
இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி, யோகிபாபு, பப்லு ப்ரித்விராஜ், திவ்யா, அவினாஷ், ராஜ்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி திரைக்கு வந்திருக்கும் படம் தான் ”ஏஸ்”.
படத்தின் பாடலுக்கு இசையமைத்திருக்கிறார் ஜஸ்டின் பிரபாகர் மற்றும் பின்னணி இசையமைத்திருக்கிறார் சாம் சி எஸ்.
ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கரண் பி ராவத். படத்தினை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார் ஆறுமுக குமார்.
கதைக்குள் சென்று விடலாம்…
தமிழகத்தில் இருந்த தனது அடையாளத்தை அழித்து விட்டு, தனக்கு புதிதாக ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு மலேசியா செல்கிறார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதியை தனக்கு அறிமுகமான பெண்ணான திவ்யாவின் ஹோட்டலில் வேலைக்கு சேர்த்துவிடுகிறார் யோகிபாபு. தான் குடியிருக்கும் வீட்டிற்கு அருகிலேயே ஒரு வீட்டில் தங்கியிருப்பவர் நாயகி ருக்மணி.
இவரை கண்டதும் காதலில் விழுகிறார் விஜய் சேதுபதி. காதலிக்கு பணம் தேவைப்பட, அதற்காக ஏஸ் என்கிற சீட்டு சூதாட்ட விளையாட்டை விளையாடச் செல்கிறார். அங்கு ரெளடி அவினாஷிடம் சிக்கிக் கொள்ள, அவரிடம் கடன் படுகிறார் விஜய் சேதுபதி.
அவினாஷிடம் கடனை அடைக்க வேண்டும் நாயகிக்கு பணப் பிரச்சனையை சரி செய்ய வேண்டும். பணத்திற்காக நாயகன் விஜய் சேதுபதி என்ன செய்கிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.

வழக்கம் போல் நாயகன் விஜய் சேதுபதி கதைக்கேற்ற நாயகனாக ஜொலித்திருக்கிறார். யோகிபாபுவுடனான காமெடி, ருக்மணி உடனான காதல் மற்றும் ஆக்ஷன் என தனது நடிப்பின் திறனை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி. அதிலும் விஜய் சேதுபதியின் காமெடி அரட்டைகள் படத்தில் நன்றாகவே வொர்க் – அவுட் ஆகியுள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு படம் முழுவதிலும் யோகிபாபு வருவது மகிழ்ச்சி தான். இவரது டைமிங் காமெடி படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. யோகிபாபுவால் விஜய் சேதுபதி அடிக்கடி சிக்கிக் கொள்வது ரசிக்க வைத்தது.
படத்தில் அழகு தேவதையாக வருகிறார் நாயகி ருக்மணி. படத்தில் வந்து செல்லும் கதாபாத்திரமாக இல்லாமல், கதையின் முக்கிய புள்ளியாக இருக்கிறார் ருக்மணி. இவருக்கும் விஜய் சேதுபதிக்குமான காதல் இளசுகளுக்கு எனர்ஜியை கொடுக்கும்.
வில்லனான பப்லுவை இன்னும் கொஞ்சம் அதிகமாக பயன்படுத்தியிருக்கலாமோ என்ற எண்ணம் எழுந்தது. வில்லத்தனத்தை கச்சிதமாக செய்துவிட்டார் அவினாஷ்.
இரண்டாவது ஹீரோயினாக கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் நாயகி திவ்யா.
மிக எளிதாக வந்து வங்கி பணத்தைக் கொள்ளையடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காட்சிகளில் சற்று சீரியஸ்னஸ் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம். கொள்ளையடித்த பணத்தை வீட்டில் பல நாட்கள் விரித்து வைத்திருப்பது.? விஜய் சேதுபதி கொள்ளையடிப்பதை போலீஸார் ஒரு கேமராவில் மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பது.?? க்ளைமாக்ஸ் காட்சியில் எவ்ளோ நேரம் கார் டிராபிக்கில் சிக்கும் என்பதை விஜய் சேதுபதி எப்படி அறிந்தார்.? உள்ளிட்ட பல லாஜிக் ஓட்டைகள் படத்தில் எட்டிப் பார்த்தாலும், இரண்டரை மணி நேரம் மலேசியாவின் அழகை ரசிப்பதற்காகவே இப்படத்தை நிச்சயம் பார்க்கலாம்.
இதுவரை யாரும் காட்டிராத ஒரு கோணத்தில் மலேசியாவின் அழகை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
ஜஸ்டின் பிரபாகர் இசையில் பாடல்கள் ரகமாக இருந்தது. கதைக்கேற்ற பின்னணி இசையை கொடுத்திருந்திருக்கலாம். அதை விடுத்து கதை ஒரு பக்கம் செல்ல பின்னணி இசை வேறு யாருக்கோ ஓடுவது போன்று இரைச்சலை அதிகமாகவே கொடுத்துவிட்டார் சாம் சி எஸ்.
விஜய் சேதுபதி – யோகிபாபு இருவரின் காமெடி கலாட்டாக்களுக்காகவே நிச்சயம் ஒருமுறை குடும்பத்தோடு விசிட் அடித்து விட்டு வரலாம்.





