
பிரபுதேவா – வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள ‘பேங் பேங்’ (Bang Bang) திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
கே.ஆர்.ஜி. குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரித்துள்ள இப்படத்தை சாம் ரோட்ரிகஸ் இயக்கியுள்ளார். ஜாம்பி ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் பிரபுதேவா, வடிவேலு, பப்லு பிருத்விராஜ், அனு கீர்த்தி, யாவீ, பீட்டர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சாம் ரோட்ரிகஸ், “பிரபுதேவாவும் வடிவேலுவும் இப்படத்திற்காக முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசுகையில், பிரபுதேவா மூலமாக இந்த ஜாம்பி கதையைக் கேட்டதாகவும், வித்தியாசமான கதைக்களம் என்பதால் உடனடியாகத் தயாரிக்க முடிவு செய்ததாகவும் கூறினார்.
மேலும், இந்தோனேசியாவில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது எரிமலை வெடித்த சம்பவத்தையும் படக்குழுவினர் படமாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
“ஜாம்பி கதையாக இருந்தாலும் ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் சில மாற்றங்களைச் செய்து சிறந்த படைப்பாக உருவாக்கியுள்ளோம். இந்தப் படம் நிச்சயம் பேசப்படும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், ‘பேங் பேங்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.





