
சென்னையில் தனது நண்பர் சூரியுடன் இணைந்து சினிமாவில் நடிப்பு தேடி அலைகிறார் நாயகன் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதியின் ஹீரோயிசத்தைக் கண்டு வழக்கம்போல் மிகப்பெரும் கோடீஸ்வரரின் மகளாக வரும் ராஷி கண்ணா விஜய் சேதுபதி மீது காதல் வயப்படுகிறார்.
விஜய் சேதுபதியும் ராஷி கண்ணா மீது காதல் கொள்ள, ராஷி கண்ணாவின் அப்பாவை காண செல்கிறார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதியை பார்த்த நொடியில் மிகவும் அதிர்ச்சியாகிறார் ராஷி கண்ணாவின் தந்தை.
ஏன்.? எதற்கு.?? அதன் பின் என்ன நடந்தது..?? என்பது படத்தின் மீதிக் கதை..
எப்போதும் போல தனது வழக்கமான பாணியில் பஞ்ச் டயலாக், காமெடி, ஆக்ஷன் என அனைத்தையும் பக்காவாக செய்து முடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. சூரியை விட விஜய் சேதுபதியே காமெடி நல்லா செய்திருக்கிறார். வழக்கம் போல் சூரி காமெடி என்ற பெயரில் அனைவரையும் கருணை கொலை செய்கிறார்.
வழக்கமான மசாலா படத்திற்கு தேவையான நாயகனை சுற்றி வருவது, பாடல்களில் கவர்ச்சி என தனக்கு கொடுத்த வேலையை செய்து முடித்திருக்கிறார்கள் நாயகிகள் ராஷிகண்ணாவும் நிவேதா பெத்துராஜ்ஜும்.
வேல் ராஜ்ஜின் ஒளிப்பதிவு அனல் அரசுவின் சண்டைக் காட்சிகளே மட்டுமே படத்தை பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தருகிறது.
படத்திற்கு பெரும் வேகத்தடையாக இருந்தது விவேக் – மெர்வின் பாடல்கள் மற்றும் பின்னனி இசை தான். காதை பதம் பார்த்து விட்டது.
ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர் சற்று திரைக்கதையிலும் தன் கவனத்தை செலுத்தியிருந்தால் குடும்பங்கள் கொண்டாடும் படமாக நிச்சயமாக கொண்டாடியிருக்கலாம்.
சங்கத்தமிழன் – ஆக்ஷன் சூப்பரு, கதை சுமாரு.





