
மீகாமன், தடம், தடையறை தாக்க, கலகத் தலைவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் தான் மகிழ் திருமேனி. இவரின் இயக்கத்தில் தற்போது உருவாகி இன்று திரை கண்டிருக்கும் படம் தான் “விடா முயற்சி”.
இப்படத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜூன், ரெஜீனா கெசண்ட்ரா, ஆரவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஓம் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார்.
லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் படத்தினை தயாரித்திருக்கிறார்.
கதைக்குள் பயணித்து விடலாம்…
அஜர்பைஜானில் படத்தின் கதை நகர்கிறது. தனது காதல் மனைவி த்ரிஷாவுடன் வாழ்ந்து வருகிறார் அஜித். 13 வருட குடும்ப உறவு முறிவுக்கு வருகிறது. அஜித்தை விட்டு பிரிய முடிவெடுக்கிறார் த்ரிஷா.

இதனைத் தொடர்ந்து, தனது அம்மா வீட்டிற்கு செல்ல முடிவெடுத்து கிளம்பும் சமயத்தில், தான் காரில் சென்று விடுவதாக அஜித் கூற, இருவரும் காரில் பயணப்படுகிறார்கள்.
அடர் பாலைவனம் போல் காணப்படும் அந்த நெடுஞ்சாலையில் பயணப்படுகிறார்கள் இருவரும். இந்த சமயத்தில் கார் பழுதாக, அந்த வழியாக பெரிய ட்ரக் ஒன்றில் வரும் அர்ஜூன் – ரெஜினாவிடம் லிஃப்ட் கேட்கிறார்கள்.
அருகில் இருக்கும் பார் ஒன்றில் இறக்கி விடுவதாக கூறி, த்ரிஷாவை உடன் அழைத்துச் செல்கின்றனர் இருவரும். கார் பழுது சரிபார்த்து, அந்த பாருக்கு சென்று பார்க்கும் போது, த்ரிஷா அங்கு வரவில்லை என்று அறிகிறார் அஜித்.
தான் மனைவி கடத்தப்பட்டு விட்டதாக அப்போது தான் அறிகிறார் அஜித். அதன்பிறகு கடத்தல் கும்பலிடம் இருந்து தனது மனைவி த்ரிஷாவை அஜித் காப்பாற்றினாரா இல்லையா.?? எதற்காக த்ரிஷாவை அந்த கடத்தல் கும்பல் கடத்தியது.??? என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக அஜித்குமார், மிகவும் இயல்பாக இந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி அக்கதாபாத்திரமாகவே மாறி படத்தின் கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார். எமோஷ்னல், தவிப்பு, காதல், ஆக்ஷன் என பல இடங்களில் தனது யூனிக் நடிப்பைக் கொடுத்து படத்தின் ஓட்டத்திற்கு பெரிதாக கைகொடுத்திருக்கிறார் அஜித்குமார்.
ஒட்டுமொத்த படத்தையும் தனி ஒருவனாக தோள் மீது தாங்கிச் சென்றிருக்கிறார் அஜித். க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகள் அரங்குகளை அதிர வைத்திருக்கிறது. ஆரவ் மற்றும் அஜித்குமார் இருவரும் காரில் செல்லும் ஆக்ஷன் காட்சி, பரபரப்பின் உச்சம்.
காட்சிகளுக்கு கூடுதல் அழகு சேர்த்திருக்கிறார் நடிகை த்ரிஷா. கயல் என்ற கதாபாத்திரத்தை மிகவும் யதார்த்தமாக செய்து முடித்திருக்கிறார். அஜித் மீது பெரிதான ஒரு வெறுப்பு இல்லாதபோது ஏன் த்ரிஷா அந்த ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று தெரியவில்லை.? அதை சற்று நன்றாகவே சிந்தித்திருந்திருக்கலாம்.
அர்ஜூனின் வில்லத்தனம் படத்திற்கு சற்று கைகொடுத்தாலும், அவருக்கான முக்கியத்துவம் என்பது படத்தில் பெரிதாக இல்லை என்று தான் கூற வேண்டும். ரெஜினாவும் தன் பங்கிற்கு வில்லத்தனத்தில் தனி முத்திரை பதித்திருக்கிறார். ரெஜினாவிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை சற்று அர்ஜூனுக்கும் கொடுத்திருக்கலாம்.
ஆரவ் தனது நடிப்பில் நன்றாகவே பயிற்சி பெற்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மிகவும் எளிமையான கதை என்றாலும், அதை திரைக்கதையில் கொண்டும் வரும் போது இன்னும் சற்று பரபரப்பாக கொண்டு சென்றிருக்கலாமே.? எதற்காக இந்த அளவிற்கு மெதுவான ஒரு திரைக்கதை அமைக்க வேண்டும் என்று தெரியவில்லை.

க்ளைமாக்ஸ் காட்சியில் கூட அஜித் நன்றாக அடிவாங்கும் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். ஒரு ஆக்ஷன் ஹீரோவிற்கு இந்த மாதிரியான காட்சி எப்படி எடுபடும் என்று சற்று யோசித்திருந்திருக்கலாம். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் சற்று ஏமாற்றி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். ஹாலிவுட் தரத்திலான ஒரு ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார். அனிருத்தின் பின்னணி இசை பலம் என்றாலும், இன்னும் சற்று கூடுதல் உழைப்பை கொடுத்திருக்கலாமே அனி என்றும் ரசிகர்களை ஏங்க வைத்துவிட்டார். சவடிக்கா பாடல் ஆட்டம் போட வைத்திருக்கிறது.
ஹாலிவுட் தரத்திலான ஒரு தமிழ் படத்தை திரையரங்கில் மிஸ் செய்து விடாதீர்கள்…





