Spotlightசினிமாவிமர்சனங்கள்

யாத்திசை – விமர்சனம் 3.5/5

ணதீர பாண்டியன் என்பவன் பெரும் வீரனாக திகழ்கிறார். சேர, சோழ, பல்லவர்கள் மூவரையும் வென்ற ஒரு மாபெரும் படைபலத்துக்குச் சொந்தக்காரன் இந்த ரணதீரன். சோழ பேரரசோடு போர் செய்து, அங்கிருக்கும் கோட்டையைக் கைப்பற்றி ஆட்சி செய்கிறான்.

இச்சூழலில், பாண்டினை எதிர்த்து போர் செய்ததில் சிறு சிறு சிற்றரசுகளும்  அடங்கும்.. அப்படியான ஒரு சிற்றரசாக திகழ்ந்தது தான் எயினர் சிற்றரசு. இந்த எயினர்களின் தலைவனாக வருகிறான் கொதி.

வெறும் ஆயிரம் வீரர்களை வைத்திருக்கும் கொதி, மிகப்பெரும் வீரரான ரணதீரனை எதிர்க்க துணிந்து களம் இறங்குகிறான். திட்டம் தீட்டுகிறான்.. துணைக்கு சேரப்படையை சேர்ந்த சில வீரர்களை அழைத்துக் கொள்கிறான்.

திட்டம் கைகொடுக்க, அந்த சோழ கோட்டையை பாண்டியனிடம் இருந்து கைப்பற்றி, ரணதீரனை அங்கிருந்து விரட்டுகிறான் கொதி.

சோழக் கோட்டையைக் கைப்பற்றிய கொதி, அங்கு நிலைக்க முடிந்ததா.? அங்கிருந்து வெளியேறிய ரணதீர பாண்டியன் அடுத்து என்ன செய்தான் என்பது தான் படத்தின் மீதிக் கதை.

ரணதீர பாண்டியனாக தோன்றிய ஷக்தி மித்ரன், அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு போர் கண்ட, பெரும் வீரனாக உடலளவிலும் கண் பார்வையிலும் காட்சிக்கு காட்சி மிளிர வைத்திருக்கிறார். ஒரு மிகப்பெரும் மாஸ் ஹீரோவுக்கு கொடுக்கப்படும் எண்ட்ரீ போல் இவரது எண்ட்ரீயும் இருந்தது செம… .

கொதி கதாபாத்திரத்தில் நடித்த சேயோன், அக்கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை தெளிவாக கொடுத்து காட்சிக்கு உயிர் கொடுத்திருக்கிறார். அதிலும், இருவர் மல்லுக்கட்டும் வைக்கோல் சண்டைக் காட்சியில் அவரது உழைப்பை பாராட்டாமல் இருக்க முடியாது. 
 
தேவரடியாராக நடித்திருந்த ராஜலட்சுமி அழகு தேவதையாக காட்சிக்கு அழகு சேர்த்திருக்கிறார். அழகோடு சேர்ந்து நடனும் ரசிக்க வைத்திருப்பது கூடுதல் பலம். கண் இமைக்காமல் பார்க்கும்படியான கதாபாத்திர அழகுக்கு சொந்தக்காரியாக திகழ்ந்திருக்கிறார் ராஜலட்சுமி. 
 
கொதியின் போர் வீரனாக வரும் துடி என்ற கதாபாத்திரத்தில் தோன்றிய சமர், சண்டைக் காட்சியில் வியக்க வைத்திருக்கிறார். 
 
இப்படியொரு கதையா.? இப்படியொரு கதைக்களமா.?? என படம் பார்ப்பவர்களை வியக்கும் அளவிற்கு நேர்த்தியான காட்சிகளை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் தரணி ராசேந்திரன். 
 
படம் ஆரம்பிக்கும் போதே, அவ்வளவு தெளிவான விளக்கத்தைக் கொடுத்துவிட்டுத் தான் கதைக்குள் செல்கிறார் இயக்குனர். இந்த கதைக்களம் யாருக்கானது.? யார் யாருடன் போர் புரிகிறார். இது யாருக்கானது.? அதிகாரம் எந்த அளவிற்கு ஆட்டிப்படைக்கிறது.? என்பதை தெளிவாக கூறிவிட்டு கதை நகர்வது, நம்மை கதைக்குள் எளிதில் பயணப்படும்படியாக அமைந்தது பலம். 
 
