
அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், கௌதம் கார்த்திக், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள ‘அன்பில் அவன்’ படத்தின் கதையை ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோருடன் சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கோவிந்த் வசந்தா இசையமைக்க, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கே. செல்வா படத்தொகுப்பையும், மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர். சண்டைக் காட்சிகளை பீட்டர் ஹெய்ன் வடிவமைத்துள்ளார்.
ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணாமூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் ராசி சிதம்பரம் வெளியிடுகிறார்.
ஹேப்பி ஹை பிக்சர்ஸ் தயாரிப்பாளர் அபிநயா பேசுகையில், ‘அன்பில் அவன்’ திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்ததற்கான முக்கிய காரணமே அதன் கதைதான் என்றார்.
கதையின் தரம் தங்களை மிகவும் கவர்ந்ததாகவும், அதற்கு ஏற்ற திறமையான குழுவும் அமைந்ததாகவும் தெரிவித்தார். அசோக் செல்வன் தனக்கு சகோதரர் மட்டுமல்ல, நல்ல நண்பரும் கூட என்று குறிப்பிட்ட அவர், அன்பான தம்பதிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அதிலிருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதையும் படம் பேசுவதாக தெரிவித்தார்.
நடிகர் கௌதம் கார்த்திக் பேசுகையில், படத்தின் டிரெய்லர் மற்றும் டீசர் தன்னை மிகவும் கவர்ந்ததாகத் தெரிவித்தார்.
அசோக் செல்வனை தனது நெருங்கிய நண்பர் என்று குறிப்பிட்ட அவர், “கனவுக் காதலன் என்று சொல்வது போல அசோக் செல்வனை கனவு நண்பன் என்று சொல்லலாம்” என்றார்.
‘அன்பில் அவன்’ படத்தில் ஒரு தனித்துவமான மேஜிக் இருப்பதாகவும், அதன் ஒலி வடிவமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
திங்க் மியூசிக் சார்பில் சந்தோஷ் பேசுகையில், அசோக் செல்வனின் ஆரம்பகால படங்களில் இருந்தே அவருடன் இணைந்து பணியாற்றி வருவதாகக் கூறினார்.
கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள படத்தின் பாடல்களில் ‘ஆசை வரமே’, ‘கல்லா நிக்கிறியே’ உள்ளிட்டவை வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கூறிய அவர், படத்தின் கிளைமாக்ஸ் எதிர்பாராத விதமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
படத்தொகுப்பாளர் ஆர்.கே. செல்வா பேசுகையில், இது இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட கதை என்றும், அசோக் செல்வனுக்கு இணையாக ப்ரீத்தி முகுந்தனுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விக்னேஷ் ராஜா கதையை சிறப்பாக எழுதியிருப்பதாகவும், முதலில் மூன்று பாடல்களாக திட்டமிடப்பட்ட படம் பின்னர் ஆறு பாடல்களைக் கொண்டதாக மாறியதாகவும் அவர் கூறினார்.
நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசுகையில், அசோக் செல்வன் தொடர்ந்து பல்வேறு கதைகளைத் தேர்வு செய்து தனது திரைப்பயணத்தை முன்னெடுத்து வருவதாக பாராட்டினார்.
படத்தின் சண்டைக் காட்சிக்காக அசோக் செல்வன் 70 அடி உயரத்திலிருந்து குதித்ததாகக் கூறப்பட்டதை குறிப்பிட்ட அவர், அவரது துணிச்சலை பாராட்டினார்.
ப்ரீத்தி முகுந்தன் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசுகையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் மிகவும் ரசித்து பணியாற்றிய திரைப்படங்களில் ‘அன்பில் அவன்’ முக்கியமானது என்றார்.
படத்தில் பல திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றியுள்ளதாகவும், நம்பிக்கை அளிக்கும் தரத்தில் படம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
‘போர் தொழில்’ இயக்குநரும் ‘அன்பில் அவன்’ படத்தின் கதாசிரியருமான விக்னேஷ் ராஜா, இந்தக் கதை உருவான பின்னணியை விழாவில் பகிர்ந்தார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு கார்ப்பரேட் படப்பிடிப்பிற்காக வட இந்தியாவில் பயணித்தபோது நடந்த ஒரு சம்பவமே இந்தக் கதைக்கான முதல் விதையாக அமைந்ததாகக் கூறினார்.
கனவு கண்ட வாழ்க்கையை வாழ நினைக்கும் ஒரு தம்பதி எதிர்பாராத சிக்கல்களில் சிக்கிய பிறகு அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் படத்தின் மையம் என்றும் தெரிவித்தார்.
அசோக் செல்வனுடன் தனக்கு சுமார் 15 ஆண்டுகளாக நட்பு இருப்பதாகவும், தான் கற்பனை செய்ததைவிட படம் சிறப்பாக உருவாகியிருப்பதாகவும் விக்னேஷ் ராஜா கூறினார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சபுமோன், தமிழ் சினிமா மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் மீது தனக்கு எப்போதும் விருப்பம் இருப்பதாக தெரிவித்தார்.
படப்பிடிப்பில் கடுமையான சூழ்நிலைகளில் பணியாற்றியதாக நகைச்சுவையுடன் பகிர்ந்த அவர், படத்தைப் பார்த்தபோது அந்த சிரமங்கள் அனைத்தும் மறந்துவிட்டதாகக் கூறினார்.
இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் தனக்கு நெருக்கமான நண்பர்களும் கிடைத்துள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் பேசுகையில், ‘அன்பில் அவன்’ தனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம் என்றார்.
