடுகிறது இந்த “விக்ராந்த் ரோணா”வை.


