
சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் மற்றும் அரவிந்த்சாமி என ஒரு நடிகர்கள் பட்டாளத்தை கொண்டு மணிரத்னம் உருவாக்கியுள்ள படம்தான் ‘செக்கச் சிவந்த வானம்”.
பிரகாஷ்ராஜ் சேனாபதியாக வரும் கேங்க்ஸ்டர் லீடர். அவருக்கு மூன்று மகன்கள் அரவிந்த்சாமி (வரதன்), அருண்விஜய் (தியாகு), சிம்பு (எத்தி).
அரவிந்த்சாமி லோக்கலாக ரவுடித்தனம் செய்து அப்பா, அம்மா, தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளோடு சென்னையில் வாழ்ந்து வருகிறார்.
அருண் விஜய் தனது மனைவி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் குழந்தைகளோடு துபாயில் வாழ்ந்து வரும் அவர், கடத்தல் தொழில் செய்து வருகிறார்.
சிம்பு தனது காதலி டயானா எரப்பாவோடு வெளிநாட்டில் துப்பாக்கி கடத்தல் செய்து வாழ்ந்து வருகிறார்.
முதல் காட்சியிலேயே பிரகாஷ்ராஜ்ஜையும் அவரது மனைவி ஜெயசுதாவையும் கொல்ல சதி நடக்கிறது. இருவரும் அதில் இருந்து தப்பிக்க, இந்த சதியை யார் செய்தது என சகோதரர்கள் மூவருடன் சேர்ந்து அரவிந்த் சாமி நண்பனாக வரும் போலீஸ் விஜய் சேதுபதியும் ஆராய, அதற்குள் பிரகாஷ்ராஜ் நெஞ்சுவலியில் இறந்து விடுகிறார்.
பிரகாஷ்ராஜ் இறப்பதற்கு முன், மூன்று மகன்களில் யாரோதான் நம்மை கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்கள் என்று தனது மனைவி ஜெயசுதாவிடம் கூறுகிறார்.
பிரகாஷ் ராஜ் இடத்தை மூவரும் அடைய நினைக்கிறார்கள். மூவருக்குள்ளும் போட்டி நிலவுகிறது. யார் பிரகாஷ்ராஜ்ஜை கொலை செய்ய முயற்சித்தார்கள்??, அவரது இடத்தை யார் அடைந்தார் ?? என்பதே படத்தின் மீதிக் கதை.
பிரகாஷ் ராஜ் ஒரு சில காட்சிகளே வந்தாலும், அப்பா கதாபாத்திரத்தை மிகக் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.
அரவிந்த்சாமி தனது முரட்டுத்தனமான கதாபாத்திரத்தை மிக பொருத்தமாக செய்து முடித்திருக்கிறார் . ஸ்டைலிஷாக தனது கேரக்டரை பெர்ஃபெக்டாக செய்து முடித்திருக்கிறார் அருண்விஜய். தியாகுவை நிச்சயம் ரசிக்கலாம்.
தனது ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை சிம்பு நிவர்த்தி செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான ஸ்டைலிஷ், மாஸ் என அனைத்தையும் கலந்து கொடுத்து ரசிகர்களை திருப்தி அடைய வைத்திருக்கிறார்.
விஜய்சேதுபதி காட்சிகளில் வரும்போதெல்லாம் காமெடி, கலகலப்பு கூடவே வந்துவிடுகிறது. பெர்பெக்ட் போலீஸ் அதிகாரியாக வந்து செல்கிறார்.
வழக்கம்போல் தான் ஒரு கைதேர்ந்த நடிகைதான் என ஜோதிகா நிரூபித்திருக்கிறார்.. சூப்பர். இலங்கை பெண்ணாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதைக்கு ஏற்ற பொருத்தம்.
அரவிந்த்சாமிக்கு கள்ளக்காதலியாக வரும் அதிதிராவ், அழகாக வந்து செல்கிறார். ஜோதிகா, அதிதிராவ் சந்திக்கும் காட்சிகளில் டயலாக் கச்சிதம்.
படத்தின் டயலாக் வரிகள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருந்தது.
படத்தில் மல்டி கதாபாத்திரங்கள் எட்டிப் பார்ப்பதால், ஒருவரை ஏற்றி, ஒருவரை இறக்கி என்ற பேச்சுக்கே இடமில்லை. அனைத்து கதாபாத்திரத்தையும் கதை அறிந்து கச்சிதமாக நூல் பிடித்தாற்போல் இயக்கியிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். சிறிய சறுக்கல் எட்டிப்பார்த்தாலும், மீண்டும் தான் ராஜாதான் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர்.
பாடல்களை விட, படத்தின் மிகப்பெரிய பலமே பின்னனி இசைதான். மாஸான பிஜிஎம் (BGM), மீண்டும் மீண்டும் கேட்கதூண்டுகிறது.
சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு படத்தின் கலர்புல் காட்சிகளுக்கு வழிவிட்டிருக்கிறது.
செக்கச் சிவந்த வானம் – அழகான இந்த வானத்தை ரசிக்கலாம்…




