
சேலம் மாவட்டம் அருகே ஒரு மலை கிராமம்தான் படத்தின் கதைக்களம். அந்த கிராமத்திற்கு சரியான போக்குவரத்து வசதி இல்லாததால், அங்கு வசிக்கும் மக்கள் உடைந்து போன சாலையில் தான் பயணம் செய்து தனது அன்றாட பணிக்கு செல்ல வேண்டிய சூழலில் இருக்கின்றனர்.
இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தான் செல்வராகவன். பதநீர் விற்று தனது பிழைப்பை கவனித்து வருகிறார். இவருக்கும் நாயகியான குஷி ரவிக்கும் திருமணம் நடைபெறுகிறது.
தன்னை மலையாக நினைத்து வந்த குஷிரவியை நன்றாக கவனித்துக் கொள்கிறார். அவர் மீது அளவு கடந்த காதலையும் வெளிப்படுத்துகிறார் செல்வராகவன். தனது மனைவியின் சொல் கேட்டு, அருகில் இருக்கும் சொந்த பந்தங்களிடம் கடன் வாங்கிக் கொண்டு, மெயின் ரோடு அருகே ஒரு ஹோட்டல் ஒன்றை ஆரம்பிக்கிறார் செல்வராகவன்.

இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்க, மற்றொரு பக்கம் வில்லன் முகமான மைம் கோபியின் கேரக்டரும் காட்டப்படுகிறது. ஆளும்கட்சி மந்திரியான ஒய் ஜி மகேந்திரனின் உறவினரான மைம் கோபி, மில் கம்பெனி நடத்தி வருகிறார். அங்கு, பணிபுரியும் பெண்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து, வட்டி செலுத்த முடியாத பெண்களை தனது காம இச்சைக்கு உள்ளாக்கி விடுகிறார்.
இவனால் மரணித்த பெண்கள் பலர் இருக்கின்றனர். இந்த சூழலில் செல்வராகவனை சுற்றி சுற்றி வரும் சிறுமியான அமுதா, இரவு நேரத்தில் கிராமத்திற்குச் செல்லும் வழியில் இறந்து கிடக்கிறார். செல்வராகவன் உட்பட கிராமத்தினர் அனைவரும் சோகத்தில் மூழ்கி விடுகின்றனர்.

அதன் பிறகு மிகப்பெரும் சம்பவம் ஒன்று அந்த கிராமத்தில் அரங்கேறுகிறது. அந்த சம்பவத்திற்குப் பிறகு செல்வராகவன் என்ன ஆனார் என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனாக செல்வராகவன் படம் முழுக்க நிரம்பி இருக்கிறார். அமைதியான ஒரு சாந்த முகம் கொண்டு படம் முழுக்க பயணித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக குஷி ரவி, தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் வெகுவாகவே கவர்ந்திருக்கிறார். அழகிலும் நம்மை ஈர்த்திருக்கிறார்.
செல்வராகவனின் உறவினராக வரும் ஆர் எஸ் சதீஷ், கெளசல்யா, மைம் கோபி, ஒய் ஜி மகேந்திரன், லிர்திகா, சேலம் தீபக் உள்ளிட்ட நடிகர்களும் தங்களது நடிப்பை அளவாக கொடுத்திருந்தனர்.
ஒரு பயணமாக இந்த மனிதன் தெய்வமாகலாம் படம் சென்று கொண்டிருக்கிறது. ஒரு அழகிய கிராமம், ஆனால் அந்த கிராமத்தின் சுற்றுபுற அழகையோ, அதன் வாழ்வியலையோ படக்குழுவினர் காட்டாதிருந்தது அதிர்ச்சி தான். காட்சிகள் மிகவும் மெதுவாகவும், குறிப்பிட்ட ஒரு இடத்தை விட்டு நகராமல் இருந்ததும் படத்திற்கு ஒரு சரிவு, என்று தான் சொல்ல வேண்டும்.

படத்தின் கடைசி அரை மணி நேரம் முன்பு வரை படத்தின் முக்கிய கருவை தொடாமல் இருந்தது, சற்று ஏமாற்றம் தான். க்ளைமாக்ஸ் காட்சி பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பவத்துக்கு கொடுக்க வேண்டிய ஒரு சரியான தீர்வு தான்.
வில்லன் கதாபாத்திரம் செயற்கையான வடிவமைப்பாக இருந்ததை தவிர்த்திருந்திருக்கலாம்.. ஏ கே ப்ரியனின் இசையில் பாடல்கல் உருக வைத்திருக்கின்றன. பின்னணி இசையானது கதையோடு சேர்ந்து நம்மையும் பயணம் புரிய வைத்திருக்கிறது.
ரவி அவர்களின் ஒளிப்பதிவை இன்னும் சற்று பெரிதாகவே கொடுத்திருந்திருக்கலாம். ஒரு குறுகிய வட்டத்திற்குள் கேமரா சுற்றிக் கொண்டிருந்தது, நம்மையும் அதனுள்ளேயே படமானது சுருக்கிவிட்டது.
Rating : 2.5/5





