Spotlightவிமர்சனங்கள்

கே ஜி எஃப் 2 – விமர்சனம்  4/5

ஷ் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சுமார் மூன்று வருடங்களுக்கு முன் வெளிவந்த உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படம் தான் “கே ஜி எஃப்”. மிகப்பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட படைப்பான இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதன் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் மட்டுமல்லாது பலரும் காத்திருந்த நிலையில், இன்று உலகம் முழுவதும் சில ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் பல மொழிகளில் இப்படம் வெளியாகியிருக்கிறது. முதல் பாகத்தில் இருந்த பாசம், காதல், வீரம், துரோகம் என அனைத்திற்குமான படமாக இரண்டாம் பாகம் இருக்குமா.? பார்த்து விடலாம்.

கதைப்படி, 

கே ஜி எஃப் முதல் பாகத்தின் தொடக்கமாக இரண்டாம் பாகம் ஆரம்பிக்கிறது. கே ஜி எஃப் கோட்டையை அடைய நினைக்கிறது சில புல்லுருவிகள். அவர்களுக்கு தெரியவில்லை கே ஜி எஃப்-க்குள் நுழைந்திருப்பது கழுகு என்று.

தன்னை சுற்றியிருக்கும் வானரங்களின் தாக்குதலில் பிடிபடாமல் தனி ஒரு ராஜாவாக கே ஜி எஃப்-ஐ ஆள்கிறார் நாயகன் யஷ்.

கே ஜி எஃப்-ஐ உருவாக்கிய அதிரா (சஞ்சய் தத்) ஒரு பக்கம்,

தனி ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கும் யஷ்ஷின் கோட்டையை அழிக்க நினைக்கும் பிரதமர் ரவீணா ஒரு பக்கம்.

இவர்களின் பிடியில் யஷ் சிக்கினாரா இல்லையா ? துரோகத்தை எப்படி எதிர் கொண்டார்.? கே ஜி எஃப் என்ன ஆனது என்பதே இரண்டாம் பாகத்தின் மீதிக் கதை.

நாயகன் யஷ், முழு படத்தையும் தனி ஒருவனாக தன் தோள் மீது சுமந்து செல்கிறார். கன்னட நடிகர் என்று ஒரு இடத்திலும் சொல்வதற்கு இடமில்லை. தமிழ் நடிகருக்கு உண்டான மாஸ், வசன உச்சரிப்பு என அனைத்திலும் அசத்தியிருக்கிறார்.

ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என தோன்றும் காட்சிகள் அனைத்திலும் சிக்ஸர் அடித்திருக்கிறார். இப்படி ஒரு ஆக்‌ஷன் இந்திய  சினிமாவில் யாராவது எடுக்க முடியுமா.? எடுத்தாலும் கேஜிஎஃப் படத்தோடு ஒப்பிட முடியுமா .? என்று தான் கேள்வி எழுகிறது. இரண்டாம் பாகத்தில் பல இடங்களில் தனது மிரட்டலான ஆக்‌ஷன் கலந்த நடிப்பை கொடுத்து அசரடித்திருக்கிறார் யஷ்.

பல வருடங்களுக்குப் பிறகு ரீ- எண்ட்ரி கொடுத்திருக்கும் ஆக்‌ஷன் கிங் மேக்கர் சஞ்சய் தத், இப்படத்தில் ஒரு வித்தியாசமான நடிப்பை கொடுத்திருக்கிறார். தனது முரட்டுத்தனமான தோற்றத்தில் அனைவரையும் மிரள வைத்திருக்கிறார். நாயகி ஸ்ரீநிதி கே ஜி எஃப் முதல் பாகத்தில் என்னவொரு நடிப்பைக் கொடுத்தாரோ அதே நடிப்பை இரண்டாம் பாகத்திலும் கொடுத்திருக்கிறார்.

கம்பீரமாய் எழ வைக்கிறது ரவீணாவின் நடிப்பு. தனது அனுபவ நடிப்பை கொடுத்து அனைவரின் பாராட்டையும் பெறுகிறார்.

ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். புவன் கவுடாவின் ஒளிப்பதிவு ஒவ்வொரு சண்டைக் காட்சியிலும் நம்மை மிரள வைத்திருக்கிறது. பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவின் மெனக்கெடல் கண்முன்னே நன்றாகவே தெரிகிறது.

ரவி பஸ்ரூரின் இசை, சொல்லவே தேவையில்லை.. பின்னணி இசையை திரையரங்கில் கேட்கும் போது நம்மை அறியாமலேயே நமக்குள் ஒரு வெறி ஏற்றும் இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர். செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என இரண்டையும் பிரித்து தனது முழு உழைப்பையும் கொடுத்து அதில் வெற்றி கண்டிருக்கிறார் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்.

அசோக் அவர்களின் தமிழ் வசனங்கள் படத்திற்கு பெரிதும் கை கொடுத்துள்ளன. இயக்குனர் பிரசாந்த் நீல் அவர்களின் கதை மற்றும் திரைக்கதை நகர்வு படத்தை எந்த இடத்திலும் தொய்வடைய வைக்கவில்லை. முதல் பாதியை விட இரண்டாம் பாதியை அசுர வேகத்தில் பயணமடைய வைதிருக்கிறார் இயக்குனர்.

மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட படமாக வெளிவந்துள்ள கே ஜி எஃப் 2 தனது அடுத்த பாகத்திற்கும் அடித்தளம் இட்டுச் சென்றிருக்கிறது.

கே ஜி எஃப் 2 – ராக்கியின் அசுர வேட்டையை மிஸ் பண்ணிடாதீங்க (தியேட்டர்ல மட்டும் பாருங்க)

Facebook Comments

Related Articles

Back to top button