
தமிழ் சினிமாவில் காதல், குடும்பம், கிராம வாழ்க்கை, மதம் மற்றும் சமூகத்தின் தாக்கம் போன்ற அம்சங்களை மையமாக வைத்து பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையையும், வித்தியாசமான திரைக்கதையையும் கொண்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன்.
1980-களின் திருநெல்வேலி மாவட்ட கிராமப் பின்னணியில் கதை நகர்கிறது. விசைத்தறி நெசவுத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட ஒரு முஸ்லிம் குடும்பத்தின் வாழ்க்கை, அவர்களின் உறவுகள், கனவுகள், போராட்டங்கள் மற்றும் காதலை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது.
கஸ்தூரி ராஜா தனது அனுபவமிக்க நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். குடும்பத்தின் தலைவனாக, பொறுப்பான தந்தையாக, சூழ்நிலைகளால் நொறுங்கும் மனிதனாக அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் பார்வையாளர்களை நெகிழ வைக்கின்றன.
நாயகன் ஈஷா, இளமைக்கே உரிய காதல், துடிப்பு மற்றும் உணர்ச்சிகளை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். மாளவிகா மனோஜ் கதைக்கு தேவையான அழகையும், உணர்வுகளையும் நேர்த்தியாக வழங்கியிருக்கிறார். துணை கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் கதையோடு ஒன்றிப்போய் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.
இரண்டாம் பாதியில் எண்ட்ரீ கொடுத்து, மொத்த அழகையும் பர்தாவிற்குள் ஒழித்து வைத்தாற் போல வந்து தேவதையாக எண்ட்ரீ கொடுத்த தனஸ்ரீ சுதாகரன் அவர்களின் நடிப்பை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஹீரோவின் சித்தப்பாவாக நடித்தவர், சித்தியாக நடித்த அனுஸ்ரேயா ராஜன், கஸ்தூரி ராஜாவின் நண்பராக நடித்தவர், தனஸ்ரீயின் தந்தையாக நடித்தவர், ஹீரோவின் அம்மாவாக நடித்தவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் வந்து நடித்துச் சென்ற அனைவருமே அந்தந்த கதாபாத்திரமாகவே மாறியிருந்தார்கள்.
ஹீரோவின் அம்மா, தனது மகனுக்கு மணப்பெண் வேண்டும் என்று கூறும் அந்த மார்க்கெட் காட்சி கலங்கடிக்க வைத்துவிட்டது. அதுமட்டுமல்லாமல், தனது மகனுக்காக ஊர் மக்களிடம் கண்கலங்கி நின்ற கஸ்தூரி ராஜா காட்சி, என்று பல காட்சிகள் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்துவிட்டது. இண்டர்வெல் காட்சி நமக்கு பெரும் பதட்டத்தையும் படபடப்பையும் கொடுத்துவிட்டது.
இயக்குநர் மீரா கதிரவன் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். கிராமத்து வாழ்க்கையை எந்தவித செயற்கைத்தனமும் இல்லாமல் இயல்பாக பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக திருநெல்வேலி வட்டார மொழி, கலாச்சாரம், குடும்ப உறவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை ஆகியவை மிக யதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
புதுமையான கதைக்களமும், எதிர்பாராத திரைக்கதை நகர்வுகளும் ‘ஹபீபி’யின் மிகப்பெரிய பலம். கிராமத்து வாழ்க்கையின் அழகையும், மனிதர்களின் உணர்வுகளையும் எந்தவித சமரசமும் இன்றி பதிவு செய்திருக்கும் மீரா கதிரவன், ஒரு திரைப்படத்தை மட்டுமல்ல, ஒரு வாழ்வியல் அனுபவத்தையே ரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறார்.
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு படத்தின் உயிராக அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் அந்த கிராமத்தின் மண்வாசனையை திரையில் உணர வைக்கிறது. சாம் சி.எஸ். இசை கதையின் உணர்வுகளை மேலும் ஆழமாக்குகிறது. பின்னணி இசை பல காட்சிகளில் தாக்கத்தை அதிகரிக்கிறது.
படத்தின் முதல் பாதி மெதுவாக கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தினாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதை எதிர்பாராத திருப்பங்களை கொடுத்து ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் ரசிகர்களின் மனதில் நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.
காதலை மட்டும் பேசாமல், ஒரு குடும்பத்தின் மரியாதை, சமூக அழுத்தம், வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் மனித உணர்வுகளை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் படைப்பாக ‘ஹபீபி’ உருவாகியுள்ளது. முஸ்லீம் சமுதாயத்தில் இப்படியான சடங்குகள், இப்படியான நடைமுறைகள், இப்படியான வாழ்க்கை முறை இருக்கிறது என்பதை எந்த ஒரு திரைப்படமும் வெளிப்படுத்தியதில்லை.
பிளஸ்:
வித்தியாசமான கதை மற்றும் திரைக்கதை
கஸ்தூரி ராஜாவின் சிறப்பான நடிப்பு
யதார்த்தமான கிராமத்து வாழ்க்கை பதிவு
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு
உணர்வுபூர்வமான கிளைமாக்ஸ்
வழக்கமான காதல் கதையாக தொடங்கி, முற்றிலும் எதிர்பாராத திசையில் பயணித்து மனதை கனக்க வைக்கும் அனுபவத்தை தரும் திரைப்படம் ‘ஹபீபி’. வித்தியாசமான கதைகளையும், யதார்த்தமான கிராமத்து படங்களையும் விரும்புபவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய படம்.
மொத்தத்தில்:
“ஹபீபி” – மனதைத் தொடும் ஒரு அழகான அனுபவம்





