
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகையும் இலக்கிய உலகையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், எழுத்தாளர் பவா செல்லத்துரை பகிர்ந்துள்ள நினைவுகள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
பாரதிராஜாவுடனான தனது நெருக்கமான அனுபவங்களை பகிர்ந்துள்ள பவா செல்லத்துரை, ஒரு கல்லூரி கலைவிழாவிற்கு அழைப்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்ட தருணத்திலிருந்து தொடங்கி, கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்திருந்த அவரது இல்லத்தில் கழித்த மறக்க முடியாத இரவை நினைவுகூர்ந்துள்ளார்.
அந்த சந்திப்பில், தேனியில் இருந்து வெறும் 270 ரூபாயுடன் சென்னை வந்த தனது போராட்ட வாழ்க்கையை பாரதிராஜா பகிர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். சினிமா பின்னணி இல்லாத ஒரு கிராமத்து இளைஞன், தனது கனவுகளை நம்பி திரைப்பட உலகின் கதவைத் தட்டிய விதம், அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் தாண்டி உச்சத்தை அடைந்த பயணம் ஆகியவற்றை கண்கலங்கியபடி பகிர்ந்ததாக பவா எழுதியுள்ளார்.
“எனக்கு பாலுமகேந்திரா போல சினிமா தெரியாது. என் கிராமத்தின் வாழ்க்கை, அதன் மனிதர்கள், அவர்களின் நேசமும் வன்மமும் தான் தெரியும். அதை கேமரா வழியாக திரைக்கு கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே இருந்தது” என்று பாரதிராஜா கூறியதை அவர் நினைவுகூர்கிறார்.
தனது சொந்த ஊரான தேனி, ஆண்டிப்பட்டி, அய்யனார் கோவில், கிராமத்து மக்களுடன் இருந்த பிணைப்பு தான் தனது படைப்புகளின் உயிர் என்றும், அவற்றை இழந்தால் தான் எதுவுமில்லை என்றும் பாரதிராஜா உருக்கமாக பேசியதாகவும் குறிப்பிடுகிறார்.
மேலும், கடந்த கார்த்திகை தீபத் திருநாளன்று, தன்னைப் பற்றி எழுதிய கட்டுரையை நேரில் கேட்கவே மழையைப் பொருட்படுத்தாமல் தனது வீட்டிற்கு வந்த பாரதிராஜாவின் எளிமையையும், படைப்பாளியாக அவர் கொண்டிருந்த அன்பையும் பவா செல்லத்துரை நினைவுகூர்ந்துள்ளார்.
“இதையெல்லாம் எழுதுவேன் சார்” என்று பவா கூறியபோது, “நீ எழுதணும்னுதான் இதையெல்லாம் உங்கிட்ட சொன்னேன்” என்று பாரதிராஜா கூறிய வார்த்தைகள் இன்று அவரது நினைவுகளாக மட்டுமே மிஞ்சியுள்ளன.
ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல், மண்ணின் வாசனையை உலக சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய கலைஞனாகவும், மனிதர்களை நேசித்த எளிய மனிதராகவும் பாரதிராஜா என்றும் நினைவில் வாழ்வார் என பவா செல்லத்துரை தனது இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.





