
ஜியோ ஸ்டுடியோஸ் வழங்க, சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், முத்துப்பாண்டி, செளந்தரராஜன், ஜீவா, முத்துக்குமார், கலை இயக்குநர் குமார், படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா, சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு படம் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தான் பிறந்து வளர்ந்த மதுரை மண்ணே சினிமா மீது ஆர்வம் ஏற்பட முக்கிய காரணம் என்று தெரிவித்தார். தனது படங்களில் ‘இறைவி’ மிகவும் பிடித்த படம் என பலரும் கூறுவதற்கு, அது மனித உணர்வுகளுடன் நெருக்கமாக இருப்பதே காரணம் என்றார்.
அதனைத் தொடர்ந்து, ‘இறைவி’யை விட ‘டோரதி’ அதிக உணர்வுபூர்வமான கதை என்றும், படம் தொடங்கியதிலிருந்து அனைத்தும் ஒரு மேஜிக் போல அமைந்ததாகவும் கூறினார்.
மேலும், இளையராஜாவின் இசையை கேட்டு வளர்ந்த தங்களுக்கு, அவரது இசை இந்தப் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம் என்றும் தெரிவித்தார். ‘டோரதி’ படத்தின் ஆன்மாவாக இளையராஜாவின் இசை இருப்பதாகவும் கார்த்திக் சுப்புராஜ் குறிப்பிட்டார்.
சனந்த் திறமையான நடிகர் என்றும், ரிஷிகாந்தை ஆடிஷன் மூலமாக தேர்வு செய்ததாகவும் கூறிய கார்த்திக் சுப்புராஜ், இருவரும் நிஜ வாழ்க்கையிலும் நண்பர்கள் என்பதால் அவர்களது கெமிஸ்ட்ரி திரையில் சிறப்பாக வந்திருப்பதாக தெரிவித்தார்.
கதை கேட்டதும் கீர்த்தி சுரேஷ் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், அவரது திரையிருப்பு படத்திற்கு கூடுதல் மதிப்பை கொடுத்துள்ளதாகவும் கூறிய அவர், ‘டோரதி’ தனது 10வது திரைப்படம் என்பதையும் பகிர்ந்து கொண்டார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் பேசுகையில், ‘டோரதி’ படத்தின் கதையை படித்ததும் உடனடியாக நடிக்க சம்மதித்ததாக தெரிவித்தார். இதுபோன்ற ஒரு திரைப்படத்தில் நடிப்பது தனக்குப் பெருமை என்றும் கூறினார்.
கார்த்திக் சுப்புராஜுடன் சில நாட்களே பணியாற்றியிருந்தாலும் அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டதாகவும், இளையராஜாவின் இசையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தனது கனவு நனவான தருணம் என்றும் தெரிவித்தார்.
ரிஷிகாந்த் மற்றும் சனந்துடன் குறைந்த நாட்களே பணியாற்றியிருந்தாலும் அவர்களுடன் நல்ல நட்பு உருவானதாகக் கூறிய கீர்த்தி சுரேஷ், செப்டம்பர் 25 அன்று வெளியாகும் ‘டோரதி’ உலகளவில் பேசப்படும் படமாக அமையும் என்ற நம்பிக்கையையும் பகிர்ந்து கொண்டார்.
நடிகர் சனந்த் பேசுகையில், டொரன்டோ ஃபிலிம் பெஸ்டிவலில் படத்தை பார்த்த பலரும் தன்னை பாராட்டி கட்டிப்பிடித்தது தனது வாழ்வின் சிறப்பான தருணங்களில் ஒன்று என்றார்.
