
இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு நடிகர் விஷால் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முகவரியை மாற்றிய மகத்தான படைப்பாளிகளில் ஒருவராக பாரதிராஜாவை குறிப்பிட்டுள்ள விஷால், அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என தெரிவித்துள்ளார்.
தனது இரங்கல் செய்தியில், “கிராமங்களின் மண்வாசனையையும், மக்களின் உணர்வுகளையும், காதலையும், வாழ்க்கையையும் திரையில் உயிரோட்டமாக கொண்டு வந்தவர் பாரதிராஜா. பல தலைமுறை இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்களுக்கு அவர் ஒரு பேருத்வேகம். அவர் உருவாக்கிய ஒவ்வொரு காட்சியும், கதாபாத்திரமும் காலத்தால் அழியாதவை” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ஒரு படைப்பாளியாக சாதிக்க விரும்பும் அனைவருக்கும் அவரது படைப்புகள் ஒரு பாடப்புத்தகம் போன்றவை. அவரது மறைவுடன் தமிழ் சினிமாவின் ஒரு அற்புதமான சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
பாண்டியநாடு திரைப்படத்தில் தந்தை-மகனாக இணைந்து நடித்த அனுபவத்தை நினைவுகூர்ந்த விஷால், “திரையிலும், திரைக்கு வெளியிலும் அவருடன் கழித்த தருணங்கள் எனக்கு பல வாழ்க்கைப் பாடங்களை கற்றுக் கொடுத்தன. நான் இந்த மகத்தான திரைப்பட உலகின் ஒரு அங்கம் என்ற பெருமையை உணர வைத்தவர் அவர்” என தெரிவித்துள்ளார்.
பாரதிராஜாவின் மனைவி, மகள் ஜனனி மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள விஷால், “அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது முதல் இயக்குநர் முயற்சியின் டீசர் இன்று வெளியாக இருந்த நிலையில், பாரதிராஜா மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அதை ஒத்திவைப்பதாகவும் விஷால் அறிவித்துள்ளார்.