தனது 34 ஆண்டுகால திரைப்பயணத்தில் இந்தப் படத்தில் பணியாற்றியதைப் போன்ற குடும்ப உணர்வு இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை என்று கூறிய அவர், படத்திற்காக தொடர்ந்து 45 நாட்கள் ஒதுக்கியதாகவும் தெரிவித்தார்.
அசோக் செல்வன் தனக்கு சகோதரர் போல மாறிவிட்டதாகவும், படத்தின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களுக்கு எதிர்பாராத அனுபவமாக இருக்கும் என்றும் பீட்டர் ஹெய்ன் கூறினார்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ‘அன்பில் அவன்’ படத்தின் அடிப்படை அம்சங்கள் வலுவாக இருப்பதாகத் தெரிவித்தார். குறிப்பாக பீட்டர் ஹெய்னின் சண்டைக் காட்சிகளும் கோவிந்த் வசந்தாவின் இசையும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளதாகக் கூறினார்.
அசோக் செல்வன் சினிமாவை நேசித்து, மதித்து பணியாற்றக்கூடியவர் என்றும் அவர் பாராட்டினார்.
இயக்குநர் ஆர். கார்த்திகேயன் பேசுகையில், படத்தின் மீது தனக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.
அசோக் செல்வனை கடந்த பத்து ஆண்டுகளாகத் தெரியும் என்றும், அவருடன் பல்வேறு திரைப்பட முயற்சிகள் தொடங்கி பின்னர் நிறைவேறாமல் போன அனுபவங்களுக்குப் பிறகு ‘அன்பில் அவன்’ உருவாகியுள்ளதாகவும் கூறினார்.
இந்தப் படத்தின் உருவாக்கத்தில் அசோக் செல்வன் ஒரு உதவி இயக்குநரைப் போலவே ஈடுபாட்டுடன் செயல்பட்டதாகவும் பாராட்டினார்.
பீட்டர் ஹெய்னின் பங்களிப்பைப் பற்றிப் பேசிய கார்த்திகேயன், படத்தின் கடைசி 30 நிமிடங்களில் அவரது ஆக்ஷன் வடிவமைப்பு முக்கியமானதாக இருக்கும் என்றார்.
கோவிந்த் வசந்தாவின் இசை மற்றும் அவரது இசையமைக்கும் விதத்தையும் பாராட்டிய இயக்குநர், ப்ரீத்தி முகுந்தனை “நட்சத்திரம் மட்டுமல்ல; நடிப்புக் கலைஞர்” என்று குறிப்பிட்டார்.
நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில், தயாரிப்பாளர் அபிநயாவை ஒரு ‘Powerhouse’ என்று பாராட்டினார்.
அசோக் செல்வன் மற்றும் அபிநயா தன்னை அவர்களது குடும்பத்தில் ஒருவரைப் போல இணைத்துக்கொண்டதாகக் கூறிய அவர், இந்தப் படம் தனக்கு மிகவும் முக்கியமான நடிப்பு அனுபவத்தை வழங்கியதாக தெரிவித்தார்.
அசோக் செல்வனுடன் பணியாற்றியது அற்புதமான பயணம் என்றும், தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்த அவரும் இயக்குநர் கார்த்திகேயனும் பெரும் ஆதரவு வழங்கியதாகவும் கூறினார்.
கோவிந்த் வசந்தாவின் இசைக்கு தான் மிகப்பெரிய ரசிகை என்றும், பீட்டர் ஹெய்ன் இயக்கத்தில் சண்டைக் காட்சிகளில் நடித்தது பெருமையான அனுபவம் என்றும் ப்ரீத்தி தெரிவித்தார்.
விழாவில் பேசிய அசோக் செல்வன், தான் நடித்து படம் வெளியாகி சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் கூறினார்.
சினிமாவில் ஒரு திரைப்படம் என்பது வெறுமனே செய்து முடித்துவிட்டு செல்வதற்கான விஷயம் அல்ல என்றும், மக்களிடம் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே கதைகளைத் தேர்வு செய்வதாகவும் தெரிவித்தார்.
“ஒரு படத்தின் போஸ்டரில் என்னுடைய பெயர் இருந்தால், அதில் என்னுடைய 100 சதவீத உழைப்பு இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.”
‘அன்பில் அவன்’ படத்திற்காக தனது சகோதரியும் தயாரிப்பாளருமான அபிநயா மேற்கொண்ட முயற்சிகளை நினைவுகூர்ந்த அசோக் செல்வன், படத்தின் பட்ஜெட் அதிகரித்தபோது தனது கனவுக்கு பெற்றோர் முழுமையான ஆதரவு வழங்கியதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பீட்டர் ஹெய்னின் பங்களிப்பு படத்தை இன்னும் பெரிய அளவிற்கு எடுத்துச் சென்றதாகவும், ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரன் சிறப்பான காட்சிகளை வழங்கியுள்ளதாகவும் பாராட்டினார்.
ப்ரீத்தி முகுந்தனைப் பற்றிப் பேசும்போது, அவர் எதிர்காலத்தில் மேலும் உயரம் செல்வார் என்ற நம்பிக்கையை அசோக் செல்வன் வெளிப்படுத்தினார்.
“இதை உலகின் சிறந்த படம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் ரசிகர்களுக்கு ஒரு நல்ல திரையரங்க அனுபவமாக இருக்கும்,” என்று அசோக் செல்வன் தெரிவித்தார்.
காதல், உறவு, ஆக்ஷன் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’, செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
விக்னேஷ் ராஜாவின் கதை, ஆர். கார்த்திகேயனின் இயக்கம், கோவிந்த் வசந்தாவின் இசை மற்றும் பீட்டர் ஹெய்னின் ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் எதிர்நோக்கியுள்ளனர்.