‘டோரதி’ படக்குழுவினர் அனைவருக்கும் மிகவும் ஸ்பெஷலான திரைப்படம் என்றும், வெளியீட்டுக்குப் பிறகு ரசிகர்களுக்கும் அப்படியே இருக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
கார்த்திக் சுப்புராஜுடன் பணியாற்றியது மீண்டும் ஷார்ட் ஃபிலிம் காலத்திற்குச் சென்றது போன்ற உணர்வை கொடுத்ததாக கூறிய சனந்த், இளையராஜாவின் இசையில் நடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
நடிகர் ரிஷிகாந்த் பேசுகையில், தன்னை நம்பி வாய்ப்பு வழங்கிய கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி தெரிவித்தார். ‘டோரதி’ படத்திற்காக மதுரையில் இரண்டு மாதங்கள் பயிற்சி மேற்கொண்டதாகவும் கூறினார்.
படத்தில் தங்களது நடிப்பிற்கு பாராட்டு கிடைத்தால் அதன் பெருமை முழுவதும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜையே சாரும் என்று தெரிவித்த அவர், சனந்தும் தானும் பல வருடங்களாக நண்பர்கள் என்பதால் இருவரும் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் கூறினார்.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசுகையில், ‘டோரதி’ தனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம் என்று தெரிவித்தார்.
கார்த்திக் சுப்புராஜின் இயக்கம் மற்றும் இளையராஜாவின் இசை ஆகியவற்றை நம்பி படத்தை பார்த்ததாகவும், படம் ரசிகர்களின் நினைவில் நிற்கும் என்றும் கூறினார். ‘சுப்ரமணியபுரம்’ போன்ற மதுரை பின்னணியில், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டைலில் உருவாகியுள்ள கொண்டாட்டமான கமர்ஷியல் திரைப்படமாக ‘டோரதி’ இருக்கும் என்றும் தெரிவித்தார்.
ரிஷிகாந்த் – சனந்த் கூட்டணி படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
நடிகை ஜீவா பேசுகையில், தன்னை உலக மேடைக்கு அழைத்துச் சென்ற முதல் படம் ‘டோரதி’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இருந்து டொரன்டோ ஃபிலிம் பெஸ்டிவலுக்கு சென்ற முதல் திருநங்கை தான் என்று தன்னிடம் தெரிவித்தபோது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்ததாக கூறினார். ‘டோரதி’ தனது வாழ்நாள் சாதனையாக இருக்கும் என நம்புவதாகவும், இளையராஜாவின் இசையில் நடித்தது கனவு நனவான தருணம் என்றும் தெரிவித்தார்.
நடிகர் செளந்தரராஜன், கார்த்திக் சுப்புராஜை ஷார்ட் ஃபிலிம் காலத்திலிருந்தே தெரியும் என்றும், மதுரை மற்றும் அந்த மண்ணின் மனிதர்கள் மீது அவருக்கு மிகுந்த நேசம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
கலை இயக்குநர் குமார், திண்டுக்கல் மற்றும் மதுரை பகுதிகளில் படத்திற்கான லொகேஷன்களை தேர்வு செய்ததாகவும், பல சவால்களுக்கு மத்தியில் படக்குழுவினர் கடுமையாக உழைத்ததாகவும் தெரிவித்தார்.
படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா, தான் சினிமாவிற்கு வருவதற்கான முக்கிய காரணங்களில் ‘ஜிகர்தண்டா’ திரைப்படமும் ஒன்று என்றும், கார்த்திக் சுப்புராஜின் படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் என்று கனவில் கூட நினைக்கவில்லை என்றும் கூறினார்.
நடிகர் முத்துக்குமார், இந்திய சினிமாவிற்கு தேவையான ஒரு படமாக ‘டோரதி’ இருக்கும் என்றும், இப்படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருப்பது நிறைவளிப்பதாகவும் தெரிவித்தார்.
நடிகர் முத்துப்பாண்டி, இது தனது முதல் மேடை என்றும், தனக்கு வாய்ப்பு வழங்கிய கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி என்றும் கூறினார்.
கார்த்திக் சுப்புராஜின் 10வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘டோரதி’, இளையராஜாவின் இசையுடன் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.





