திண்டிவனம் அருகிலுள்ள கோவில் ஒன்றில் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்பவர்கள் ஹீரோ கிஷோரும் தம்பி ராமையாவும்.. அமைதியே உருவாக இருக்கும் கிஷோரை கோவிலில் பூக்கடை வைத்திருக்கும் சிரா ஸ்ரீ மற்றும் நித்யா ஷெட்டி இருவரும் போட்டி போட்டுக்கொண்டு காதலிக்கிறார்கள்.. நள்ளிரவில் கோவிலில் காவலுக்காக படுத்திருக்கும் கிஷோரும் தம்பி ராமையாவும் தினசரி கொலுசு சத்தம் கேட்பது உணர்கிறார்கள்.
அதேபோல அருகில் உள்ள அனாதை ஆசிரமத்தில் சில அசாதாரண நிகழ்வுகள் நடப்பதையும் கிஷோர் உணர்கிறார். இந்த நிலையில் கிஷோரின் நண்பரானன் தொல்பொருள் ஆராய்ச்சி மாணவர் நரேன் என்பவரை ஒரு கும்பல் குறிவைத்து தேடுகிறது.. அவரது காதல் மனைவி திடீரென காணாமல் போகிறார்.
இதற்கும் கோவிலில் மற்றும் அனாதை ஆசிரமத்தில் நிகழும் நிகழ்வுகளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என நாம் நினைக்கும் வேளையில் நாயகன் கிஷோர் திடீரென ஒரு அதிரடி அவதாரம் எடுக்கிறார்.. அதன் பின்னணியில் பல உண்மைகள் வெளிப்படுகின்றன.. அவை என்ன என்பதுதான் மீதிக்கதை.
இது என்ன ‘அகவன்’ என டைட்டிலே தூய தமிழ் பெயராக இருக்கிறதே, படமும் எப்படி இருக்குமோ என நினைத்து உள்ளே நுழைபவர்களுக்கு முதல் கால்மணி நேரம் படம் ரொம்ப சாதாரணமாகவே இருக்கும்.. ஆனால் அதன்பின் கதையோட்டத்தில் விறுவிறுப்பை கூட்டி மொத்தம் இரண்டே முக்கால் மணி நேரமும் படத்துடனே நம்மை ஒன்ற வைத்து விடுகிறார்கள். இது ரசிகர்களே எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சி.
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இல்லை என்றாலும் மேக்கிங்கிலும் திரைக்கதையிலும் சுவாரசியம் புகுத்தியிருக்கிறார்கள். கதாநாயகனுக்கு உண்டான இலக்கணங்கள் இருக்கிறதா இல்லையா என்கிற கேள்வியை தாண்டி இந்த கதைக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார் நாயகன் கிஷோர். இவரே படத்தின் தயாரிப்பாளர் என்றாலும் எந்த இடத்திலும் ஒரு ஹீரோவுக்கான பில்டப், குத்துப்பாட்டு, காதல் பாடல்களும், அதிரடி சண்டைக்காட்சிகளும் என இல்லாமல் படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ற மிகையில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார் கிஷோர். இதேபோன்று சில கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் ரசிகர்கள் மனதில் மட்டுமல்ல பெரிய இயக்குனர்களின் மனதிலும் இவர் முகம் பதிய வாய்ப்பு உண்டு
ஹீரோவை போலவே யதார்த்தமான கிராமத்து முகங்களாக தங்கள் துறுதுறு நடிப்பால் நம்மை கவருகிறார்கள் சிராஸ்ரீ மட்டும் நித்யா ஷெட்டி இருவரும். படத்தை கலகலப்பாக நகர்தத்துவதற்கு தம்பி ராமையாவின் காமெடியும் ஓரளவு கை கொடுத்திருக்கிறது. போலீஸ் அதிகாரியாக வரும் சரண்ராஜ் மற்றும் வில்லன் ஆகியோரின் கதாபாத்திர திருப்பங்கள் படத்தின் விறுவிறுப்பை சேர்க்கின்றன
தொல்லியல் துறை தொடர்பான மிகப்பெரிய ஆச்சரியங்களை தங்கள் ஆராய்ச்சிகள் மூலம் இந்த படத்தில் மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளதற்காக படக்குழுவினருக்கும் பாராட்டுகளை தெரிவித்த ஆகவேண்டும். குறிப்பாக கோவில்கள் ஏன் உருவாக்கப்பட்டன என்பதற்கான காரண காரியங்களை அழகாக அலசி இருக்கிறது இந்தப்படம். பழனியப்பனின் ஒளிப்பதிவும் சத்யாவின் இசையும் இந்த படத்தை மிகப்பெரிய படமாக நம் மனதில் பதிய வைக்கின்றன. படத்தொகுப்பாளர் எல்விகேதாசன் மற்றும் நிர்மல் இருவரும் படத்தின் விறுவிறுப்புக்கு துணை நிற்கிறார்கள்.
இயக்குனர் ஏவிஜி ஏழுமலை ஒரு அருமையான கதையை எடுத்துக்கொண்டு அதை விறுவிறுப்பு குறையாமல் படமாக்கியிருக்கிறார். நீளத்தை இன்னும் இருபது நிமிடங்கள் குறைத்து கிரிப்பாக நகர்த்தியிருந்தால் படத்திற்கு அது இன்னும் கூடுதல் பலமாக இருந்திருக்கும். நம்பி படம் பார்க்க செல்பவர்களை இந்த படம் நிச்சயம் ஏமாற்றாது.