ஆரம்பக் காட்சியான எய்னர் படையின் இரு மாபெரும் வீரர்களின் சண்டைக் காட்சி, ரணதீர பாண்டியனோடு சண்டைக் காட்சி, துடியின் சண்டைக் காட்சி, க்ளைமாக்ஸில் ரணதீரன் மற்றும் துடியின் சண்டைக் காட்சி என படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் பெரிதளவில் இடம் பிடித்திருக்கின்றன.
எவ்வித கமர்ஷியல் சண்டையாக இல்லாமல், சாதரண வீரன் எப்படி சண்டையிட்டுக் கொள்வானோ அப்படியான சண்டைக் காட்சிகளை படம் முழுவதும் காட்சிப்படுத்தியிருப்பது படத்திற்கு மிகப்பெரும் பலம்.
பெரும்பள்ளியின் பயணம், தேவரடியாரின் பயணம் இரண்டும் படத்திற்கு ஒரு வேகத்தடை தான். தேவரடியாரின் பயணம் படத்தின் கதைக்குள் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது தான் உண்மை. இரண்டாம் பகுதியில் அதற்கான காரணம் இருக்கிறது என்று சொல்லி படத்தை முடித்தாலும், இந்த பகுதி அதைவிட்டுச் சென்றிருந்தால் கதை இன்னும் சற்று வேகமெடுத்திருந்திருக்கும்.
தரணி ராசேந்திரனின் கதைக்களம், கதைத் தேர்வு, மெனக்கெடல், ஆழக்கருத்து என அனைத்தையும் வெகுவாகவே பாராட்டலாம். இப்படியொரு பட்ஜெட்டில் இப்படியொரு பிரமாண்ட படைப்பா என வியக்கும் அளவிற்கு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் இயக்குனரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் தரணி ராசேந்திரன்.
இயக்கத்திற்கு இணையாக ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிதாக கைகொடுத்திருப்பது யாத்திசைக்கு மற்றொரு கூடுதல் பலம். சக்ரவர்த்தியின் பின்னணி இசை, கதையோடு நம்மை நகர்ந்து செல்ல பெரிதும் கைகொடுத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தேவரடியாரின் நடனப் பாடலும் ரசிக்க வைத்திருக்கிறது.
பேரரசை அசைத்துப் பார்க்க சிறு சிறு துரும்புகள் எட்டிப் பார்த்தாலும், பாண்டியனின் வீரம் என்றும் வீரமே என்று காட்டியிருப்பது அருமை…
நம் வரலாறு
நம் பெருமை
நம் பலம்
நம் வீரம்
நம் பழக்கம்
நம் மொழி என நம்மை சார்ந்த விஷயங்கள் பலவும் படத்தில் இருப்பதால் எளிதில் நம்மால் கதையோடு பயணிக்க முடிகிறது.
இக்கால வழக்கு மொழி டைட்டிலில் போட்டிருந்தாலும், அக்கால வழக்கு மொழி எட்டிப் பார்ப்பதால், நடிப்பைப் பார்ப்பதா கீழே மொழியை வாசிப்பதா என்ற குழப்பம் எழுவது மட்டுமே சற்று தடங்கல்..
மற்றபடி
யாத்திசை – எட்டுத்திக்கும் பறக்க வேண்டிய வெற்றிக் கொடி…

நடிகர்கள்:

ஷக்தி மித்ரன் – ரணதீர பாண்டியன்
சேயோன் – கொதி ( எயின தலைவன்)
ராஜலட்சுமி – தேவரடியார்
குரு சோமசுந்தரம் – எயின பூசாரி
சுபத்ரா – பெரும்பள்ளி தலைவி
சமர் – துடி ( எயின போர் வீரன் )
வைதேகி அமர்நாத் – தேவரடியார்

Facebook Comments

Related Articles

Back to top button