
இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்க உருவாகி இன்று வெளிவந்திருக்கும் படம் தான் “கேப்டன்”. தனது இயக்கத்தில் எப்போதுமே தனிப் புதுமையை புகுத்தும் இயக்குனர் சக்தி, இப்படத்தில் என்ன மாதிரியான புதுமையை புகுத்தியிருக்கிறார் என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்…
கதைப்படி,
நாயகனான ஆர்யா, ஆர்மி கேப்டனாக வருகிறார். இவர் தனக்குக் கீழே ஒரு 4 பேர் கொண்ட ஒரு டீமை வைத்திருக்கிறார்.
காஷ்மீர் அருகே உள்ள ஒரு வனப்பகுதிக்குள் யாரும் உள்ளே நுழைய முடியாத சூழல் நிலவி வருகிறது. அந்த வனப்பகுதிக்குள் செல்லும் அனைவரும் மர்மமான முறையில் இறந்து விடுகின்றனர்.
இதனைத் தடுக்கவும், அங்கு என்ன இருக்கிறது என்பதை கண்டறியவும் ஆர்யா தலைமையில் அவரது குழுவும் மற்றும் விஞ்ஞானியாக வரும் சிம்ரன் தலைமையிலான ஒரு குழுவும் அங்கு செல்கின்றனர்.
அங்கு ஒரு விநோதமான விலங்கு ஒன்று இருப்பதை அறிகின்றனர். அந்த விலங்கினத்தை அவர்கள் அழித்தார்களா ?? எதற்காக அந்த விலங்கினம் இவர்களை தாக்குகிறது என்பதை இராண்டாம் பாதியில் விடை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ..
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், தன்னால் இயன்ற உழைப்பைக் கொடுத்து அதில் முத்திரைப் பதிப்பவர் நாயகன் ஆர்யா… தன்னால் இயன்ற கடின உழைப்பையும் படத்திற்காக கொடுப்பவர். இப்படத்திலும் அதையே செய்திருக்கிறார்.
மிடுக்கான தோற்றத்தில், கம்பீரமாக தோன்றி கேப்டனாக ஜொலித்திருக்கிறார்.. நாயகி ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு பெரிதான வேலை எதுவும் படத்தில் இல்லாதது ஏமாற்றம் தான்.
மற்ற நடிகர்களின் நடிப்பும் பாராட்டும்படியாக தான் இருந்தது.
இயக்குனரின் கதை நகர்வு மட்டுமே சற்று சலிப்படைய வைத்துவிட்டது. க்ளைமாக்ஸில் சொல்கின்ற கதை நோக்கி தான் இப்படத்தின் கதை என்றாலும், அதற்காக பல இடங்களில் இருக்கும் ஓட்டைகளை இயக்குனர் கவனிக்காமல் சென்றிருக்கிறார்.
அடிக்கடி காட்டிற்குள் செல்லும் ஆர்யா டீமை மட்டும் விலங்குகள் எதுவும் செய்யாமல் இருப்பது எதற்காக என்று தெரியவில்லை…
சில ஹாலிவுட் படங்களின் காட்சிகள் இப்படத்தில் எட்டிப் பார்த்தாலும் இதையும் ரசிக்கலாமே என்று தான் தோன்றுகிறது.
பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு கை கொடுத்திருக்கின்றன. பாடல்கள் ஜொலிக்கவில்லை..
இயக்குனரிடம் இருந்து இன்னும் பெரிதாக எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சிறிதாகவே அந்த எதிர்பாப்பை பூர்த்தி செய்திருக்கிறார்.
இருந்தாலும், குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு விடுமுறையை கழிக்க ஒரு த்ரில்லர் படமாக கேப்டன் வந்திருப்பது மகிழ்ச்சி தான்..





